அரசு ஊழியர்களின் ஆதரவை இழக்கிறதா திமுக?

By கே.கே.மகேஷ்

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்த்து ஏமாந்த அரசு ஊழியர்களுக்கு, அடுத்த அடி கொடுத்திருக்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை' என்ற அவரது அறிவிப்பு, திமுகவின் வெற்றிக்காக உழைத்த அரசு ஊழியர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரும் திட்டத்தை அறிவித்தது. நாட்டிலேயே முதல் ஆளாக 1.4.2003 முதல் அந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி, அந்தத் தேதியில் இருந்து தமிழ்நாடு அரசுப் பணி, அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்திட்டத்துக்கு எதிராகவும், பிற கோரிக்கைகளுக்காகவும் போராடிய அரசு ஊழியர்கள் மீது அத்தியாவசிய பணிகள் பராமரிப்புச் சட்டங்களான எஸ்மா, டெஸ்மா போன்றவை பாய்ந்தன. பலர் வேலையிழந்தார்கள். ஏற்கெனவே திமுக அபிமானிகளாக இருந்த அரசு ஊழியர்கள், இந்த விவகாரத்தில் இன்னும் அதிகமாக அதிமுகவை வெறுக்க ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியடைந்தது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து, திமுக ஆட்சி அமையவும் அரசு ஊழியர்கள் ஒரு காரணமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்று அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். குறைந்தபட்சம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைக்கூட அவர் அறிவிக்கவில்லை. இன்னும் 9 மாதங்கள் கழித்தே வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே 18 மாதங்களாக அகவிலைப்படி உயர்த்தப்படாத நிலையில், இந்த அறிவிப்பு அவர்களை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

நீதிராஜா

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா கூறும்போது, "திமுகவின் முதல் பட்ஜெட்டில் நாங்கள் நிறைய அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, கரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பைத் திரும்ப வழங்குதல், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டவர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றுதல் போன்ற எந்த அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எங்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினோம். ஆனால், அதன் பிறகும் சட்டமன்றத்தில் பழைய ஓய்வூதியம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த நிதி அமைச்சர் அதனை வழங்க வாய்ப்பில்லை என்று கூறியிருப்பது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது" என்றார்.

சுரேஷ்

நத்தம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான கா.சுரேஷ், "அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டுதான் வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கூட சங்கடத்துடன் ஏற்றுக்கொண்டோம். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவரவே முடியாது என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சரின் அதிகாரபூர்வ அறிவிப்பால் அரசு ஊழியர்கள் அதிர்ந்து போயிருக்கிறோம். இந்த முடிவை அவர் முதல்வரிடம் கலந்தாலோசித்துதான் எடுத்தாரா என்று தெளிவுபடுத்த வேண்டும். முதல்வரும் அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும். இந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்று கடுமையாக உழைத்த அரசு ஊழியர்கள் இன்னமும் முதல்வரை நம்புகிறோம். எதுவும் நடக்கவில்லை என்றால், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை திமுக ஒட்டுமொத்தமாக இழந்துவிடும்" என்றார்.

பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE