கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
"ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிக்கு நான் இரண்டு முறை சென்றபோதும், அங்கே அகழாய்வு தொடரப்படாததையும், தோண்டி கண்டுபிடிக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் எல்லாம் சிதையத் தொடங்கியிருப்பதையும் கண்டேன். அவற்றுக்குப் பொறுப்பாள
ராய் இருந்த அரசு அதிகாரி, தமது வேலைகளுக்கு அரசு பணமே தருவதில்லை என்று முறையிட்டார்” - இது 1944-ல் ஜவாஹர்லால் நேரு சிறையில் இருந்தபடி எழுதிய ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா' புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த சோகமான செய்தி.
இந்த ஆதங்கம் இன்றுவரை தொடரவே செய்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மட்டும் இதுதொடர்பாக 30-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மத்திய தொல்லியல் துறையை எழுப்பி, “உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என மாதந்தோறும் உத்தரவு போட்டுக்கொண்டே இருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
இதன் நீட்சியாக, “இந்தியாவிலேயே அதிகக் கல்வெட்டுகள் தமிழகத்தில் தான் கிடைத்திருக்கின்றன. அவற்றைத் தமிழ்நாட்டிலேயே பாதுகாக்காமல் ஏன் கர்நாடகத்தில் படியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?” என்றும், இதுதொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருப்பது, தமிழர் வரலாறு குறித்த ஆர்வம் கொண்ட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அலட்சியப்படுத்தப்படும் தமிழ் கல்வெட்டுகள்
கல்வெட்டு தொடர்பான வழக்கைத் தொடர்ந்த மதுரை வழக்கறிஞர் மணிமாறனிடம் இதுகுறித்து கேட்டபோது, “இந்தியாவில் இதுவரையில் படியெடுக்கப்பட்ட 86 ஆயிரம் கல்வெட்டுகளில், 27 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள். மற்றவை சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளைச் சேர்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துக் காட்டியிருக்கிறார்கள். சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன என்பதற்குப் புத்தக ஆதாரங்களே இருக்கின்றன. இதுவரையில் படியெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் மண்டல அலுவலகத்தில் தான் பாதுகாக்கப்படுகின்றன. மைசூருவில் உள்ள பழைய கல்வெட்டுத் துறை அலுவலகத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு இந்த ஆவணங்களை எல்லாம் மாற்றியபோது, பல கல்வெட்டுகளும், படியெடுத்த பிரதிகளும் சேதமடைந்துள்ளன. எஞ்சியவையும் போதிய பாதுகாப்பின்றியும், பராமரிப்பின்றியும் உள்ளன. எனவேதான் வழக்குத் தொடர்ந்தோம்” என்றார்.
தீர்வு பிறக்கும்
ஏற்கெனவே, கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை மைசூருக்கு ஏற்றிச் செல்லவிருந்த நேரத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அங்கே தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடந்துகொண்டிருக்கிற நேரத்தில் இந்தப் பொருட்களை அங்கே கொண்டுபோனால், பாதுகாப்பாக இருக்குமா என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். வழக்குகள் தொடரப்பட்டன. அன்று தொல்லியல் துறைக்கு அமைச்சராக இருந்த க.பாண்டியராஜன் கீழடியிலேயே ஒரு அகழ்வைப்பகம் கட்டப்படும் என்றும், அதுவரையில் இந்தப் பொருட்கள் எல்லாம் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவித்து அதைச் செயல்படுத்தினார்.
இந்தச் சூழலில், கல்வெட்டுப் பிரச்சினைக்கும் அப்படியொரு தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. கூடவே, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வுகளுக்கு நீதிமன்ற வழக்குகளே காரணமாக இருந்த வரலாற்றையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“எங்கள் ஊர்ப்பக்கத்தில்தான் ஆதிச்சநல்லூர் இருந்தது என்றாலும் அதுபற்றிய முழுவிவரம் ஊரில் யாருக்கும் தெரியாது. பாடப்புத்தகத்தில்கூட முதுமக்கள் தாழி பற்றிய ஒருவரித் தகவல்தான் இருக்குமே தவிர, கூடுதலாக எதுவும் இருக்காது. நேரில் போய்ப் பார்த்தால் வெறும் பொட்டல்காடுதான் தெரியும். 2004-ல் மத்திய தொல்லியல் துறையில் இருந்து சத்யமூர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் வந்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது பத்திரிகையாளன் என்ற முறையில் நானும் ஆர்வத்துடன் போனேன். ஆனால், அதிகாரிகள் ஊடகங்களிடம் உரையாடவே மாட்டார்கள். சாத்தான்குளம் ராகவன் எழுதிய ‘ஆதிச்சநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்' என்ற புத்தகத்தில்தான் கொஞ்சம் கூடுதல் செய்திகள் இருந்தன.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்தவரும், சமூக அக்கறை கொண்டவருமான வழக்கறிஞர் அழகுமணி ஆதிச்சநல்லூரைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துப்போனேன். ஆதிச்சநல்லூரின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக இருவரும் சேர்ந்து வழக்குத் தொடர்வது என்று முடிவெடுத்தோம். ‘ஆதிச்சநல்லூரில் 2004-ல் நடந்த அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசு உடனே தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், எஞ்சிய இடங்களில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும், அங்கேயே உலகத்தரத்தில் ஒரு அகழ் வைப்பகம் கட்ட வேண்டும்’ எனும் மூன்று கோரிக்கைகளுடன் முதல் வழக்கை 9.7.2017 அன்று தாக்கல் செய்தோம்.
முதலில் தொய்வாக இருந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் வந்தபிறகு, வேகமெடுத்தது. மொத்தம் 19 முறை அவரிடம் விசாரணைக்கு வந்தது வழக்கு. அவரது அடுத்தடுத்த உத்தரவுகளால், இப்போது அந்த 3 கோரிக்கைகளுமே நிறைவேறிவிட்டன. 2004 அகழாய்வு அறிக்கை வெளிவந்துவிட்டது. உலகத் தரத்தில் அகழ்வைப்பகம் கட்டப்படும் என்று 2020 மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். எஞ்சிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைத் தமிழ்நாடு அரசே தொடங்கி விட்டது. இப்படி நாங்கள் தொடர்ந்த வழக்குகளில் நான்காவது வழக்கு குறித்த விசாரணையின்போது தான், கல்வெட்டு குறித்த முக்கியமான உத்தரவை நீதிபதி கிருபாகரன், துரைசுவாமி அமர்வு பிறப்பித்திருக்கிறது” என்றார் முத்தாலங்குறிச்சி காமராசு.
குமரி கண்டம் ஆய்வு தொடங்கும்
“இதென்ன பிரமாதம், அடுத்து குமரி கண்டம் தொடர்பான கள ஆய்வு நடக்கப் போகிறது பாருங்கள்” என்கிறார் அகழாய்வு, கல்வெட்டு தொடர்பான சுமார் 15 வழக்குகளை நடத்திவரும் வழக்கறிஞர் அழகுமணி.
“ஆதிச்சநல்லூர் அகழாய்வு, கொற்கை, கீழடி, கல்வெட்டு என்று தொல்லியல் தொடர்பான எல்லா வழக்குகளையும் சேர்த்துதான் உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது. தமிழர்களின் பூர்விகமான குமரி கண்டம் குறித்து அகழாய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒடிசா பாலு தலைமையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அடங்கிய ஒரு இடைக்காலக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. அந்தக் குழுவும், ‘குமரி கண்டம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரம் உள்ளது. அகழாய்வு செய்தால் மேலும் பல செய்திகளைக் கண்டு பிடிக்கலாம்’ என்று பரிந்துரை செய்துள்ளது.
எனவே, இந்த வழக்கில் அடுத்தடுத்த முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். தென்தமிழ்நாட்டில் தான் நிறைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும், கல்வெட்டுகளும் இருக்கின்றன. ஆனால், மத்திய தொல்லியல் அலுவலகத்தின் மண்டல அலுவலகம் மைசூரிலும், வட்ட அலுவலகம் சென்னையிலும் மட்டுமே இருக்கிறது என்று நாங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக, திருச்சியிலும் ஒரு வட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. அதற்குப் போதிய அலுவலர்கள், கட்டிட, வாகன வசதிகள் தேவை என்று அடுத்து முறையிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்கள் எல்லாம் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் கிடக்கின்றன. அங்கெல்லாம் காவலர்கள், சுற்றுலா வழிகாட்டிகளை நியமிப்பதுடன், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறோம். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, வழக்கறிஞர் திருமுருகன் போன்றோரெல்லாம் இதற்குத் துணையாக இருக்கிறார்கள்” என்றார்.
“நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெற்று விட்டாரே, இனி இந்த வழக்குகளின் கதி என்னாகும்?” என்று முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் கேட்டபோது, “ஓய்வுபெறும் நாளில்கூட முக்கியமான தீர்ப்பொன்றை அளித்துள்ளார். மைசூரில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் மைப்பிரதிகள் உள்ளிட்ட தமிழ் ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும், சென்னையில் உள்ள மத்திய கல்வெட்டு இயல் துறையின் கிளைக்கு தமிழ் கல்வெட்டு இயல் கிளை என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற வழக்குகளும் தொய்வடைய வாய்ப்பே இல்லாத அளவுக்கு அவர் நல்ல அடித்தளம் அமைத்திருக்கிறார். இன்றைய தமிழ்நாடு அரசுமே இந்த விஷயத்தில் சுறுசுறுப்பு காட்டுகிறது. தொல்லியல் விஷயத்தில் அதீத ஆர்வம் கொண்ட தங்கம் தென்னரசுவே இந்தத் துறையின் அமைச்சராகியிருக்கிறார். ஆதிச்சநல்லூர், சிவகளையைப் பொறுத்த வரையில் கனிமொழி எம்பி-யின் தொகுதிக்குள் வருகின்றன. எனவே, இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொல்லியல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பச் செய்வது, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொல்லியல் பொருட்களுக்கென ஒரு காட்சிக்கூடம் அமைத்து, பொருட்களைச் சேகரித்து அங்கேயே காட்சிப்படுத்துவது போன்ற பணிகளை அரசு செய்கிற வரையில் நாங்களும் விடுவதாக இல்லை” என்றார்.
20 ஆண்டுகளில் நிலைமை மாறும்
இந்தக் கருத்தை வழிமொழிகிற வழக்கறிஞர் அழகுமணி, “முன்பு தமிழ் படித்தவர்களுக்குத் தமிழகக் கல்வெட்டுத் துறையில் வேலையே இல்லை. சம்ஸ்கிருதம் படித்திருப்பதே வேலைக்கு அடிப்படைத் தகுதி என்கிற நிலை இருந்தது.
அதை மாற்றியிருக்கிறோம். தமிழ் இலக்கியம், வரலாறு படித்தவர்கள் எல்லாம் இப்போதுதான் துறைக்குள் வரத் தொடங்கி யிருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் அவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். அப்போது தமிழகத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த மத்திய அரசின் பார்வையே மாறிவிடும் என்று நம்புகிறோம்” என்றார்.
நம்பிக்கைகள் செயல்வடிவம் பெறட்டும். தமிழர் பெருமை உலகம் முழுவதும் பரவட்டும்!