ரஜினி சரிதம் 29: ஆறிலிருந்து எழுபது வரை- கோபக்கார இளைஞன் அவதாரம்!

By திரை பாரதி

சூப்பர் ஸ்டாராக ரஜினியை ஏற்றுகொள்ள மனமில்லாதவர்களும் ‘பில்லா’ படத்தின் வெள்ளி விழா வெற்றியை வியந்து பார்த்தார்கள். அந்தப் படத்தின் இயக்குநர், தன்னுடைய பெயருக்கு முன்னால் படத்தின் பெயரைப் பெருமையாகச் சேர்த்துக்கொண்டு, ‘பில்லா’ ஆர்.கிருஷ்ணமூர்த்தி என மாறினார். இயக்குநரை மட்டுமல்ல, ரஜினியையும் அவரது ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் ‘பில்லா’ வெற்றிப் புரட்டிப்போட்டது.

‘ரஜினி - பாலாஜி கூட்டணிக்கு முதல் படமாக அமைந்த பில்லா, பல பழமைகளை உடைத்தெறிந்தது. கதாநாயகன் என்பவன் நல்லவன், மது அருந்தவோ புகைபிடிக்கவோ மாட்டான், ஊருக்கு உழைப்பவனாக இருப்பான். அவன் செய்யும் தொழில் எதுவாயினும் அது நேர்மையானதாக இருக்கும் என எம்ஜிஆர் கைகொண்டிருந்த இந்த சினிமா ஃபார்முலாவை ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மாற்றியது. ‘பில்லா’ ரஜினியை, எம்ஜிஆர் ஃபார்முலாவில் பார்க்க வந்த அவருடைய ரசிகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கொடுத்தது பில்லா.

தங்கள் அபிமானத்துக்குரிய கதாநாயகன் ஒரு கடத்தல்காரன் என்றபோது திக்கென்றிருந்தது. உள்ளூர் போலீஸ் தொடங்கி, உலக போலீஸ் வரை தேடிக்கொண்டிருக்கும் ‘நொட்டோரியஸ் கிரிமினல்’. சின்ன சந்தேகம் வந்தாலும் நண்பனைக்கூட சுட்டுத்தள்ளும் கொலைகாரன். வாயில் புகையும் ஸ்டைலான ஸ்மோக்கிங் பைப், விதவிதமான வண்ணங்களில் கோட் ஷூட், மிதமான ஸ்டைல் என வேறுபாடு காட்டிய ரஜினியின் ‘பில்லா’ வில்லத்தனத்தை வியந்து ரசித்தார்கள். பில்லாவின் வேடத்தை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக, பழிக்குப் பழிவாங்க, அவனது கூட்டத்துக்குள் ஊடுருவும் கதாநாயகி, பில்லாவைப் பிடிக்கத் திறமையாகப் பொறி வைக்கும் காவல் துறை அதிகாரி என அழுத்தமான துணை கதாபாத்திரங்கள் அசரடித்தன.

முதல் இரட்டை வேடம்!

‘சரி என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம்’ என்று பொறுமை காத்த ரசிகர்களுக்கு, ரஜினி பாதிப் படத்தில் செத்து விழுந்தபோது கிட்டத்தட்ட பித்தம் கலங்கியதுபோல் ஆனது. அந்த அதிரடித் திருப்பத்தில் ‘வெத்தலையப் போட்டேண்டி... சக்தி கொஞ்சம் ஏறுதடி...’ என்று (அமிதாப்பின் ‘டான்’ படத்தில் இடம்பெற்ற ‘கைக்கே பாணு பனாரஸு வாலா’ பாடலின் பதிலீடு) பாடிக்கொண்டு, வளைந்து, நெளிந்து, குழைந்தபடி, உணர்வால் பெண் தன்மையை மனதில் தேக்கிய ஒரு நேர்மையான நாட்டுப்புறக் கலைஞனாக, ராஜப்பாவாக ரஜினி திரையில் தோன்றியபோது உற்சாகத் துள்ளல் போட்டார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

‘மை நேம் இஸ் பில்லா…’, ‘வெத்தலையப் போட்டேண்டி’ ஆகிய இரண்டு பாடல்களின்போது திரையரங்குகள் அல்லோலகல்லோலப்பட்டன. அந்த இரு பாடல்களின்போது எழுந்து ஆடவும் ஸ்டைல் காட்டவுமே ரசிகர்கள் திரும்பத் திரும்ப ‘பில்லா’ திரையரங்குகளுக்கு படையெடுத்தார்கள். அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு ஸ்டார் நடிகருக்கு, முதலாவது இரட்டை வேடமே இத்தனை வித்தியாசமாக அமைந்தால் எப்படிக் கொண்டாடாமல் இருப்பார்கள்!

இறந்துபோகும் பில்லா வேடம் மீது படிந்திருந்த அழுக்கை, ராஜப்பாவாக இருந்து பில்லா போல் நடிக்கும் ‘லைஃப் ரிஸ்க்’ கேரக்டரில் ரஜினியின் அட்டகாசமான நடிப்பு சாமார்த்தியமாக மறைத்துவிட்டது. ஒரு பெண்ணைப் போல் வாயில் போட்டு மெல்லும் வெற்றிலை எச்சில் வழிய... அதை பொளிச்சென்று துப்பிவிட்டு, காவல் உயரதிகாரி பாலாஜியைப் பார்த்து.. “வாயத் தொறந்தா பொட்டு பொட்டுனு பில்லா சுடுவான்னு சொல்றீங்க..! எனக்கென்ன தெரியும்ம்ம்..? இட்லி, தோசை சுடுவேன்” என்று அப்பாவியாக கொஞ்சம் இழுத்துப் பேசும் ராஜப்பா கதாபாத்திரம், ரஜினியின் நடிப்புத் திறமைக்கு இன்னொரு உதாரணக் கதாபாத்திரமாக மாறிப்போனது.

ரீமேக் விருப்பம்

பில்லாவின் பிரம்மாண்ட வெற்றியைக் கண்ட ரஜினி, ‘ஏற்கெனவே வெற்றிபெற்ற பிறமொழிப் படங்களின் ரீமேக்கில் நடிப்பது வெற்றிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே செல்ல சிறந்த வழியாக இருக்கும் என்று நம்பினார். அதன்படி அமிதாப் பச்சன் நடித்து ஹிட்டடித்த கோபக்கார இளைஞன் வேடங்களைத் தமிழில் செய்யத் துடித்தார். அவற்றில் அடுத்து வெளியான படம்தான் அமிதாப் நடித்து இந்தியில் வெளியான ‘அமர் அக்பர் அந்தோணி’ இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக். அதை ‘ராம் ராபர்ட் ரஹீம்’ என்று தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கினார், அன்று படங்களில் நடிப்பதிலிருந்து விலகி, இயக்குவதில் ஆர்வம் காட்டிய மூத்த கதாநாயகி நடிகையான விஜயநிர்மலா.

மூன்று சகோதரர்களின் கதையான அந்தப் படம், அதே தலைப்பில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானபோது ராம் வேடத்தில் ரஜினி நடித்தார். படம் சுமாராக இருந்தபோதும் ரஜினியைக் காணும் அவருடைய ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையால் படத்தை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்கள். இதன்பின்னர், ரஜினியின் தோல்விப் படம்கூட முதலீட்டுக்கு மோசம் ஏற்படுத்துவதில்லை என்று புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள், அவருடைய கால்ஷீட்டைப் பெறுவதற்கு பலவித உத்திகளைப் பயன்படுத்தினார்கள். இந்த சுமார் படத்திலிருந்து ரஜினியை விழுந்து எழுந்த குதிரையாக துள்ளி ஓட வைத்தது, தேவர் பிலிம்ஸின் ‘அன்புக்கு நான் அடிமை’.

பத்து வயது முதல் விளம்பரங்களில் நடித்து வந்த பாஞ்சாபி பெண்ணான ரதி அக்னிஹோத்ரியை, அவருடைய 19-வது வயதில், தன்னுடைய ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜா, உடனடியாக ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்திலும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். கதைக்காக வரவேற்பு பெற்ற இந்த இரண்டு படங்களுக்குப் பின் ரஜினிக்கு ஜோடியாக ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் நடித்தார் ரதி. இந்தப் படம் ரதியை பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகி ஆக்கியது. கமல் தொடங்கி அமிதாப் வரை பாலிவுட்டில் குவிந்த இந்திப் பட வாய்ப்புகளால் திக்கித் திணறிப்போனார் ரதி. 

ரஜினியின் கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்ய அவர்கள் மீது பாலிவுட்டும் ஒரு கண் வைத்துக் காத்திருக்கத் தொடங்கியது.

‘பொல்லாத’ கோபக்கார இளைஞன்

இந்தப் படத்துக்குப் பிறகு, ‘ஜானி’யும், ‘பொல்லாதவ’னும் ரஜினியின் ராஜபாட்டையில் புதிய வசூல் வெற்றிகளாக அமைந்துபோயின. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிரேமத கனிகா’ படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று, தமிழில் முக்தா சீனிவாசன் இயக்கித் தயாரித்த படம்தான் ‘பொல்லாதவன்’. ரஜினியைப் பொல்லாத கோபக்கார இளைஞன் கதாபாத்திரங்கள் தீவிரமாக சூழ்ந்துகொண்டது. ‘நான்... பொல்லாதவன்… பொய் சொல்லதவன்... என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்’ என்று ரஜினி பாடிய பாடலை அவரது ரசிகர்களில் பலர் பொது இடங்களில் சத்தம் போட்டுப் பாடித் திரிந்தனர். பலர் அந்தப் படத்தில் ரஜினியின் ஹேர் ஸ்டைலை தங்களுக்கும் வைத்துக் கொண்டார்கள். அவரைப் போல் கருப்புக் கண்ணாடியையும் அணிந்து கொண்டு அலப்பறைவிட்டனர்.

‘பொல்லாதவன்’ படத்தின் தயாரிப்பில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. முக்தா பிலிம்ஸின் கதை இலாகாவினர் ரஜினிக்காக அமைத்த கதை அவருக்குப் பிடித்திருந்தபோதும், “சக்சஸ் கதையை ரீமேக் செய்வோம்... அதனால் அமிதாப் பச்சன், அப்பா - மகனாக நடித்து வெளியான ‘அதாலத்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை உடனே கைப்பற்றுங்கள்; நான் நடிக்கிறேன்” என்று ஆலோசனை சொன்னார் ரஜினி. இதற்காக மும்பைக்கு விரைந்த முக்தா சீனிவாசனுக்கும் அவரது சகோதரர் ராமசாமிக்கும் ஏமாற்றமே விஞ்சியது. முதல்நாள்தான் ‘அதாலத்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை பத்மாலயா பிக்சர்ஸ் வாங்கிவிட்டிருந்தார்கள். அதன் பின்னர் ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்றிருந்த ‘பிரேமத கனிகா’வின் ரீமேக் உரிமையை வாங்கப் பரிந்துரைத்தவர் ரஜினிதான்.

முதலில் ‘எரிமலை’ என்கிற தலைப்பை இயக்குநர் முக்தா சீனிவாசன் முடிவு செய்துசொல்ல.. “அது ரொம்ப ஓவரா இருக்கு சார்... ‘பொல்லாதவன்’ என்கிற டைட்டிலை வைத்துவிடுங்கள்” என்று ரஜினி சொன்னார். ‘பிரேமத கனிகா’ படத்தைப் பார்த்தபோது ரஜினியின் மனதில் ஓடிய தலைப்பு இது. தலைப்பு மட்டுமல்ல... ‘பொல்லாதவ’னில் தனது கதாபாத்திரத்துக்கு உடைகள், லுக் ஆகியவற்றை தானே முடிவுசெய்துகொண்டார் ரஜினி. சிம்லா, காஷ்மீர் என ‘பொல்லாதவன்’ படத்தின் ரிச்சான லொக்கேஷன்களை த்ரில்லுடன் பார்த்து ரசித்துக் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

‘பொல்லாதவன்’ வெற்றி, ரஜினிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. இனி படங்களின் எண்ணிகையை விட திட்டமிட்டபடி படத்தை முடிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுப்பது, அதுவும் வெற்றிக்கு உத்திரவாதம் உள்ள ரீமேக் கதைகளில் அதிகம் நடிப்பது என்கிற முடிவினை எடுத்தார். 'முள்ளும் மலரும்' படத்துக்கு ஊதியமாக 35 ஆயிரம், 'பைரவி' படத்துக்கு 50 ஆயிரம் என்று வளர்ந்த ரஜினி, ‘பில்லா’வுக்கும் ‘பொல்லாதவ’னுக்கும் தலா 3 லட்சம் என முன்னேறி, ‘முரட்டுக்காளை'க்கு 5 லட்சம் ஊதியம் பெற்று, தென்னிந்திய சினிமாவிலேயே அதிக ஊதியம் பெரும் நடிகராக 80-களிலேயே சாதனை படைத்துவிட்டார்.

இந்த சமயத்தில்தான், தன்னுடைய ‘டான்’, ‘அமர் அக்பர் அந்தோணி’ படங்களின் ரீமேக்குகளில் துறுதுறுவென ஸ்டைல் காட்டி நடித்திருந்த ரஜினியைச் சந்திக்க விரும்பி, சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு வந்தார் அமிதாப். அந்த சந்திப்பு அவ்வளவு நெகிழ்ச்சியாக அமைந்துபோனது.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE