கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
அரசியல் களத்தையே உலுக்கிவிடும் என்கிற ரீதியில் ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை, ஒரு வழியாக வெளியாகி விட்டது. அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் இந்த அறிக்கை தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்திருக்கின்றன.
நழுவும் திமுக அரசு
“தமிழகத்தின் கடன் கடன் சுமை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் வருமானமோ நான்கில் ஒரு பகுதியாகக் குறைந்திருக்கிறது. அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது” என்கிறது வெள்ளை அறிக்கை. ஆனால், எப்படி இந்தச் சூழல் வந்தது என்பதை அரசு பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கும் எனும் எதிர்பார்ப்பும் பொய்த்திருக்கிறது. பெருமளவில் வரியை ஏய்த்தவர்கள் குறித்த பட்டியலைக்கூட பழனிவேல் தியாகராஜனால் பட்டவர்த்தனமாக சொல்ல முடியவில்லை.
அறிக்கையின் 121-வது பக்கத்தில், “குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் சரியான ஆளுகை இல்லாததால், தற்போதைய பெரும்பாலான பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அரசியல் உள்நோக்கத்தைத் தவிர்ப்பதற்காக, நிதி நிலையின் சரிவிற்கான
காரணங்களை நாங்கள் தெரிந்தே இந்த அறிக்கையில் குறிப்பிட வில்லை” என்று கடந்து சென்றிருக்கிறார் நிதி அமைச்சர். அதே
நேரத்தில், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமின்றி செல்வந்தர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கும்கூட இலவசத் திட்டங்களும் சலுகைகளும் போயிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறது இந்த அறிக்கை.
எதிர் முகாமிலிருந்து வரவேற்பு
வழக்கம்போல திமுக கூட்டணிக் கட்சியினரும் ஆதரவாளர்களும் இந்த அறிக்கையை வரவேற்க, அதிமுக கூட்டணி கட்சிகள் இதைக் கடுமையாகச் சாடுகின்றன. விதிவிலக்காக பாமக இந்த அறிக்கையை விமர்சனத்துடன் வரவேற்கிறது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவிடம் கேட்டபோது, “ஆட்சிக்கு வந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று சொன்ன திமுகவினர், அதைச் செய்திருக்கிறார்கள். அரசின் நிதி நிலை குறித்த தகவல்கள் மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற வகையில் இதனை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் தேவையற்ற மானியங்கள் அதிகரித்துவிட்டன. 4 ஆயிரம் ரூபாய் மானியம் உள்ளிட்ட அரசின் பல உதவிகள் வருமானவரி செலுத்தும் பணக்காரர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதற்குக் காரணம், தமிழக மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் இல்லாததுதான். அந்தத் தகவல்களைத் திரட்டி இத்தகைய உதவிகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். அவரது வெளிப்படையான பேச்சு வரவேற்கத்தக்கது” என்றார்.
மேலும், “பயனற்ற இலவசங்கள், மானியங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அரசின் உதவிகள் தேவையானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலை. தமிழ்நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால், அது நிர்வாகச் சீர்திருத்தங்களின் மூலமாக செய்யப்பட வேண்டுமே தவிர மக்கள் மீது சுமையைச் சுமத்துவதன் மூலமாக இருக்கக் கூடாது என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை கூறியிருக்கிறார். அதைத் திரும்பவும் பதிவுசெய்ய விரும்புகிறேன்” என்றார் பாலு.
‘மக்களை ஏமாற்றும் செயல்’
ஆனால் பாஜகவோ, வெள்ளை அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளரான மதுரை ராம சீனிவாசனிடம் கேட்டபோது, “இது ஒயிட் ரிப்போர்ட் அல்ல. ஒயிட் வாஷ் ரிப்போர்ட். வெற்று அறிக்கை. திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதற்கு முன்பேகூட இந்த மாதிரி ஒரு அறிக்கையைத் தயார் செய்திருக்கலாம். ஏனென்றால், நிதி அமைச்சர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் அரசுக் கோப்புகளில் இருந்து பெறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆன்லைனில் கிடைக்கிற தரவுகளை வைத்துத்தான் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் ஆயிரம் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, ‘இப்போது நாங்கள் வெள்ளை அறிக்கை கொடுக்கிறோம். நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. அரசு திவாலாகும் நிலையில் இருக்கிறது’ என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல்” என்றார்.
இதுதொடர்பாக மேலும் அவர் பேசுகையில், “எல்லாவற்றுக்கும் மேலாக திமுக முன்பு என்னவெல்லாம் நிலைப்பாடு எடுத்ததோ, அதற்கு நேர் எதிரான கருத்துக்களை நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். உதாரணமாக, மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டம் வந்தபோது, அதில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தப்படும் என்று சொல்லியிருந்தோம். அதைத் திமுகவினர் எதிர்த்தார்கள். இன்று அதே கட்சியின் அமைச்சர், ‘இலவச மின்சாரமாக இருந்தாலும், மீட்டர் பொருத்த வேண்டும். மின்சாரத் திருட்டை அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும்' என்று சொல்கிறார். அதேபோல உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், அவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என்கிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுத்ததே திமுகதான். மது விலக்கு கேட்டுப் போராடியவர்கள், இன்று டாஸ்மாக் மூலம்தான் வருமானம் வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதன்மூலம் இனி தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டு வர மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
ஆக, எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாழ்படுத்துகிற முயற்சியைச் செய்த திமுக, ஆட்சியில் உட்கார்ந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறது. அதிக வட்டி ஆசை காட்டி ஏமாற்றும் போலி நிதி நிறுவனங்கள் போல நிறைவேற்றவே முடியாது என்று தெரிந்தே வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது திமுக” என்றார்.
கலவையான விமர்சனங்கள்
வெள்ளை அறிக்கை குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றி அரசியல் சாராத ஆளுமைகளிடம் பேசினோம்.
“திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தாமதமாகும் என்று தெரிகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள் என்று தோன்றவில்லை. பேருந்துக் கட்டணத்திலும், மின்சாரக் கட்டணத்திலும் ஏழைகளுக்குச் சலுகை தருவது நியாயம்தான். ஆனால், பணக்காரர்களுக்கும் இலவசம், சலுகை என்பது சரியானதல்ல. சிறு குறு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைப் பெரு விவசாயிகளுக்குத் தருவது நியாயமற்றது. இந்த நாட்டில் மட்டும் தான் தண்ணீர் பள்ளத்திலிருந்து மேட்டை நோக்கிப் பாய்கிறது. அது தொடரக்கூடாது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே, இதனை வரவேற்கிறேன்” என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன்.
தொழில் முனைவோரான ஓசூர் அழகேச பாண்டியனோ, “சில துறைகள் எவ்வாறு சீரழிந்து கிடக்கின்றன என்பதைப் படிக்கும்போதே அதிர்ச்சி ஏற்படுகிறது. அதே சமயம் இந்த ஆவணம் எந்தத் தீர்வையும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. இந்த அரசுக்குச் சில சார்பு நிலைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது தனியார்மயம். அதை நேரடியாக முன்வைத்தால் எதிர்ப்பு எழும் என்பதால் ஆங்காங்கே அதற்கு ஆதரவான வார்த்தைகளால் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இரண்டாவதாக, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், போக்குவரத்து கட்டணம், சொத்துவரி ஆகியவற்றை உயர்த்துவது பற்றிய பரிந்துரைகள். இவையெல்லாம் காலப்போக்கில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம், ஒரே நேரத்தில் அனைத்தையும் பொதுமக்கள் தலையில் ஏற்றினால் அது அராஜகம்.
வரி வருவாய் காலப்போக்கில் எவ்வாறு மேம்பட முடியும் என்பதற்கான உதாரணங்களோ, வழிமுறைகளோ அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை. அதுவும் நூறு ஆண்டுகள் காணாத பொருளாதார நெருக்கடிகள், நியோலிபரலிசத்தின் (தாராளமயம்) வீழ்ச்சி என அனைத்தும் கூடிவரும் சமயத்தில், பொதுமக்களின் வாழ்க்கைச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக அரசுக்கு நிதி வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது கவலை தருகிறது. இது பட்ஜெட்டிலும் எதிரொலிக்கும்” என்கிறார்.
நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பனோ, “இதுவரை மக்களுக்குத் தெரிந்திராத பல விஷயங்களைப் பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பை வெள்ளை அறிக்கை வழங்கியிருக்கிறது. எனவே, இனி எந்த அரசு வந்தாலும் இந்த நடைமுறையைத் தொடர வேண்டும் என்றே சொல்வேன். ஒவ்வொரு தனிநபர் தலையிலும் இவ்வளவு கடன் இருக்கிறது என்று அரசு சொல்வதில் அரசியல் இருக்கலாம். ஆனால், அந்தத் தகவல் உண்மையானதுதானே? இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்து, கடைசியில் இலவசங்களின் ராஜ்ஜியமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்டார்கள். அரசின் நிதிநிலை மோசமானதற்கு இதுவும் ஒரு காரணம். தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்றால், வரி போட வேண்டிய இடத்தில் போட்டு, இலவசங்களைக் குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்தே ஆக வேண்டும். அதற்கான பாதையில் அரசு செல்லும் என்று நம்புகிறேன்" என்கிறார்.
வெள்ளை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, “நிதி நிலை சீர்கெட யாரெல்லாம் காரணமோ அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு அரசின் கஜானாவில் சேர்க்க வேண்டும்” என்று டி.டி.வி. தினகரன் தொடங்கி சாதாரண மக்கள் வரை வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். உண்மையாகவே நிதி நிலைமையச் சீர் செய்யத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என்றால், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாகத் தொடங்க வேண்டும். அந்த நடவடிக்கைகளையும் வெள்ளை அறிக்கையைப் போலவே ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்!