திருச்சியில் உள்ள குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில், ஒரேநாளில் 16 பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். அவர்களைத் தவிர 10-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவந்த நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரது இதயத்துடிப்பு குறைந்ததால், இன்று 20-ம் தேதி போலீஸ் உதவியுடன் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னனி என்ன? அங்கு என்னதான் நடக்கிறது?
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில், வருவாய்த்துறையின் நிர்வாகத்தில் இருக்கும் இந்தச் சிறப்பு முகாமில் குற்றச்செயலில் ஈடுபட்ட 116 வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக இலங்கைத் தமிழர்களும், அடுத்தபடியாக வங்கதேசத்தவர்களும் இருக்கிறார்கள். தவிர நைஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறப்பு முகாமில் உள்ள சிலர், தங்களின் தண்டனைக்காலம் முடிந்துவிட்ட நிலையிலும் தங்களை விடுதலை செய்யாமல் வைத்திருப்பதாகவும், அதனால் உடனடியாக தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முகாமுக்குள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அதற்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் எதுவும் வராத நிலையில், கடந்த 18-ம் தேதி 16 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களில் 14 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்கியும், ஒருவர் தன்னுடைய வயிற்றுப்பகுதியில் கத்தியால் கிழித்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வேறொருவர் தன்னுடைய கழுத்துப் பகுதியில் கத்தியால் கிழித்துக் கொண்டுள்ளார். இது எதுவும் முகாமுக்கு வெளியே காவல் பணியில் இருந்த போலிசாருக்கு தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், முகாமுக்குள் இருந்தவர்கள் தங்கள் அலைபேசியில் இதை படம்பிடித்து பத்திரிகை உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி வைத்துவிட்டனர்.
இக்காட்சி கிடைக்கப்பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்று, பிரேக்கிங் நியூஸாக இதை ஒலிபரப்ப விழித்துக்கொண்ட உளவுப்பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் முகாம் பணியில் இருந்த காவல் துறையினரை விசாரிக்க ஆரம்பித்தனர். அதன்பின்னர்தான், உள்ளே அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கு முயன்றவர்கள் அனைவருமே இலங்கை தமிழர்கள் தான். அவர்கள், பாஸ்போர்ட் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருந்தது உள்ளிட்டவற்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முகாமுக்கு அனுப்பப்பட்டவர்கள். இப்படி தற்கொலைக்கு முயலும் அளவுக்கு என்னதான் பிரச்சினை என்று முகாம் வளாகத்தில் உள்ளவர்களிடம் பேசினேன்.
“சின்னஞ்சிறு தவறுகளுக்காக தண்டனை பெற்று முகாமுக்குள் அடைக்கப்பட்டவர்கள் நாங்கள். எங்களில் பலருக்கும் நீதிமன்றம் அளித்த தண்டனைக்காலம் முடிந்துவிட்டது. ஆனாலும் எங்களை விடுவிக்காமல் முகாமிலேயே தங்க வைத்திருக்கிறார்கள். விடுவிக்கக் கோரி அரசிடம் பலமுறை பலவிதமாக கோரிக்கை வைத்து விட்டோம். எதுவும் பலனில்லை. அதனால் உண்ணாவிரதம் இருந்தோம். அதற்கும் அதிகாரிகள் அசையவில்லை.
அதனால் மனம் வெறுத்துப் போய்தான் சிலர் இப்படி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்கள். மற்றவர்கள் உடனே பார்த்து அவர்களைக் காப்பாற்றி விட்டோம்” என்கிறார்கள் முகாமில் உள்ளவர்கள்.
இதுகுறித்து வருவாய் மற்றும் காவல் துறை தரப்பில் பேசினேன். “அவர்களில் சிலருக்கு தண்டனைக்காலம் முடிந்துவிட்டது உண்மைதான். அதற்காக அவர்களை அப்படியே விடுவித்துவிட முடியாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற ஆணையின் பேரில் தான் விடுவிக்க முடியும். அதோடு அவர்களின் நாடு அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறைகளுக்கு காலதாமதம் ஆகிறது.
அதுவுமில்லாமல் இலங்கை தமிழர் சிலர் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது, கனடாவுக்குத்தான் அனுப்ப வேண்டும் என்கிறார்கள். இப்படி பல சிக்கல்கள் இருக்கிறது. ஆட்சி மாறியிருப்பதால் இப்போது தங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கியிருக்கிறார்கள்” என்று விளக்கம் சொல்கிறார்கள்.
எதுவாக இருந்தாலும் சீக்கிரம் செய்து தண்டனைக்காலம் முடிந்தவர்கள் சிறப்பு முகாமிலிருந்து வெளியேறி, தங்கள் நாடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் மதிப்பாக இருக்கும்.