வேலுமணி கைது எப்போது?- ரெய்டுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகள்!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

எதிர்பார்த்தபடியே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது திமுக அரசு. கோவை, சென்னை, திண்டுக்கல், காஞ்சிபுரம் நகரங்களில் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் மாபெரும் ரெய்டை நடத்தி முடித்திருக்கிறார்கள். கூட்டுச்சதி, மோசடி, லஞ்சம் - ஊழல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

தமிழக வரலாற்றில் இதற்கு முன்னர் எத்தனையோ ரெய்டுகள் நடந்திருந்தாலும், ஒரு முன்னாள் அமைச்சர் வீடு சோதனை யிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமி ஆர்ப்பரித்ததும், புகாருக்குள்ளான தலைவர் ரெய்டு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு எம்எல்ஏ விடுதிக்குள் சென்று தங்கி, கைது நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டதும் இதற்கு முன் நடந்திராதது.  

இனிதான் இருக்கு கச்சேரி!

2014 முதல் 2018 வரை எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் 810.83 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்பந்தப் பணிகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் ஆகியோர் கொடுத்த புகார் மனுக்கள்தான் இன்றைக்கு வேலுமணியைச் சட்ட வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கின்றன.  

உயர் நீதிமன்ற விசாரணையில் நீண்ட காலம் இருந்த இந்த வழக்குக்கு முகாந்திரம் இல்லை என அதிமுக ஆட்சியில் மறுத்துக்கொண்டிருந்த அரசுத் தரப்பு, திமுக ஆட்சி வந்த பின்பு முகாந்திரமும் ஆதாரங்களும் இருப்பதாகச் சொல்லி நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பது இதில் ஹைலைட். இதன் மூலம் எஸ்.பி. வேலுமணி, அவர் சகோதரர் அன்பரசு, தொழில் முறை கூட்டாளிகள் சந்திரசேகர், சந்திர பிரகாஷ் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் பலர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  “தற்போது போடப்பட்டுள்ள வழக்கு 2018-க்கு முந்தைய காலத்தில் நடந்த பணிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பானது மட்டுமே. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் உள்ளாட்சித் துறையில் போடப்பட்ட ஒப்பந்தப் பணிகள் இதைப்போல் ஆயிரம் மடங்கு தேறும். இதுவரை வந்தது கொஞ்சம்; இனி வரப்போவதுதான் ஏராளம். அப்ப இருக்கு கச்சேரி!” என்று அதிமுக சீனியர்களே கிசுகிசுக்கிறார்கள்.

வேலுமணி வளர்ந்த கதை

வேலுமணியின் அப்பா பழனிசாமி, அண்ணன் அன்பரசு இருவரும் ஆரம்பத்தில் சிறு, சிறு ஒப்பந்தப்பணிகள் எடுத்து
செய்துவந்திருக்கிறார்கள். 1991-96 கால கட்டத்தில் அதிமுக பேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.ராஜூவிடம் உதவியாளராக வேலை செய்துவந்தவர் வேலுமணி. பின்னாளில் முன்னாள் கால்நடைத் துறை அமைச்சர் ப.வே.தாமோதரன் மூலம் சசிகலா உறவினர் ராவணன், எம்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு வேலுமணி நெருக்கமானார். இவர்கள் மூலம் அதிமுக ஒன்றியச் செயலாளராகி, 2001-ல் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராகவும் ஆனார். இதனால் ஒப்பந்ததாரராக அண்ணனும், அரசியல்வாதியாக தம்பியும் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

2006 தேர்தலில் பேரூர் தொகுதி கே.பி.ராஜூவுக்கே தரப்பட, அவர் மீது ஏற்கெனவே இருந்த ஒரு எப்.ஐ.ஆரைத் தூசுதட்டி எடுத்து அதிமுக தலைமைக்குத் தந்து, அந்த சீட்டை அடுத்த நாளே தனக்கு வாங்கினார் வேலுமணி. அந்தத் தேர்தலில் வென்று பேரூர் எம்எல்ஏ-வாகவும் ஆனார். அது திமுகவின் ஆட்சி. மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு புனரமைப்பு திட்டம் (கோவைக்கு மட்டும் சுமார் 3 ஆயிரத்து 187 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு) அமலுக்கு வர, பலருக்கும் ஜாக்பாட் அடித்தது. அதில் பெரிய ஒப்பந்தப் பணிகள் வேலுமணி சகோதரர்களுக்கு வாய்த்தது. அதிலும் செம்மொழி மாநாட்டு பணிகளின் (சுமார் 100 கோடி ரூபாய்) பெரிய குத்தகைதாரர்கள் இவர்களே. அப்போது திமுக புள்ளிகளை வேலுமணி தரப்பு ‘தரமாக’ கவனித்ததாக பேச்சும் உலவியது. அதுதான், இன்றைக்கும் உள்ளூர் திமுக புள்ளிகளுடன் வேலுமணியை இணைத்துப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்கான ஆதார சுருதி.

2011-ல் தொகுதி மறுசீரமைப்பில் பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதியில் இணைந்து காணாமல் போக, அங்கே போட்டியிட்டு எம்எல்ஏ ஆன வேலுமணி, தொழில் மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் பதவிக்கும் வந்தார். சசிகலாவின் உள்ளே வெளியே நாடகத்தின் போது இடையில் பதவியிழந்து, பின்னர் மீண்டும் அமைச்சரானார்.  

ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றது என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் வேலுமணி சகோதரர்களுக்குக் கூடுதல் வசதியை தந்துவிட்டன. புதுப்புது தொழில். புதுப்புது நண்பர்கள், புதுப்புது கம்பெனிகள் உருவாயின. இந்த முறை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் வாகாக வாய்த்தது. ஆரம்பத்தில் கோவை என்றிருந்த ஒப்பந்தப் பணிகள் பிறகு மாநிலம் முழுக்க விரிந்தது. பணமும் எக்கச்சக்கமாகக் கொழித்தது. அதை வைத்து வேலுமணியும் அவரது சகாக்களும் ஏராளமாய் சாதித்துக் கொண்டதாக செய்திகள் பரபரக்கின்றன.

புலி வந்த கதை

வேலுமணி வீடுகளில் ரெய்டு நடந்ததும்,  “மிஸ்டர் வேலுமணி... மே 2 வரைக்கும் பொறுத்திருங்க. அப்புறம் பாருங்க. நீங்க உட்பட அத்தனை பேரும் ஊழல் வழக்கில் சிறைக்குள்ளே சட்டப்படி அனுப்புகிறேனா இல்லையான்னு பாருங்க” என தேர்தல் பரப்புரையின்போது ஸ்டாலின் பேசியது வைரல் ஆனது.  

2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த டிடிவி தினகரன், வேலுமணி வீட்டுக்கருகில் வேன் பிரச்சாரம் செய்தபோது, “வேலுமணிக்கு ஜெயில்தான்” எனக் கடுமையாக எச்சரித்தார். அவரைத் தொடர்ந்து பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின் அதை வழிமொழிந்தார். அதையே சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் முழங்கினார்.  

இதையெல்லாம் மனதில் வைத்தே, “எந்த நேரமும் என் வீட்டுக்கு ரெய்டு வரலாம்” என்று தன் சகாக்களிடம் சொல்லிவந்தார் வேலுமணி. போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடுகளிலும் அலுவலகங்களில் ரெய்டு நடந்த நேரத்தில், “என்னைத்தான் முதலில் தேடிவருவார்கள் என்று நினைத்தேன். இடம் மாறிப் போய்விட்டார்கள்” என்று கோவை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் பேசினார். இதோ அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி வந்தேவிட்டது.

உள்ளே வெளியே விருந்து

10-ம் தேதி காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்ததாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், காலை 8 மணிக்கே அதிகாரிகள் சோதனையை முடித்துவிட்டார்களாம். எனினும்,  “எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வரும் வரை இங்கிருந்து அசைய முடியாது” என்று சொல்லி, மாலை வரை வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார்களாம்.

வீட்டுக்கு வெளியே ரெய்டைக் கண்டித்து கோஷமிட்ட தொண்டர்களுக்கு ரோஸ் மில்க், பிரியாணி என விருந்து களைகட்டியது போலவே வீட்டுக்குள் டீ, காபி, கூல்டிரிங்க்ஸ், உணவு கொடுத்து உபசரித்தனராம். அந்த சமயத்தில் சென்னையில் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்த வேலுமணி, பிரத்யேக செல்போனில் ரெய்டு நடவடிக்கைகளை விசாரித்துக் கொண்டே இருந்ததாக அதிமுக தரப்புக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் கிசுகிசுத்தார்.  

யார் அந்தக் கறுப்பு ஆடுகள்?

‘‘ரெய்டு வரப் போறது ஒரு வாரத்துக்கு முன்னமே தெரியும். அது எந்த நேரம் என்பதை மட்டுமே முந்தின நாள் சொல்லியிருக்கிறார்கள். வீட்டில் இருந்தால் கைது செய்யப்படலாம் என்பதாலேயே, அதிகாலையே எம்எல்ஏ ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டார் வேலுமணி. எம்எல்ஏ ஹாஸ்டலில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவரை அவ்வளவு எளிதில் கைது செய்துவிட முடியாது. இதையும் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகளே அவருக்குச் சொல்லி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் மழைக்குக்கூட எம்எல்ஏ ஹாஸ்டல் பக்கம் போகாத வேலுமணி இப்போது போவாரா?” என்றார் அந்த வழக்கறிஞர். இந்த ‘லீக்’ விவரங்களைக் கேள்விப்பட்டு டென்ஷனான முதல்வர் ஸ்டாலின், விஜிலென்ஸ் டிஜிபி-யான கந்தசாமியை வரச்சொல்லி ஆலோசித்தாகச் சொல்கிறார்கள். வேலுமணிக்கு ஐடியா கொடுக்கும் அதிகாரிகள் யார் யார் எனும் பட்டியல் தயார் செய்யுமாறும் உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர்.

மறைமுக பேரமா?

இதற்கிடையே, வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை களை கிடப்பில் போடவைக்க வழி சொல்கிறோம் என்று சொல்லி மீடியேட்டர்கள் சிலர் வேலுமணி தரப்பிடம் பேரம் பேசியதாகச் சொல்கிறார்கள். ஆனால், டீலைக் கேட்டு மிரண்ட வேலுமணி தரப்பு, “எல்லாத்தையும் அவங்கட்ட அள்ளிக் குடுத்துட்டு நாங்க எங்க போறது” என்று கேட்டு பின்வாங்கி விட்டதாம்.
இதற்கிடையே மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் சென்னை அதிகார மையத்திடம் சரணடைந்து விட்டதாகவும், அவர்களுக்கு, ‘ரெய்டு இருக்கும்; கைது இருக்காது’ என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.  

ஆக, வேலுமணிக்கு எதிராக வேகமாகவே சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டது திமுக அரசு. எந்த நேரத்திலும் வேலுமணி கைதுசெய்யப்படலாம் என்ற பேச்சு இப்போது பொதுமக்கள் மத்தியிலேயே ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. அநேகமாக பட்ஜெட் கூட்டர் தொடர் முடிந்ததுமே அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE