‘‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’‘

By புதியமாதவி

புதிய மாதவி: நவீன இலக்கிய வெளியில் நீண்டகாலமாக பிரபல்யப்பட்டவர். பெண்ணியம், சமூகம் குறித்த தேடல்களில் அசலான மானுட மாண்பை தன் படைப்பகளில் பகர்பவர். இவரின் வலைப்பூ வெளி அதற்கான அத்தனை மணத்துடன் வாசம் ததும்புகிறது. அப்படியான கவிதைகளில் ஒன்று இங்கே...

புதிய மாதவியின் நூல் முகப்பு

‘‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’‘

கெடுப்பார் இலானும் கெடும்.

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)

அரசனைப் புகழ்ந்துப் பாடி பரிசில் பெற்ற

புலவர்களின் வரிசையில் புதிய ஜனநாயகத்தின்

எச்சங்கள் தொடர்கின்றன.

எழுத்தாளனை சமூகம் ஏன் மதிக்க வேண்டும் என்று

எதிர்ப்பார்க்கிறோம்? அவனும் அவன் எழுத்துகளும்

சமூகத்தின் மனசாட்சியை அசைத்துப் பார்க்கும்

வல்லமை கொண்டது என்று இன்றும் நம்புவதால் மட்டுமே!

ஆனால்

ஜனநாயகம் அதிகாரம் என்ற பெயரால்

அதை விலைபேசி விட முடியும்.

ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக தேவைப்படும்போது

எழுத முடியாத எழுத்து செத்தப் பிணம் தான்.

அதிகாரம் எப்போதும் தனக்கு எதிரான குரல்களை

கிள்ளி எறிவதில் பல்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கிறது.

எந்த ஓர் எழுத்தாளனும் பட்டினியால் செத்துப்போனான்

என்பது எவ்வளவு இழுக்கோ அதை விடக் கேவலமானது

அவனும் அவன் எழுத்துகளும் முடங்கிப்போகும்

அவலம்!

அரசு அதிகாரத்தின் தலையீடு இல்லாமல்

அடிவருடல் இல்லாமல் ஜால்ரா போடாமல்

விருதுகளும் கனவு இல்லங்களும் வசப்படுமா?

இம்மாதிரியான அறிவிப்புகள் வரும்போது

அத்திட்டத்தின் நல்லெண்ணம் நிறைவேற

வேண்டும் என்று விரும்பினாலும்...

அந்த விருப்பம் கனவாக மட்டுமே இருக்கிறது.

அரசு விருதுக்காக விண்ணப்பித்துவிட்டு

அரசு விருது பெற்று

அரசின் கனவு இல்லத்தில் வாழ்ந்து கொண்டு

அரசு அதிகாரத்தின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து

எழுத முடியுமா?

இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட

மக்களுக்கு சமூகம் கொடுக்க வேண்டிய உரிமை

என்பதைக் கூட மறுக்கும் நம் அறிவுசார் சமூகமிது.

தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள் தான் நானும்.

ஆனால் அதற்கு அர்த்தம் பெரியார் விமர்சனத்திற்கு

அப்பாற்பட்டவர் என்பதல்ல.

பெரியாரை விமர்சனப்படுத்தியதற்கு கருத்தியல்

ரீதியாக பதில் சொல்லாமல் அவரில்லை என்றால்

நீ என்னவாகி இருப்பாய்?

நன்றி கெட்டவன் நீ \

என்ற விமர்சனங்களை வைத்த /வைத்துக்கொண்டிருக்கின்ற

சமூகம் நம் சமூகம்.

திட்ட வரைவுகள் இன்னும் செழுமைப்படுத்தப்பட

வேண்டும். அது ஜால்ரா கம்பேனிக்கு குத்தகைக்கு

விட்டதாக இருக்கக் கூடாது என்பதில்

தமிழக அரசு கவனம் செலுத்துமா?

செலுத்த வேண்டும் என்பதே

என் கனவு.

புதியமாதவியின் படைப்புகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE