கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
40 ஆண்டுகளாக சினிமா, அரசியல் என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவந்த வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகியிருக்கிறார். நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக நிறைய திட்டங்களை வைத்திருப்பதாகச் சொல்லும் சந்திரசேகருடன் ‘காமதேனு' இதழுக்காகப் பேசினோம். அவருடனான உரையாடலிலிருந்து...
கருணாநிதியுடன் நெருக்கமாகப் பழகியவர் நீங்கள். அவரையும் ஸ்டாலினையும் ஒப்பிடலாமா?
கலைஞருடன் யாரையும் ஒப்பிடவே முடியாது. கலைஞர் கலைஞர்தான். பன்முகம் கொண்ட தலைவர் அவர். ஆனால் அவரே, “ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு” என்று சொல்லும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் தளபதி ஸ்டாலின். கலைஞர் முத்தமிழ் வித்தகர். அந்தத் திறமை எல்லாம் எல்லோருக்கும் வராது. அதேநேரத்தில் ஆட்சித்திறன், அரசு நிர்வாகத்தில் அமர்க்களப்படுத்துகிறார் தளபதி.
உங்களைப் போலவே உதயநிதியும் கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
உதயநிதியை சினிமாக்காரராக அல்ல... பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அரசியல்வாதியாகத்தான் பார்க்கிறேன். நடிகர் என்பதைத் தாண்டி திமுகவுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தவர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அர்ப்பணிப்புடன் பொதுப்பணி செய்பவர் என்றுதான் மக்களும் அவரைப் பார்க்கிறார்கள். நிறைய பேர் தங்கள் சினிமா பிரபலத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது வழக்கம்தான். ஆனால், உதயநிதியை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. பொதுவாழ்க்கைதான் அவரது அடையாளமாக இருக்கிறது, இருக்கும்.
‘மாஞ்சாவேலு' படத்துக்குப் பிறகு சினிமாவில் ஆளையே காணோமே? எம்எல்ஏ ஆனதுமே நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டீர்களா?
2016-ல் சட்டமன்ற உறுப்பினரானதும், கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தேன். இப்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து யோகிபாபுவை வைத்து ‘தர்மபிரபு’ படமெடுத்த இயக்குநர் முத்துக்குமாரின் ‘சலூன்' படத்தில் நடிக்கிறேன். அதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
உங்கள் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாகைக்குளம் அல்லவா... ஊர்ப்பக்கம் வருவதே இல்லையா?
சகோதர, சகோதரிகள் உள்பட என்னுடைய எல்லா உறவினர்களும் மதுரையில்தான் இருக்கிறார்கள். என் வீடு, தோட்டம், தொறவு எல்லாம் அங்கேதான் இருக்கிறது. நானும் நல்லது கெட்டதுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறேன். திண்டுக்கல் டட்லி பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, நாடகம் சினிமா என்று சென்னைக்கு வந்து தொடர் வாய்ப்புகளால் இங்கேயே தங்கிவிட்டேன்.
திமுக அரசு தந்துள்ள இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவி திருப்தியளிக்கிறதா?
இதைப் பதவியாக அல்ல பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். எந்த வேலையை எனக்குக் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று பார்த்துப் பார்த்து இந்தப் பொறுப்பை முதல்வர் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அந்த வேலையைச் சரியாகச் செய்து, அவரது நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். ஏற்கெனவே இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நாடக மன்றத் தலைவர் பொறுப்பு மட்டுமின்றி, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பும் எனக்குக் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.
கரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருந்தும் வறுமையில் வாடும் நாடகக் கலைஞர்களுக்கும் என்ன செய்யப் போகிறீர்கள்?
நாடக நடிகர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் வாயிலாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் சரியாகப் போய்ச் சேர்கின்றனவா என்று கண்காணித்து குறைகளைக் களைவேன். எல்லா மாவட்டங்களிலும் நாடக நடிகர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் மெல்லிசைக் கலைஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அரசுத் திட்டங்களைப் பிரபலப்படுத்துகிற, விளம்பரப்படுத்துகிற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் இயல் இசை நாடக மன்றம் நடத்துகிற விழாக்களில் அனைத்துக் கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவது இல்லை. எனவே, இதுகுறித்து முதல்வரிடமும், அனைத்துத் துறை அமைச்சர்களிடமும் பேசவிருக்கிறேன்.
இதன் மூலம் அரசின் திட்டங்களும் மக்களைச் சென்றடையும், இந்தக் கலைஞர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்குத் திமுக ஆட்சிக்காலத்தில் நலவாரியம் மூலம் 22 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக காலத்தில் நிதி இல்லை என்று வெறும் 2 திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தினார்கள். மீண்டும் 22 திட்டங்களையும் நடைமுறைப்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்க உள்ளேன். 6 லட்சம் கலைஞர்கள் உள்ள தமிழ்நாட்டில் வெறும் 40 ஆயிரம் பேர்தான் வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எல்லோரையும் நல வாரியத்தில் சேர்ப்பேன். நாட்டுப்புறக் கலைஞர்கள் அடையாள அட்டை பெற அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டிய சூழலுக்கு முடிவு கட்டும் வகையில், இ-சேவை மையம் மூலமே அட்டை வழங்கும் திட்டம், கலைஞர்கள் குறைந்த வயதிலேயே உடல் நலம் குன்றிவிடுவதால் ஓய்வூதியத் திட்டத்தை 45 வயதிலேயே செயல்படுத்துவது, இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவது போன்ற திட்டங்களும் கைவசம் இருக்கின்றன.
ஒரு பக்கம் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் திமுகவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் பாஜகவினர் திமுகவை இந்து விரோத கட்சி என்கிறார்கள். எப்படி 5 ஆண்டுகளைச் சமாளிக்கப் போகிறது திமுக?
எடப்பாடி பழனிசாமி எப்படி முதல் அமைச்சர் ஆனார், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தமிழ்நாட்டையே டெல்லியில் எப்படி அடகு வைத்தார், எல்லாவற்றையும் மேலிருக்கிறவன் பார்த்துக்கொள்வான் என்ற தைரியத்தில் எப்படி எல்லாம் அவரும் அவரது கூட்டாளிகளும் கொள்ளையடித்தார்கள் என்பதை எல்லாம் மக்கள் அறிவார்கள். கொலை, கொள்ளை, ஊழல் புகார்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளிவருகிற பதற்றத்தில் போராட்டம், புகார் என்று என்னென்னவோ செய்கிறார்கள்.
அதேபோல திமுக மீது எந்தப் புகாரும் வைக்க முடியாததால் இந்து விரோதக் கட்சி என்ற ஆயுதத்தை பாஜகவினர் கையில் எடுத்தார்கள். எடுபடவில்லை. இப்போது திமுக அடுத்தடுத்து செய்யும் சாதனைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் மறுபடியும் இந்து விரோதம் அது இது என்று புலம்புகிறார்கள். இந்த 100 நாட்களில் திமுக செய்துள்ள திட்டங்களே போதும், இன்னொரு 5 ஆண்டுகள் திமுக ஆட்சியமைப்பதற்கு. எனவே இவர்களைப் பற்றி திமுக கவலைப்படப் போவதில்லை.