சுத்தம் - சிறுகதை

By பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி: கவிஞராக இருந்து, மீடியா செய்தியாளராகி, பிறகு நாவலாசிரியராக பரிணமித்து, அடுத்ததாக சிறுகதைகளில் முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர். இவரின் முதல் நாவல், ‘ஆதலினால் காதலித்தேன்’ தமிழின் பரந்துபட்ட பார்வையைப் பெற்றது. அசலான வாழ்க்கைப் பதிவுகளை யதார்த்தம் குன்றாது புனைவு சூடி படைப்பாக்கும் வித்தை கை வரப்பெற்றவர். வலைப்பூவில் எப்போதாவது பதிவுகளை ஏற்றும் அபியின் இயற்பெயர் அக்பர். அவரின் வலைப்பூவிலிருந்து இந்தச் சிறுகதை.

ஆஸ்துமா நோய் முற்றிப்போனதில், பெருமூச்சு வாங்கிக்கொண்டிருந்த மாமியார் செத்துப் போனதற்காக, பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் பார்த்தசாரதி, காரியமெல்லாம் முடித்து விட்டு, இன்றைக்குத்தான் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அவருக்கு முன்பே வந்திருந்த அலுவலகப் பணியாளர்கள் எழுந்து நின்று, ‘குட்மார்னிங்..’ சொல்லிக் கொண்டிருக்க, ஆமோதிப்பாய் தலையசைத்தபடியே, தனது அறைக்குள் நுழைந்தார். இருக்கையில் அமர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள், சீனியர் கிளார்க் கிருஷ்ணமூர்த்தி அறையின் வாசலில் வந்து நிற்க, நிமிர்ந்து பார்த்தார். “யெஸ் கமின்..”

கையில் சில காகிதக் கற்றைகளுடன் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி, “சார்.. ரெண்டுநாளைக்கு முன்னாடி, ரீஜனல் ஆபிசிலிருந்து வந்த மெயிலோட, பிரிண்ட் அவுட் சார் இது”

“நமக்கு வரவேண்டிய அரியர்ஸ் எல்லாம் கிளீனாயிடுச்சாமா..?”

“இல்லே சார்.. இது..” கிருஷ்ணமூர்த்தி நீட்டிய காகிதங்களை வாங்காமல், தனது மூக்குக் கண்ணாடியைக் கழட்டி சுத்தம் செய்தபடியே கேட்டார், “அதில்லையா.. அப்ப வேறென்ன விஷயம்..? சொல்லுங்க.”

“இந்தியாவை சுத்தமாக்குவோம் திட்டப்படி, நம்ம அலுவலகத்தையும் சுத்தமா ஆக்கணுமாம். வர்ற காந்திஜெயந்தி அன்னிக்கு, நம்ம ஆபிசுலே இன்ஸ்பெக்ஷன் இருந்தாலும் இருக்கும்னு.. சொல்லியிருக்காங்க..”

“வாட்.. அன்னிக்கு சென்ட்ரல் கவர்ண்மென்ட் லீவு ஆச்சேய்யா..”

“ப்ச்.. இந்த முறை லீவு இல்லே சார்..!” கிருஷ்ணமூர்த்தியின் குரலில் ஏக சலிப்பு.

“அந்தப் பேப்பர்ஸைக் கொண்டா..” காகிதக் கற்றையை வாங்கிய பார்த்தசாரதி, அவற்றைப் படிக்கத் துவங்கினார். இரண்டு நிமிடங்களில் தலை நிமிர்ந்தவர், இந்த ஆபீசுலே சுத்தத்துக்கு இப்ப என்ன கேடு..? எல்லாம் சுத்தமாத்தானே இருக்கு. டெய்லி.. ப்ளோரெல்லாம் கூட்டுறது மொதற்கொண்டு, நம்ம டேபுளெல்லாம் தொடச்சுத்தானே வெச்சிருக்குறோம்.. அப்புறம் என்னத்தை சுத்தம் பண்ணுறதாம்..?”

“இல்லே சார்.. இப்ப எல்லா ரெக்கார்டுகளும் கம்ப்யூட்டர்லே ஃபீட் பண்ணி வெச்சிருக்கறாதாலே, தேவையில்லாத பேப்பர்ஸையெல்லாம் அழிச்சுடணுமாம். ரொம்ப முக்கியமான பைல்கள் மட்டும் ரெக்கார்டு ரூம்லே வெச்சுக்கணுமாம். அதேமாதிரி ரெகார்ட் ரூம், ஸ்டாப் ரூம், டாய்லெட் பாத்ரூம்.. எல்லாத்தையும் கறை, தூசி, குப்பை இல்லாம வெச்சுருக்கணும்னு போட்டிருக்காங்க..! அப்புறம் கண்டமேனிக்கு தொங்கிக்கிட்டுருக்குற வயரையெல்லாம், ஒரே பிவிசி பைப்புக்குள்ளே இருக்குறமாதிரி வயரிங் பண்ணச் சொல்லியிருக்காங்க.., அதுவுமில்லாம டிபார்ட்மென்ட் ஸ்டிக்கருங்களை ஜன்னலு,கதவுன்னு கண்ட இடத்திலே ஒட்டிவெச்சுருந்தா அது எல்லாத்தையும் எடுக்கச் சொல்லியிருக்காங்க சார்..” கிருஷ்ணமூர்த்தி சொல்லச் சொல்ல,அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டுவிட்டு,தனது அறையின் கண்ணாடிக் கதவு வழியாக அலுவலகம் நெடுகிலும் செலுத்திய பார்வையில் கிருஷ்ணமூர்த்தி சொன்னபடிதான் எல்லாமே இருந்தது.

“இதை சரிபண்ணறதுக்கே ரெண்டு நாளு வேணும்போல இருக்கே.., ஆமா.. காந்திஜெயந்தி எப்ப..?”

“இன்னும் ரெண்டுநாள் இருக்கு சார்..!”

“சரி.. இந்த வேலையை எல்லாம் செய்யுற மாதிரி, யாராவது ஒரு ஆளைப் புடிங்க.. நம்ம ஆபீசுலே இருக்கற ஸ்வீப்பர் பொம்பளையையும் சப்போர்ட்டுக்கு வெச்சுட்டு மளமள..ன்னு வேலையை முடிச்சுடுங்க..”

“சரிங்க சார்.. சரிங்க சார்..” எனத் தலையாட்டியபடியே, வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தி, அலுவலகத்தில் உள்ள மொத்த சிப்பந்திகளான கிளார்க், தபால் பிரிப்பவர், தபால்காரர் ஆகியோரிடத்தில் விஷயத்தைக் கூறி, வேலைக்கான ஆள் வேண்டுமென விசாரித்தபோது, விசாரித்து சொல்வதாக, அந்த ஊரில் அவரவருக்கு தெரிந்த ஆட்களிடம் பேச தங்களது செல்போனை எடுத்து பெயர்களை அமுக்கத் துவங்கினர். கிருஷ்ணமூர்த்தியும் தனது போனை எடுத்துக் கொண்டார்.

மாவட்டத் தலைநகரிலிருந்து பத்து கிமீ தள்ளி வளர்ந்து கொண்டிருந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளைக் கொண்டிருந்த ஒரு சிறு நகரத்துக்கான தபால் அலுவலகம் அது. முன்னர் வீடாக இருந்ததை, இப்போது போஸ்ட் ஆபீசுக்காக என சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து, இளைத்துக் கறுத்து, குச்சிகுச்சியான கைகால்களுடன், சராசரிக்கும் அதிகமான உயரத்துடன், மங்கிப்போன அழுக்குவேட்டியும், அதே வண்ணத்திலான துண்டு ஒன்றும் தோளில் கிடக்க, வாசலில் வந்துநின்றார் ஒருவர். பலநாட்களாக மழிக்கப்படாத தாடியில் பழுப்பேறிக் கிடந்தது. நரைத்துப்போன முடியின் அடர்த்தியைப் பார்த்தால், அந்த வயசாளிக்கு, வயது அறுபத்தைந்துக்கும் மேலிருக்கும். வயிறு ஒட்டிப்போயிருந்தது.

தபால்களை வரிசை வாரியாக அடுக்கிக் கொண்டு, டெலிவரிக்காகப் புறப்பட்ட தபால்காரர்தான் முதலில் அவரைப் பார்த்தார். ஏறக்குறைய பிச்சைக்காரன் போன்ற தோற்றம். கண்களில் எதையோ தேடிக்கொண்டே இருக்கின்ற தவிப்பு. என்ன வேணும்..?

யாரோ ஒருவர் இங்கே ஏதோ சுத்தப்படுத்தும் வேலையிருப்பதாகச் சொல்லி, அனுப்பிவைத்ததாக வந்தவர் சொல்லியிருக்கக் கூடும். “சரி.. ஒரு நிமிஷம் நில்லுப்பா.. உள்ளே போய்க் கேட்டுட்டு வந்தர்றேன்”

ஐந்து நிமிடங்களில் கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, அவருக்கும் ‘பொசுக்’கென்று போனது. ‘இந்த ஆளை வைத்துக் கொண்டு, இருக்கும் வேலையெல்லாம் முடிக்க முடியுமா..? அந்த ஸ்வீப்பர் பொம்பளை நீங்க குடுக்குற ஐநூறு ரூபா சம்பளத்துக்கு, ஆபீஸ் கூட்டுவேன் அவ்வளவுதான். எனக்கு சாயங்காலம் நாலு மணி வரைக்கும் நாலு வீட்டுலே வேலை இருக்கு. அதுக்கெல்லாம் லீவும் போடமுடியாது என்கிறாள். நாம, வரச் சொல்லியிருக்கிற எலக்ட்ரீசியனோ அவன் வேலையை மட்டும்தான் பார்ப்பான்.. மற்ற வேலைக்கெல்லாம் இனி ஆள் கிடைக்குமா..? கிருஷ்ணமூர்த்திக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. என்ன செய்யலாம்..’ அவருக்குள் யோசனைகள் வட்டமடித்தன.

‘சரி.. ஒரு வேளை வேற ஆள் யாராவது வந்தா, இந்த ஆளை ஏதாவது கூலி குடுத்து அனுப்பி வெச்சுடலாம்’. அவர் ஒரு முடிவுக்கு வந்தவராக, வந்தவரை உள்ளே அழைத்துச் சென்றார். அவர் செய்ய வேண்டியதையெல்லாம் சொன்னார்.

சரிசரியென்று தலையாட்டியவர், இதுக்கு கூலி என்ன ஆகும்..? என்று கேட்ட கிருஷ்ணமூர்த்தியிடம், “உங்களை நம்பி வந்துட்டேன்.. நீங்களாப் பாத்து நல்ல கூலியா குடுங்கய்யா..! என்றபடியே ஒட்டடை அடிப்பதற்காக துடைப்பத்தை எடுத்துக் கொண்டு, தனது பணியில் இறங்கிவிட்டார்.

தாறுமாறாய் தொங்கிக் கொண்டிருந்த நூலாம்படையை மற்றவர் மீது விழாமல் ஒதுக்கி, துடைப்பத்தாலேயே அதனைச் சுருட்டி கீழே இறக்கி, ஒவ்வொரு அறையின் ஒரு மூலையிலும் வழித்து எடுக்க வசதியாக குவித்துவைத்தார்.

ரெக்கார்டு ரூம், ஸ்டாப் ரூம், கழிப்பறைகள் என எல்லாவற்றிலும், அழுக்கு.. அழுக்கு.. லஞ்சம், ஊழலைப்போல இண்டு இடுக்கு எல்லா இடத்திலேயும் அழுக்கு.., கால் படும் இடத்தில் அழுக்கு, கண்படும் இடத்திலும் அழுக்கு.. எல்லா இடத்திலேயும் அழுக்கு. அலுவலகம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை துடைக்கப்படாத அழுக்கு…, வாரிசு அரசியல் போல வந்து கொண்டேயிருந்த அழுக்கு.., தண்ணீரையும், ஆசிட்டையும் கைகளையும் பயன்படுத்தி அவை எல்லாவற்றையும் சுத்தப்படுத்தினார்.

வேறு எந்த கவனச் சிதறலுமின்றி, தனது பணியைத் தொடர்ந்து அவர் செய்து கொண்டிருந்த வேகத்தில், எடுத்துக் கொண்ட பணியை விரைவில் முடித்துவிட வேண்டும் என்ற அக்கறை தெரிந்தது. அலுவலக அறைகளில் ஊழியர்களின் உணவு இடைவேளை முடிந்துவருவதற்குள் அங்கிருந்த எல்லாவற்றையும் அவர் சுத்தப்படுத்தி விட்டார் .”நீ சாப்பிட்டு விட்டாயா..?” என்று அவரை யாரும் கேட்கவில்லை. தான் பட்டினியாக வேலை செய்து கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லையே என எண்ணி அவரும் கவலைப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவுமில்லை.

மாலை ஆறுமணியாகப் போகிறது. பார்த்தசாரதி, கிருஷ்ணமூர்த்தி தவிர மற்ற ஊழியர்கள் எல்லாம் போய் விட்டிருந்தனர். முகத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை தனது அழுக்குத் துண்டால் துடைத்தபடி வயசாளி, இப்போது வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தார்.

“கிருஷ்ணமூர்த்தி.. ஆர்யபவன்லே காபி வாங்கிட்டு வர்றீங்களா.. சாப்பிடுவோம்..!” பார்த்தசாரதி கேட்க, கிருஷ்ணமூர்த்தி, பிளாஸ்க்கையும், தனது மொபட்டையும் எடுத்துக் கொண்டுபோனார்.

அலுவலகத்தை ஒரு சுற்றுப் பார்த்த பார்த்தசாரதிக்கு, இப்போது திருப்தியாகத்தான் இருந்தது. ‘பரவாயில்லை.. நினைத்த நேரத்தைவிட சுத்தமாகிவிட்டது. இந்த வயசான ஆள்.. பாக்க நோஞ்சான் மாதிரியிருந்தாலும் என்ன வேகமா வேலை செஞ்சு முடிச்சுட்டான்.., இந்த ஆள் வயசுக்கு நாமெல்லாம் இப்படி வேலை செய்ய முடியுமா..?’ அவரின் கை, அனிச்சையாக அவரின் தொப்பையை ஒருமுறை தடவிக் கொண்டது.

கிருஷ்ணமூர்த்தி காபி வாங்கிவந்து விட்டார். கூடவே வடை, பஜ்ஜிகளும சுடச்சுட மணத்தது. அலுவலகத்தில் இருந்த இரண்டு சில்வர் பிளேட்டுகளில் சில பலகாரங்கள், இரண்டு சில்வர் டம்ளர்களில் காபி என தங்களுக்கும், ஒரு காகிதத்தில் சில பலகாரங்கள், முன்கூட்டியே வாங்கிவந்த பிளாஸ்டிக் டம்ளரில் காபி என எடுத்துக்கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்தி, பார்த்தசாரதியின் முன்பாக இருந்த மேசையில் தங்களுக்கானதை வைத்துவிட்டு, வெளியே வந்து, வாசலைக் கூட்டி குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டுக் கொடுத்தார்.

கண்களில் ஆவல் மின்ன வந்து வாங்கிக் கொண்ட அந்த மனிதர், அலுவலக வாசலில் அப்படியே சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினார்.

பின்னர் சற்றுநேரம் நாற்காலிகளில் அமர்ந்தபடி இவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். வயசாளி வேலை செய்து கொண்டிருந்தார்.

“இனி நம்ம ஆபீசுலே இன்ஸ்பெக்ஷன் நடந்தாலும் கவலையில்லே.. அவங்க நெனக்கிறதுக்கு மேலேயே நம்ம ஆபீசு சுத்தமாயிடுச்சு..” என்று ஏதோ பெரிய ஹாஸ்யத்தை சொல்லிவிட்டாற் போல சிரித்துக் கொண்டிருந்தார் பார்த்தசாரதி. சரியான சமயத்தில் சரியான முடிவெடுத்ததின் மூலம் தான் ஏதோ சாதித்துவிட்டதாக அவரின் குரலில் பெருமையும் கூடுதலாகத் தொனித்தது.

“ஆமாம் சார்..” வழக்கம்போல கிருஷ்ணமூர்த்தியின் பின்பாட்டு.

“சார்.. குப்பையெல்லாம் குப்பைத் தொட்டியிலே கொண்டு போய் போட்டுட்டேன். இனி வேற ஏதாவது வேலை இருக்குங்களா..?” வயசாளியின் குரலைத் தொடர்ந்து, வெளியே வந்த இருவரும் வாசலை ஒரு நோட்டம் விட்டனர். காம்பவுண்ட் சுவர் வரை பளிச் சென்று இருந்தது.

ஆகா.. பிரமாதம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட பார்த்தசாரதி, “அவ்வளவுதாம்ப்பா.. இனியெதுவும் வேலை இல்லை. உள்ளே வா.. கூலியை வாங்கிட்டுப் போவியாம்..”

பார்த்தசாரதியின் அறையில், வந்து நின்ற வயசாளியின் கண்களில் பெரிய அளவில் பிரேம் போட்ட, புன்னகைத்துக் கொண்டிருந்த காந்தியின் படம் தென்பட்டது. ‘அடடா.. தூசி நிரம்பிப் படிந்திருக்கின்ற இந்தப்படத்தை, ஒருமுறை துடைத்து வைத்துவிட வேண்டும் என்று, நினைத்து மறந்தே போய்விட்டேனே..!’ படக்கென்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு மேலே ஏறியவர், படத்தை விசுக்கென்று கழட்டிக் கொண்டு கீழிறங்கிவிட்டார்.

கூலித்தொகையை எழுதிக் கையெழுத்து வாங்குவதற்காக, வவுச்சரை எடுத்துக் கொண்டிருந்த பார்த்தசாரதிக்கு, வயசாளி என்ன செய்கிறார் என்று புரிவதற்குள்ளாகவே காந்தியின் படம் அவர் கையில் இருந்தது. சட்டென்று பதட்டமான பார்த்தசாரதி, தனது மேல்துண்டால் காந்திபடத்தை துடைக்க முற்பட்டவரிடமிருந்து, “ஹே.. என்ன பண்றே..” என்று கேட்டபடியே, படத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டார்.

வயசாளி இதனை எதிர்பார்க்கவில்லை. ‘தான் ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ.. என்று தவித்துப் போனார். என்ன தவறு செய்தோம் என்றும் விளங்கவில்லை. “ஏன் சார்.. காந்தி போட்டோவை நான் தொடக் கூடாதா சார்..?”

ஆதங்கம் மிக்க வயசாளியின் குரலுக்கு கைகள் முளைத்து, தனது கழுத்தை இறுக்கிப்பிடிப்பது போல, ஏனோ தோன்றியது பார்த்தசாரதிக்கு. உடனே ஒரு பதட்டமும் தொற்றிக் கொண்டது. “இல்லே.. இல்லே.. நான் அதுக்காகப் புடுங்கலை.. அது வந்து.. அதுவந்து.., பெரிய படம், கண்ணாடியோட இருக்கு.. உங் கையிலே இருந்து எங்கியாவது தவறி விழுந்துடுமோன்னு..”

அடப் போங்க சார், நீங்க வெச்சுருக்கிறதை விட, நாங்க பத்திரமா வெச்சுக்குவோம். இது பாடுபட்டு ஒழைக்கிற கை சார்..!”

வயசாளிக்கு என்ன பதில் சொல்வதென, பார்த்தசாரதி தடுமாறுவது போலத் தோன்றியது கிருஷ்ணமூர்த்திக்கு.

தனது மேசை டிராயரிலிருந்து ஒரு டவலை எடுத்து காந்தி படத்தைத் துடைத்த பார்த்தசாரதி, “இந்தாங்க மேலே ஏறி மாட்டுங்க..” என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்க, அவர் ஏறி அதனை மாட்டிவிட்டுக் கீழே இறங்கினார். அதுவரை அங்கு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. காந்தி இப்போது பளிச்சென சிரித்துக் கொண்டிருந்தார்.

வவுச்சர் புக்கைப் பிரித்து, அதில் ஏதோ எழுதிய பார்த்தசாரதி, “ஏம்ப்பா.. கையெழுத்து போடுவியா..”

“இல்லே சார் கைநாட்டுத்தான்..”

“அப்படியா.. சரி உம்பேர் சொல்லு”

“எம்பேரு சுதந்திரம் சார்..”

பார்த்தசாரதிக்கு அவருடைய பெயர் சரியாகக் கேட்கவில்லை., “ஓ..சுந்தரமா..?”

“இல்லே சார்.. சுதந்திரம்..”, சு..த..ந்..தி..ர..ம்.. எதிர்முனைக் குரலில் ஒவ்வொரு எழுத்தும் சற்று அழுத்தமாக ஒலித்தது போல இருந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் கையிலிருந்த சில நூறு ரூபாய்த் தாள்களின் மொடமொடப்பை ரசித்தபடியே,வீதியில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார் சுதந்திரம்.

மறுநாள் இன்ஷ்பெக்ஷனுக்கு யாரும் எதிர்பாராத வகையில், மத்திய அமைச்சரே வந்துவிட.. பார்த்தசாரதியும், கிருஷ்ணமூர்த்தியும் அலுவலக ஊழியர்கள் புடைசூழ எவ்வித பயமுமின்றி அவர்களை வரவேற்றனர். அவர்கள் எதற்குப் பயப்படவேண்டும். அதுதான் எல்லாம் சுத்தமாக இருக்கிறதே..!

பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சருடன் இணைந்து அனைவரும், சிரிப்பு வழிய வழிய புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இன்றைக்கும் ஏதாவது நமக்கு வேலையிருக்குமா என்ற ஆவலில் சுற்றுச்சுவருக்கு அந்தப்புறமாக நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சுதந்திரம். இன்றைக்கும் அவரது வயிறு ஒட்டிப்போய்த்தான் இருந்தது.

பொள்ளாச்சி அபியின் படைப்புகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE