சினிமா சிற்பிகள் - 5: ராபர்ட் வைய்ன்- எக்ஸ்ப்ரஷனிஸ சினிமாவின் தந்தை

By க.விக்னேஷ்வரன்

சினிமாவை இரண்டு வகைப்படுத்தலாம். யதார்த்த சினிமா மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சினிமா. மிகைப்படுத்தப்பட்ட சினிமா எனும் பதம் கேட்பதற்குச் செயற்கையாக இருந்தாலும், சரியான முறையில் அதைச் செயல்படுத்தினால் கோபம், பயம், வெறி, பித்து, வன்முறை போன்ற எதிர்மறை எண்ணங்களை அதி அற்புதமாகக் காட்சிப்படுத்த முடியும். ‘டார்க் ஜானர்’, ‘நாய்ர்’ வகைத் திரைப்படங்கள் மிகைப்படுத்தப்பட்ட சினிமாவின் முக்கிய வகைகள். ‘டார்க் ஜானர்’ மற்றும் ‘நாய்ர்’ வகைத் திரைப்படங்களின் ஆரம்பப்புள்ளி ஜெர்மனியில் உருவானது.

1910 முதல் 1930 வரை ஜெர்மனியில் பிரசித்தமாக இருந்த எக்ஸ்ப்ரஷனிஸம் என்ற கருத்தியலின் தாக்கத்தில் உருவானதே, டார்க் ஜானர் வகைத் திரைப்படங்கள். அதிலிருந்துதான் நாய்ர் மற்றும் நியோ நாய்ர் வகைத் திரைப்படங்கள் கிளைவிட்டு வளர்ந்தன. ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிஸ சினிமாவை உலகளவில் பிரசித்திபெறச் செய்தவர் ராபர்ட் வைய்ன்.

எக்ஸ்ப்ரஷனிஸ நாயகன்

1860-களில், ஜெர்மனியில் பிரபலமாக இருந்த மேடை நடிகர் கார்ல் வைய்னின் மூத்த மகனாக 1873 ஏப்ரல் 27-ல் ப்ரெஸ்லவ் என்ற ஊரில் பிறந்தார் ராபர்ட் வைய்ன். சட்டப் படிப்பை பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த ராபர்ட், தன்னுடைய 25-வது வயது முதல் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1912-ல் திரைத் துறைக்குள் நுழைந்தார். ‘தி வெப்பன்ஸ் ஆஃப் யூத்’ என்ற திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியும், அப்படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியும் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். அதையடுத்து இரண்டே வருடங்களில் ‘பெர்லினர் மெஸ்டர் ஃபிலிம்’ தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய இயக்குநராக வளர்ச்சியடைந்தார் ராபர்ட். இது மட்டுமன்றி வேறு பல தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல படங்கள் இயக்கிவந்தார்.

1914 முதல் 1918 வரை நடந்த முதலாம் உலகப்போரில், ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு அமைந்த வெய்மார் குடியரசு காலகட்டத்தில் மக்களைப் போரின் பாதிப்பிலிருந்து திசைதிருப்ப சினிமாவின் அவசியம் அதிகமானது. அதுமட்டுமல்லாமல், 1916-ல் வெளிநாட்டுப் படங்களுக்கு அப்போதைய ஜெர்மன் மன்னராட்சி தடைவிதித்ததால், உள்ளூர் திரைப்படத் துறை வளர்ச்சியடைய ஆரம்பித்தது. 1917-ல் ஜெர்மன் அரசு பல ஸ்டுடியோக்களைக் கைப்பற்றி அரசுடைமையாக்கி, ஊஃபா (UFA- Universum Film-Aktiengesellschaft) என்ற அரசு சார்பான தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியது. அரசிடமிருந்து தப்பிய சில ஸ்டுடியோக்களில் ஒன்றுதான் ‘டெக்லா ஃபிலிம்ஸ்’.

தனியார் நிறுவனங்களுக்கு அளவிடப்பட்ட மின்சார விநியோகம் உட்பட பல சட்டதிட்டங்களை வகுத்திருந்தது அரசாங்கம். மின்சாரப் பற்றாக்குறை, அரசாங்க நெருக்கடி இவற்றுக்கு மத்தியில் ‘டெக்லா’ நிறுவனத்துக்காக ராபர்ட் வைய்ன் இயக்கிய திரைப்படம்தான் ‘தி கேபினட் ஆஃப் டாக்டர் கேலிகாரி’(1919). அக்காலகட்டத்தில் கவனம் ஈர்த்த எக்ஸ்ப்ரஷனிஸ கருத்தியலின் தாக்கத்தோடு இயக்கப்பட்ட இத்திரைப்படம், உலக சினிமாவின் போக்கையே மாற்றி அமைப்பதற்கான முதல் படியாக அமைந்தது.

இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெனியூன்’(1920) என்ற திரைப்படத்தை இயக்கினார் ராபர்ட். இப்படம் படுதோல்வியடைந்தது. மனம் தளராத ராபர்ட் ‘பேனிக் இன் தி ஹவுஸ் ஆஃப் ஆர்டோன்’(1920), ‘எ வுமன்ஸ் ரிவெஞ்ச்’(1921) போன்ற படங்களை இயக்கினார். இறுதியாக 1922-ல் சொந்தமாக ‘லியானார்டோ ஃபிலிம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பல படங்களை இயக்கினார். ‘தி கேபினட் ஆஃப் டாக்டர் கேலிகாரி’ திரைப்படம் மற்றும் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத் தழுவி எஸ்ப்ரஷனிஸ முறையில் ராபர்ட் எடுத்த ‘ராஸ்கோல்னிகோவ்’(1923), இயேசு நாதரின்சிலுவையேற்றத்தை மையமாகக் கொண்ட ‘I.N.R.I' (1923) ஆகியபடங்கள் அவரது மேதைமையின் அடையாளமாகக் கொண்டாடப் படுகின்றன.

1933-க்குப் பிறகு ஜெர்மனியில் நாஜி படையின் ஆதிக்கம் அதிகமானதும் பலதிரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சுதந்திரமாகச் செயல்படும் திரைத் துறையைஅரசாங்கத்தின் எதிரி போல் பார்த்ததுநாஜி படை. பல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் உயிருக்குப் பயந்துநாட்டைவிட்டு வெளியேறினர். 1933-ல், ராபர்ட் வைய்ன் இயக்கிய ‘டைஃபூன்’ திரைப்படம் ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டது. அப்போது ஹங்கேரி நாட்டுக்குத் தப்பிச்சென்றார் ராபர்ட். பின்பு பிரிட்டன், பிரான்ஸ் என்று வெவ்வேறு நாடுகளில் வசித்த ராபர்ட், ‘தி கேபினட் ஆஃப் டாக்டர் கேலிகாரி’ படத்தை ஒலியுடன் கூடிய திரைப்படமாக மறு உருவாக்கம் செய்ய முயன்றார். அம்முயற்சி பலனளிக்காமல் போகவே, இறுதியாக ‘அல்டிமேட்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் வைய்ன், இத்திரைப்படத்தை முழுமையாக இயக்கி முடிக்காமலேயே, 1938 ஜூலை 17-ல் தன்னுடைய 65-வது வயதில் காலமானார். அவருடைய நண்பரான ராபர்ட் சியோட்மேக் ‘அல்டிமேட்டம்’ திரைப்படத்தின் மீதிக் காட்சிகளை இயக்கி முடித்தார்.

ஜெர்மானிய எக்ஸ்ப்ரஷனிஸம்

யதார்த்தவியலின் (Realism) நேர் எதிர் கருத்தியலே எக்ஸ்ப்ரஷனிஸம் (மிகை வெளிப்பாடு). உள்ளதைஉள்ளபடி பாசாங்குகள், மிகைப்படுத்துதல் ஏதுமின்றிகாட்டும் யதார்த்த சினிமா ஒரு வகையான கலை வடிவமென்றால், உண்மைத் தன்மையைக் கலைத்துப் போட்டு,மிகைப்படுத்திக் காட்சிப்படுத்தும் எக்ஸ்ப்ரஷனிஸம் வேறு வகையான நுண்ணிய கலை வடிவம்.

பெரும்பாலும் பயம், மனக்குழப்பம், கோபம், வெறி, வன்முறை போன்ற எதிர்மறை எண்ணங்களைக் காட்ட எக்ஸ்ப்ரஷனிஸம் பயன்படுத்தப்படுகிறது. கோணல்மானலான கதவுகளும், ஜன்னல்களும். வித்தியாச வடிவிலான கட்டிடங்கள், அதீத ஒப்பனை கொண்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமானதாகவும் காட்சியின் / கதாபாத்திரத்தின் கோரத்தைக் காட்டவும் பயன்படுத்தப்படும் ஒளி அமைப்பு இவையனைத்தும் எக்ஸ்ப்ரஷனிஸத்தின் அங்கங்கள்.

மனக்குழப்பம் அடைந்த அல்லது அதீத எதிர்மறைச் சிந்தனைகளுக்கு உள்ளான கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சூழலில் கதை நகரும்போது அக்கதாபாத்திரத்துடன் நம்மால் ஒன்றிவிட முடியும். உதாரணத்துக்கு, ‘பேட்மேன்’ கதைகளில் வரும் கோத்தம் நகரம், ஜோக்கர், ரிட்லர் போன்ற கதாபாத்திரங்கள் எக்ஸ்ப்ரஷனிஸத்தின் வெளிப்பாடுகள் தான். ஓவியம், கட்டிடக் கலையில் பிரபலமாக இருந்த எக்ஸ்ப்ரஷனிஸம் ‘தி கேபினட் ஆஃப் டாக்டர் கேலிகாரி’ படத்துக்குப் பிறகு திரைத் துறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. போரில் தோல்வியடைந்த பின் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், நிர்வாகச் சீர்கேடு என்று பெரும் துயரங்களுக்கு மத்தியில் தொடர்ந்து மன அழுத்தத்துடன் வாழ்ந்த ஜெர்மானிய மக்களால், எதிர்மறை எண்ணங்களைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தும் இவ்வகைத் திரைப்படங்களுடன் எளிதாக உளவியல் ரீதியாக ஒன்ற முடிந்தது.

பார்வையாளர்களின் ஆதரவைக் கண்டு ‘ஊஃபா’ மற்றும் பல வெளிநாட்டுத் தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குநர்களும் எக்ஸ்ப்ரஷனிஸ கருத்தியலைத் தங்கள் படங்களில் கையாள ஆரம்பித்தனர். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் தன்னுடைய இளம் வயதில் ‘ஊஃபா’-வில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில் எக்ஸ்ப்ரஷனிஸ முறையை அறிந்துகொண்டதால்தான், பின்னாட்களில் தன்னுடைய பல படங்களில் அதன் தாக்கத்தை மேதைமையுடன் வெளிப்படுத்தியிருப்பார்.

‘தி லாட்ஜர்’ (1923) திரைப்படத்தில் எக்ஸ்ப்ரஷனிஸ வகை பின்னணியை ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அவரது புகழ்பெற்ற ‘சைக்கோ’ திரைப்படத்தில், குளியலறைக் கொலைக் காட்சியில் திரைமறைவில் நாதன் பேட்ஸ் கதாபாத்திரம் காட்டப்படும். அது, ஜெர்மன் திரைப்படமான ‘நோஸ்ஃபெராட்டு’-வின் தாக்கத்தில் விளைந்ததுதான். 1933-க்குப் பிறகு நாஜி படைகளின் அச்சுறுத்தலால் ஜெர்மனியைவிட்டு வெளியேறிய பல ஜெர்மன் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகம் முழுக்க தங்களுக்கு வாய்ப்பளிக்கக் காத்திருந்த பல நாடுகளுக்குச் சென்றனர். அவர்களுடன் எக்ஸ்ப்ரஷனிஸ கருத்தியலும் சென்றது.

இப்படி உலகம் முழுக்க இவ்வகைத் திரைப்படங்கள் பிரபலமடைந்தன. குறிப்பாக, 1930 முதல் 1940 வரையில் டார்க் ஜானரில் ஹாலிவுட்டில் உருவான பல படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் அந்தஸ்துடன் இருக்கின்றன. இதற்குப் பின்னணியில் ஜெர்மானிய சினிமாவின் பங்கும், ராபர்ட் வைய்ன் போட்டுக்கொடுத்த பாதையும் இருக்கிறது. அடுத்த முறை ஜேம்ஸ் கேமரூன், டேவிட் ஃபின்ச்சர், மனோஜ் நைட் ஷியாமளன் படங்களைப் பார்த்து வியக்கும் போது ராபர்ட் வைய்னையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE