மதுரைக்கு வந்தால் சின்னாபின்னமாவீர்கள்!- நித்திக்கு எதிராகக் கச்சை கட்டும் ஆதீன பக்தர்கள்

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

பொதுவாக, சாமானியர்களின் வாழ்க்கையில்தான் வாரிசுச் சண்டைகள் தலை தூக்கும். கலிகாலம்! முற்றும் துறந்த சாமியார்களின் மடத்திலும் வாரிசுச் சண்டைகள் நடப்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது!

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர், கடந்த 13-ம் தேதி இயற்கை எய்தினார். அவரால் ஏற்கெனவே இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த சுந்தரமூர்த்தி தம்பிரான்தான் அடுத்த ஆதீனம் என்று அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், கைலாசா அதிபர்(!) நித்யானந்தா தனக்குத்தானே மதுரை ஆதீனமாக முடிசூட்டிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பெயரையும்,  ‘293-வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என மாற்றிக்கொண்டிருப்பதாக சமூக வலைதளம் வழியே அறிவித்துள்ளார். நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு மீனாட்சிப் பட்டணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிரச்சினையை மதுரை ஆதீன மட நிர்வாகிகளும், அடுத்த ஆதீனமாகப் பொறுப்புகளைக் கவனிக்க இருக்கும் சுந்தரமூர்த்தி தம்பிரானும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று அறிய மடத்துக்குச் சென்று விசாரித்தோம்.

மடத்தின் இரண்டு வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள வாயில் மூடப்பட்டிருக்க, கார் பார்க்கிங் வழியாக மடத்துக்குள் சென்றோம். அங்கே வாயிலிலேயே காவி உடை தரித்த பக்தர்கள் சிலர் வழிமறித்தார்கள். ஆதீனத்தைப் பார்க்க வேண்டும் என்றபோது, (அவர் உள்ளே இருந்தபோதிலும்!) கோயிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

ஏற்க மாட்டோம்!

ஆதீன மேலாளரும் வழக்கறிஞருமான ஜெயச்சந்திரன், மடத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞரான சோமு ஆகியோர் என்ன விஷயமாகச் சந்நிதானத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டு, அதற்கு விளக்கம் தந்தனர்.

“மதுரை ஆதீனத்தால் இளைய ஆதீனமாக 2012 ஏப்ரல் 27-ல் நியமிக்கப்பட்ட நித்யானந்தா, ஆதீன சம்பிரதாயங்களைச் சரியாகக் கடைப்பிடிக்காததாலும், சதிச்செயல்களில் ஈடுபட்டதாலும் எட்டே மாதத்தில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதன் தொடர்ச்சியாக திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருவாடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் மத் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக மதுரை ஆதீனம் நியமித்துவிட்டார். இந்த நிலையில், மதுரை ஆதீனம் முக்தியடைந்ததால், ஆதீன சம்பிரதாயப்படியும், சட்டப்படியும் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளே மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுவிட்டார். அவரது பெயரும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்று மாற்றப்பட்டுவிட்டது. வருகிற 22-ம் தேதி முறைப்படி அவருக்கு பட்டம் சூட்டும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், இந்த மடத்துக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத நித்யானந்தா தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டதாகச் சொல்லியிருப்பதை பக்தர்களும் சரி, அறநிலையத் துறை அலுவலர்களும் சரி, ஏற்கவே மாட்டார்கள். எனவே, நித்யானந்தாவின் அறிவிப்பை நாங்கள் பொருட்படுத்தப்போவதில்லை” என்றார்கள் ஜெயச்சந்திரனும் சோமுவும்.

தந்திரம் செய்த நித்தி

மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளாத நித்யானந்தா, அந்தப் பதவியைத் தக்கவைப்பதற்குச் சில முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்று, மதுரை ஆதீனம் அருகிலேயே ஒரு சொத்து வாங்கி அங்கே போட்டி மடம் நடத்துவது. அதற்குத் தோதான இடம் கிடைக்காத நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அம்மன் சந்நிதியிலேயே ஒரு கட்டிடத்தைப் பிடித்து அங்கே பிடதி ஆசிரமத்தின் கிளையை நிறுவினார். அங்கு தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டதுடன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் வடிவத்திலும் தனது சிலையை வடித்திருந்தார். நித்யானந்தாவின் சிஷ்யர்கள், சிஷ்யைகள் சிலர் மட்டும் அங்கேயே தங்கியிருந்து தியானம் மற்றும் ஆன்மிக சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நித்யானந்தாவின் சீடர்களின் கருத்தறிய அங்கே சென்றபோது, மடத்தின் ஷட்டர் கதவு பூட்டப்பட்டிருந்தது. வெளியில் இருந்த மடத்தின் பெயர்ப்பலகையும் அகற்றப்பட்டிருந்தது. மடத்தின் அருகில் இருந்தவர்களிடம் கேட்டபோது, “ஆதீனம் உடல்நலக்குறைவாக இருந்தபோதே நித்யானந்தா தான்தான் அடுத்த ஆதீனம் என்பதுபோல ஏதோ வில்லங்கமாக ட்வீட் போட்டாராம். அப்போதே போலீஸார் வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். இங்கிருந்தவர்களை எக்காரணம் கொண்டும் ஆதீன மடத்துக்குப் போகக்கூடாது என்று எச்சரித்துவிட்டும் போனார்கள். எனவே, இங்கிருந்த ஊழியர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள். ஒரே ஒருவர் மட்டும் இங்கு தங்கியிருக்கிறார். அவரும்கூட உள்பக்கமாகப் பூட்டிவிட்டுப் பாதுகாப்பாக இருக்கிறார்” என்றனர்.

வர மாட்டார்!

மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன். சமீபகாலமாக அவர் நித்யானந்தா ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தகவல் வர, அவரைத் தொடர்பு கொண்டோம்.

“நித்யானந்தா மதுரைக்கு வர மாட்டார். அவர்தான் தனக்கென ஒரு நாடு, கொடி, நாணயம் என்று செட்டில் ஆகிவிட்டாரே?!” என்று கூறி பேச்சைத் துண்டிக்க முயன்றார் சோலைக்கண்ணன். “உங்களது இன்றைய நிலைப்பாடு என்ன?” என்று கேட்டபோது, “அவர் வரவே மாட்டார் சார். அப்படி வந்தாலும், மதுரை ஆதீனச் சம்பிரதாயங்களை முழுமையாக அவரால் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆதீனமாகப் பொறுப்பேற்பவர்கள் தலைக்கு மொட்டையடிக்க வேண்டும், பெண்கள் யாரையும் மடத்திற்குள் தங்க விடக்கூடாது. எப்போதும் மடத்திற்குள்ளேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும். இந்த மூன்றையும் அவரால் செய்யவே முடியாது. மொட்டை கூட போட்டுவிடுவார். ஆனால், உலகம் சுற்றுவதையும், பெண் பக்தைகள் அருகில் இல்லாமலும் அவரால் வாழ முடியாது. ஒருவேளை அதை எல்லாம் விட்டுவிட்டு வந்தால், அவரை ஏற்பது குறித்து யோசிப்போம்” என்றார் சோலைக்கண்ணன்.

கோபத்தில் பக்தர்கள்

போலீஸ் பாதுகாப்பைத் தாண்டி, மதுரை ஆதீன விசுவாசிகள் சிலர் மடத்தின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அதில் ராஜபாளையம் ராம்ராஜ் என்பவரும் ஒருவர். அவரிடம் கேட்டபோது,  “நித்யானந்தாவால் தமிழ்நாட்டிற்குள்ளேயே நுழைய முடியாது. அவர் நுழைந்த அடுத்த நிமிடமே போலீஸ் கைதுசெய்து உள்ளே தள்ளிவிடும். அந்த பயத்தில்தான், தான் எங்கே இருக்கிறேன் என்பதைக்கூடச் சொல்லாமல், கைலாசா அது இது என்று பம்மாத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார். எங்கோ ஒளிந்திருந்துகொண்டு தான்தான் அடுத்த ஆதீனம் என்று சொல்லும் அவர் மட்டும் மதுரைக்கு வரட்டும்... அப்படி அவர் மதுரைக்கு வந்தால், இந்து மதத்தையும், மதுரை ஆதீன சம்பிரதாயங்களையும் கேலி செய்த குற்றத்துக்காக பக்தர்களின் நேரடிக் கோபத்துக்கு ஆளாவார். அவர் மீது நான் தொடர்ந்த வழக்கு ஒன்று ஏற்கெனவே நிலுவையில் இருக்கிறது. ஒன்று சிறைக்குப் போவார், அல்லது பக்தர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவார்” என்று சபித்தார்.

நித்யானந்தா மதுரைக்கு வர வாய்ப்பே இல்லை என்றே போலீஸாரும் சொல்கிறார்கள். பார்க்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE