விடியல் தருமா வேளாண் பட்ஜெட்?- ஓர் அலசல்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தேர்தல் அறிக்கையில் சொல்லியபடியே வேளாண்மைக்கென தனியான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. 1991-ல் தஞ்சாவூரில் சண்முக ராஜேஸ்வரன் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என்று முதன் முதலாகக் கோரிக்கை வைத்தனர் தஞ்சை விவசாயிகள். இதுதொடர்பாக, பாமகவும் தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்து வந்த நிலையில், வேளாண் துறைக்கென தனி நிநிதிலை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது நல்ல சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

முன்னுதாரணமான முன்னெடுப்பு

கொடியேற்றும் உரிமையை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கருணாநிதி எப்படி பெற்றுத் தந்தாரோ, அதைப் போல ஒரு முன்னெடுப்பை இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார் என்றே பலரும் பாராட்டுகிறார்கள். ஏற்கெனவே உத்தராகண்ட், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்றாலும், தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் தனித்துவமானது என்கிறார்கள். இனி வரும் காலங்களில், இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு முன்பாகத் தமிழகம் முழுவதும் பயணித்து விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அப்போது பெறப்பட்ட கருத்துகள், இந்த பட்ஜெட்டில் செயல் வடிவம் பெற்றிருக்கின்றனவா என்பது முக்கியமான கேள்வி.

பொதுவாக எல்லா விவசாயிகளுமே இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பைத் தந்திருக்கிறார்கள். ஆனாலும் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பு உட்பட நிறைய விஷயங்கள் விடுபட்டிருப்பதையும், அரசு செய்வதாகச் சொன்ன பல விஷயங்களைச் செய்யாமலிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

நல்ல முயற்சிதான்; நிதி போதாது!

“இந்த பட்ஜெட் 90 சதவீதம் சிறப்பானது என்பேன். அதுவும் விவசாயிகளைக் கூப்பிட்டுப்பேசி, கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் பட்ஜெட் தயாரித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு துறை சார்ந்தும் யோசித்திருக்கிறார்கள். சில விஷயங்கள் மட்டும் விடுபட்டுப்போயுள்ளன” என்றார் இயற்கை வேளாண் அறிஞர் பாமயன்.  

தொடர்ந்து அவர் பேசுகையில், “எல்லா பயிற்சிகளையும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மூலமாக அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்கள் எப்போதுமே இயற்கை விவசாயத்தை ஆதரிப்பது கிடையாது. அதனால் இயற்கை விவசாயத்
துக்கென தனியாகப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். அதில் முன்னோடி அனுபவ விவசாயிகளை நியமித்து பயிற்சிகள் அளிக்க வேண்டும். பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு இயக்கம் நல்ல முயற்சி. ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி மிகக் குறைவு. இப்படிப் பல திட்டங்களுக்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை விவசாயத்துக்கான கொள்கை வரைவு இதுவரை இல்லை. அப்படி இருக்கும்போது திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பது கேள்விக்குரியது. கொள்கை, திட்டம், பிறகு நிதிநிலை அறிக்கை என்பதுதான் சரியாக இருக்கும். பொதுவாக இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அடுத்து வரக்கூடியவர்கள் நிதிநிலை அறிக்கை அளித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இன்னும் கூடுதலாக எதைச் செய்யலாம் என்ற தேடல் அவர்களுக்கு வரும். அதன்மூலம் விவசாயிகளுக்கு மேலும் பல திட்டங்கள், சலுகைகள் கிடைக்கக்கூடும்.

நுகர்வோரையும், உற்பத்தியாளரையும் இணைக்கும் விஷயங்கள் இதில் இல்லை. அதற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். பண்ணை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் சேர்க்கப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும். குறை சொல்வதற்கான விஷயங்கள் அதிகமில்லை. சின்னச் சின்ன விஷயங்கள் விடுபட்டுள்ளன அவ்வளவுதான்” என்றார்.

கடன் தள்ளுபடி என்னவாயிற்று?

அப்படி விடுபட்டுள்ளவற்றில் விவசாயத்துக்கான மின் இணைப்பு மிக முக்கியமானது. மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு இணைப்பு வழங்குவதற்காக எந்த அறிவிப்பும் இதில் இல்லை. சூரியசக்தி மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்கிறது. அதை ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பயனடையுமாறு விரிவுபடுத்தி, ஐந்தாண்டுகளில் அனைவருக்கும் வழங்க திட்டமிடலாம்.

“2016-ல் கடன்பெற்ற விவசாயிகள் கடுமையான வறட்சி காரணமாகக் கடனைக் கட்ட முடியவில்லை. அதனால் அந்தக் கடனை மத்திய கால மறுகடனாக ஒத்திவைத்தார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் அந்தக் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படவில்லை. 470 கோடி ரூபாய் அளவிலான அந்தக் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. மானியக் கோரிக்கையிலாவது அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்கிறார்கள் விவசாயிகள்.

அனைத்து விவசாயிகளுக்குமான பட்ஜெட் 

“நெல் ஜெயராமன் பெயராலும், நம்மாழ்வார் பெயராலும் ஆய்வு மையங்கள் அமைப்பது வரவேற்கத்தக்கது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல தரிசு நிலங்களை மேம்படுத்தி 11 லட்சம் ஹெக்டேர் வரை பாசனப் பரப்பு அதிகரிக்கப்படும்; நெல் மற்றும் கரும்புக்கு அடிப்படை விலை உயர்த்தப்படும் எனும் அறிவிப்புகள்  மகிழ்ச்சி தருகின்றன. குளிர்பதனக் கிடங்குகள், ஆய்வு மையங்கள் என்று எல்லா தரப்பு விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கையாக இது இருக்கிறது” என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.வரதராஜன்.

நெல்லுக்கும் கரும்புக்கும் விலை உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், அது போதாது என்பதே பெரும்பாலான விவசாயிகளின் கருத்து. திமுக தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு டன்னுக்கு 3,500 ரூபாயும் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது நெல்லுக்கு 70 ரூபாய் சேர்த்து 2,060 ரூபாயாகவும், கரும்புக்கு 100 ரூபாய் சேர்த்து 2,900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2015-16-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கரும்புக்கு 2,850 ரூபாய் வழங்கியதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அனைத்து மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம்

பெரம்பலூர் மாவட்டம் பேரளியைச் சேர்ந்த சிறுதானிய விவசாயி நல்லப்பன் விடுபட்ட மேலும் சிலவற்றைச் சுட்டிக்காட்டினார். “இயற்கை வேளாண்மைக்கும், சிறுதானியங்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், பனைமரங்களைப் பாதுகாக்க திட்டம் கொண்டு வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பனைவெல்லம் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பும் சரிதான். ஆனால், ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இன்றுவரை பதனீர் இறக்கவே அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி பனைவெல்லம் தயாரிக்க முடியும்? அதுகுறித்த விளக்கங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. அதனால் எல்லா மாவட்டங்களிலும் பதனீர் இறக்கவும், பனை வெல்லம் தயாரிக்கவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதனை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சின்ன வெங்காயம் மிக அதிகமாகவிளைவிக்கப்படுகிறது. ஈரோட்டில் மஞ்சள், பண்ருட்டியில் பலா ஆகியவற்றுக்குக் குளிர்பதனக் கிடங்குகள் அறிவித்திருப்பதுபோல இந்த மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தைச் சேமித்துப் பாதுகாக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வெங்காயத்தை விற்பனை செய்வதற்குத் தோதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க சில மாவட்டங்களில் இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும்
பெரம்பலூர் மாவட்டம் இல்லை. மாநகரங்களில் மட்டும் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்
கப்பட்டுள்ளது. மாறாக, அனைத்து மாவட்டங்களிலும் அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அதனை மதிப்புகூட்டி நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள், அரசாங்கம், நுகர்வோர் ஆகிய மூன்று தரப்புக்கும் அதிகப் பயன் கிடைக்கும்” என்கிறார் நல்லப்பன்.

களையப்பட வேண்டிய குறைகள்

கருத்துக்கேட்பு கூட்டத்தின்போது நீர்நிலைகள், நீராதாரங்களைத் தூர்வார ஒப்பந்ததாரர்களை விடுத்து தேவையான கருவிகளை வாங்கி, வேளாண் துறையே நேரடியாகத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும், நிதிநிலை அறிக்கையில் அதுகுறித்த தெளிவில்லை. காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது கடந்த அதிமுக அரசு. அதற்காக அப்போதைய முதல்வர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. கடைசிவரை அந்தக் குழு கூடிப் பேசவே இல்லை. அதை ஒழுங்குபடுத்தி, காவிரிப் படுகையை உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுகுறித்தும் இதில் தெளிவான விளக்கங்கள் இல்லை.

இப்படிப் பல விஷயங்கள் விடுபட்டிருந்தாலும், முதல் பட்ஜெட் என்பதால் இதை முன்னெடுப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் உள்ள குறைகள், விடுபட்டுள்ளவை இனி வரும் ஆண்டுகளில் களையப்படும் என்று நம்புகிறார்கள் விவசாயிகள். அந்த நம்பிக்கையை அரசுதான் காப்பாற்ற வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE