இசை வலம்: இந்திக்குப் போகும் தென்னிந்திய கானங்கள்

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

கர்நாடக இசையின் பிதாமகர் எனப் போற்றப்படுபவர் புரந்தரதாசர். இசைக் கவி யான இவருடைய பங்களிப்புகள், முன்னெடுப்பு கள் இசையைச் செழுமைப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிப்பவை. கன்னட மொழியில் இவர் எழுதிய ‘வாதாபி கணபதிம்’, ‘பாக்யாத லஷ்மி பாரம்மா’ போன்ற கீர்த்தனைகள் இல்லாமல், சாஸ்த்ரிய இசைக் கச்சேரிகள் முழுமை அடையாது. அந்த அளவுக்கு இசை உலகில் பிரபலமானவை அவை. அவற்றுக்குச் சிறிதும் குறையாத இலக்கிய நயமும் பக்தியில் கேட்பவர்களை மூழ்கடிக்கும் அர்த்தங்களும் நிறைந்த கீர்த்தனை `ஜகதோதாரண’. கர்நாடக மாநிலத்தின் தொட்டா மல்லூர் கிராமத்தில் உள்ள அப்ரமேய சுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்பேகலு நவநீதகிருஷ்ணனைத் துதித்து புரந்தரதாசர் எழுதிய பாடல் இது.

இந்தப் பாடல் இப்போது, பக்தியின் பரிமாற்றத்துக்கும் பாடல்களில் பொதிந்துள்ள அரிய கருத்துகளின் பரிமாற்றத்துக்கும் மொழி தடையாக இருந்திடக் கூடாது என்ற யோசனை பேராசிரியர் கவுதம் சென்குப்தாவுக்குத் தோன்றியிருக்கிறது. உடனே செயலில் இறங்கினார். ‘புராஜெக்ட் அனுக்ருதி’ எனும் திட்டத்தைத் தொடங்கினார். தென்னிந்தியாவில் பாடப்படும் புகழ்பெற்ற இலக்கிய வளங்களை வட இந்தியாவின் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் எட்டும் வகையில் அவற்றின் பொருள் சிதையாமல் இந்தியில் மொழிபெயர்த்து, இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டே இசைக் காணொலிகளாக வெளியிடும் அரிய பயணத்தை அவர் தொடங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளில் அமைந்த பிரபல கீர்த்தனைகளும் பாடல்களும் இனி இந்தி மட்டுமே அறிந்தவர்களையும் எட்டும் என்பது அரிய பணிதானே!

‘ஜகதோதாரண’ கீர்த்தனையை உத்ரா உன்னி கிருஷ்ணன், வயலின் கலைஞர் கார்த்திக் ஆகியோரைப் பாடவைத்து இந்த இசைப் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். ‘என்ன தவம் செய்தனை யசோதா’எனும் பாடல் அமைந்துள்ள ராகம் காபி. அந்த ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் பதச் சேதம் இல்லாமல் நம் காதிலும் மனதிலும் பதிகிறது!

பக்தியில் மனம் கரைய: https://www.youtube.com/watch?v=IFyXzl2cOi4

* * *

குத்துச் சண்டை வார்த்தைகள்!

திரைப்படத்தின் கருத்தை ஒட்டுமொத்தமாகக் கோடிட்டுக் காட்டுபவை ‘தீம்’ பாடல்கள். வலுவான கதைக் கரு கொண்ட படங்களின் ‘தீம்’ பாடல்கள் ரசிகர்களால் ஆராதிக்கப்படுகின்றன. அந்த வகையில், அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் தீம் பாடலான ‘நீயே ஒளி’ எனும் இரு மொழி சொல்லிசைப் பாடல் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. அந்தப் பாடலை வித்தியாசமான காட்சிப் பதிவுகளுடன் புதிய பரிமாணத்துடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, ‘மாஜ்ஜா’ தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் தமிழ் வரிகளை அறிவு எழுதியிருக்கிறார். ஆங்கில வரிகளை எழுதியதோடு தன்னுடைய அற்புதமான உடல் மொழியோடு பாடி அசத்தியிருக்கிறார் புகழ்பெற்ற ஆங்கில சொல்லிசைக் கலைஞரான ஷான் வின்சென்ட் டி பால் (எஸ்விடிபி). இதில் இணைந்திருக்கும் இன்னொரு புகழ்பெற்ற சொல்லிசைக் கலைஞர் நாவ்ஸ் 47. ‘காத்தாடி’, ‘மயூரா’, ‘கல்கி’ என இவரின் இசை ஆல்பங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

டிரம்பட்டின் காத்திரமான பிளிறல் ஒலியும் டிரம்ஸ் ஒலியும் துள்ளல் இசைக்குத் துணை புரிகின்றன. உடல், பொருள், ஆவி அனைத்தையும் விளையாட்டு எனும் வேள்வித் தீயை வளர்க்க ஒரு விளையாட்டு வீரர் அர்ப்பணிப்பதை வார்த்தைக்கு வார்த்தை உறுதி செய்கிறது இந்தப் பாடல். தமிழிலும் ஆங்கிலத்திலும் வார்த்தைகள் குத்துச்சண்டை போடுகின்றன!

‘நீயே ஒளி நீதான் வழி ஓயாதினி உடம்பே
நீயே தடை நீயே விடை சூடாச்சுது நரம்பே...’

எனும் அறிவின் வரிகளில் தெறிக்கின்றன வீரமும் தீரமும்!

ரோஷமான குத்துச்சண்டை பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=e_0Q92a8Wlo

* * *

வாசிக்க வாசிக்க வசமாகும் `பன்சூரி’!

ஒருவரின் திறமை ரத்தத்தில் வருவதா, பயிற்சியில் வருவதா எனும் கேள்வி எட்டு வயது சிறுவனுக்குத் தோன்றுகிறது. காரணம், திடீரென்று அவனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் திறன் அபாரமாக வருகிறது. எப்படி இது நடக்கிறது எனும் சிறுவனின் சுயதேடல் தான், சென்னையைச் சேர்ந்த அகஸ்டோ எழுதி, இயக்கிய ‘வானவில்லின் அம்பு’ நாடகத்தின் கதை. பல நாடக விழாக்களில் பங்கேற்றிருக்கும் இந்நாடகம் சிறந்த கதை, சிறந்த இயக்கம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் போன்ற பிரிவுகளில் பல விருதுகளை வென்றிருக்கிறது.

இந்தக் கதையின் மையத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, பிரபல நடிகர்கள் ரிதுபர்ணா சென்குப்தா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிக்க இந்தியில் ‘பன்சூரி’ எனும் பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துவிட்டார் சென்னையைச் சேர்ந்த ஹரி விஸ்வநாத். இவர் கடந்த 2015-ல் விமர்சன ரீதியாகப் பலரின் வரவேற்பைப் பெற்ற ‘ரேடியோபெட்டி’ திரைப்படத்தை இயக்கியவர். “இந்த நாடகத்தின் பிரதான கதையம்சத்தை அகஸ்டோ சொன்னபோதே, இது நிச்சயம் உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்தேன். உடனடியாக இந்தியில் படமாக்கும் பணிகளைத் தொடங்கினேன்” என்று சொல்கிறார் ஹரி விஸ்வநாத்.

தற்போது கரோனா முடக்கத்தால் ‘பன்சூரி’படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் ‘உல்ஜன் படி’ எனும் பாடலைப் புகழ்பெற்ற அசாமிய நாட்டுப்புறப் பாடகர் பாபோன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் காட்சிகளே கதையின் ஓட்டத்தைச் சொல்லிவிடுகின்றன.

கதை சொல்லும் புல்லாங்குழல்: https://www.youtube.com/watch?v=5YMZg78uRag

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE