அஞ்சலி: அனைவராலும் நேசிக்கப்பட்ட ஆதீனம்

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

மதுரை ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் மறைவு தமிழ்ச் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகம் மட்டுமல்லாமல் அரசியல், சமூகம், கலை என மக்கள் சார்ந்த பணிகளில் இறுதிவரை ஈடுபட்டுவந்தவர் மதுரை ஆதீனம். தலைமுறை வேறுபாடுகளின்றி சமூக வலைதளங்களில் அவருக்கு எழுதப்படும் அஞ்சலிக் குறிப்புகளே அதற்கு சாட்சி!

சமண மத ஆதிக்கத்தில் இருந்த மதுரையில், சைவ மதத்தை அரச மதமாக்கிய பெருமைக்குரிய திருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மடம் மதுரை ஆதீனம். சமயக்குரவர் நால்வருள் ஞானசம்பந்தர் ஒருவருக்கே ஆதீனம் அமைக்கப்பட்டு, அது இன்றளவும் சிறப்பாக நடந்துவருகிறது. 1865 வரையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் போன்றவற்றையே நிர்வகித்த பெருமைக்குரியது இந்த மடம். படையெடுத்து வந்த திப்பு சுல்தான், மாலிக் காபூர் போன்றோரும் சரி, கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக மதுரைக்கு வந்த ராபர்ட் டி நோபிலி, சீகன் பால்கு, வீரமாமுனிவர் போன்றோரும் சரி மனமுவந்து பரிசளித்து மகிழ்ந்த மடம் மதுரை ஆதீன மடம். மருது சகோதரர்கள் வழங்கிய வெள்ளித்தேர் இன்னமும் இந்த மடத்தில் இருக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர், உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார்.

292-வது மடாதிபதி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டப் பகுதியான சீர்காழியில் பிறந்தவர் மதுரை ஆதீனம். அவரது பூர்ணாசிரமத் தந்தையான இராம.குமாரசுவாமி இலங்கையில் பணியாற்றியவர். பிறகு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தருமை ஆதீனத்தின் பக்தர். அதனால், பள்ளிப்படிப்பை முடித்த காலத்திலேயே அருணகிரிநாதர் தருமை ஆதீனத்தின் திருக்கூடத்து அடியவராகச் சேவை செய்திருக்கிறார். அந்த வகையில், தருமை ஆதீனத்தின் 26-வது சந்நிதானம் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்தான் மதுரை ஆதீனத்தின் ஞானத்தந்தை.

வாலிபப் பருவத்தில், அன்றைய ‘தமிழ் முரசு’ (தினகரன் குழும பத்திரிகை அல்ல) நாளிதழின் சென்னை நிருபராகப் பணியாற்றினார் மதுரை ஆதீனம். பிறகு தத்துவப் பாடத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார். அந்தக் காலத்திலேயே தருமை ஆதீனத்தில் சில நூல்களை இயற்றியுள்ளார். 1975 மே 27-ல், மதுரையின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். 291-வது ஆதீனம் சோமசுந்தர தேசிகரின் மறைவைத் தொடர்ந்து, 1980 மார்ச் 14-ல் மதுரை ஆதீனமாகப் பட்டம் சூட்டப்பட்டார்.

1983-ல் இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தபோது, அங்குள்ள சிவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதைக் கண்டித்து மதுரை வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் மதுரை ஆதீனம். மதுரையில் மன்னர் பாண்டித்துரைத் தேவரால் தோற்றுவிக்கப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்துக்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அதைக் கொண்டு அங்கொரு அறக்கட்டளை நடந்துவருகிறது.

மத நல்லிணக்கம்

தன்னுடைய தமிழ் ஆர்வத்தாலும், மத நல்லிணக்கப் பண்பாலும் புகழ்பெற்றவர் ஆதீனம். இஸ்லாம் மார்க்க மேடைகளிலும், கிறிஸ்தவ மேடைகளிலும் ஏறி சைவ சித்தாந்தமும் திருக்குரானும், திருஞான சம்பந்தரும் நபிகள் நாயகமும், ஞான சம்பந்தரும் ஏசுநாதரும் என்ற ஒப்புவமைகளுடன் அருளுரை நிகழ்த்தியவர். இது ஏதோ ஒரு காலகட்டத்தோடு நின்றுவிட்ட செயல்பாடல்ல. இந்தக் கரோனா காலத்தில்கூட, அமெரிக்க பக்தர் ஒருவரது ஏற்பாட்டில் இணைய வழியில் மும்மதப் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசியவர் மதுரை ஆதீனம்.

மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கியும் மத நல்லிணக்கத்துக்காகப் பணியாற்றியவர் மதுரை ஆதீனம். 1981, 82-ம் ஆண்டுகளில் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் மதக்கலவரம் மூண்டபோது அங்கு உடனடியாக விரைந்து சென்றவர் அவர். தொடர்ந்து அங்கே நான்கு மாத காலம் தங்கியிருந்து கூட்டங்கள் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் மக்களைச் சந்தித்து அமைதியை ஏற்படுத்தும் வேலையை அவர் செய்தார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட இருமத மக்களையும் கோட்டாறு மருத்துவமனையிலும், அந்தந்த ஊர்களிலும் சந்தித்து உடையும், உணவும் வழங்கி ஆசீர்வதித்தார்.

1981-ல் தென்காசி மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவம், மதக்கலவரமாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டபோது உடனடியாக அந்தப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, சைவ சமயப் பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத் தத்துவத்தையும் எடுத்துக்கூறி அவரவர் மதங்கள் அவரவருக்குப் பெரியது என்றும், ‘லக்கும்தீனுக்கும் வலியதீன்’ என்ற வரிகளைச் சுட்டிக்காட்டியும் அமைதியை ஏற்படுத்தினார். மீனாட்சி புரத்தில் பட்டியலின மக்களுடன் சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டு உணவருந்தினார். அப்போது ஆதீனத்தின் அருகில் அமர்ந்து உணவு உண்டவர், பிற்காலத்தில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்முகம் கொண்டவர்

இசையில் ஆர்வம் கொண்ட மதுரை ஆதீனம், நாகூர் ஹனிபாவின் பரம ரசிகர். அந்த ரசனை அவர்களது குடும்ப நண்பராகவும் ஆதீனத்தை மாற்றியது. பலமுறை ஹனீபாவின் வீட்டுக்கு ஆதீனம் சென்றிருக்கிறார். ஹனிபாவின் பாடல்கள் பலவற்றைத் தன்னுடைய குரலில் பக்தர்கள் முன்னிலையில் பாடிக்காட்டியவர். அதேபோல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையில், ஒரு மத நல்லிணக்கப் பாடலையும் ஆதீனம் பாடியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தில் உள்ள செப்பேடு, ஓலைச்சுவடிகள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களை எல்லாம் தொகுத்து மதுரை ஆதீன வரலாற்றை 2007-ல் புத்தகமாக வெளியிட்டார் அருணகிரிநாதர். திப்பு சுல்தான் மதுரை ஆதீன மடத்துக்கு நேரில் வந்து அன்றைய (282-வது) ஆதீனம் பாம்பணிநாத ஞானசம்பந்த தேசிகரிடம் உரையாடி, பூஜைப் பொருட்களுடன் ஆண் யானை ஒன்றையும் பரிசளித்த செய்தியை அந்த நூலில் மதுரை ஆதீனம் பதிவுசெய்துள்ளார். அதேபோல, மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக் காபூர் அன்றைய (237-வது) ஆதீனம் வேலாயுத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இரண்டு குதிரைகளைப் அன்புப் பரிசாக வழங்கிய செய்தியையும் பதிவுசெய்துள்ளார்.

அடுத்த ஆதீனம்

2012 ஏப்ரல் 27-ல் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்தார் அருணகிரிநாதர். பாலியல் குற்றச்சாட்டுள்ள ஒருவரை, மட சம்பிரதாயங்களை மீறி திடீரென இளைய ஆதீனமாக நியமித்ததற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதனால் எட்டே மாதத்தில் (டிசம்பர் 19) அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார் அருணகிரிநாதர். இந்நிலையில், ஆதீனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், தன்னை 293-வது ஆதீனம் என்று நித்யானந்தா அறிவித்து கடிதம் எழுதினார்.

எனினும், தருமை, திருவாடுதுறை ஆதீன கர்த்தர்களின் தலையீட்டால், இளைய ஆதீனம் சுந்தரமூர்த்தி சுவாமிகளே அடுத்த மதுரை ஆதீனமாகப் பட்டம் சூட்டப்பட இருக்கிறார். 1,500 ஆண்டுகள் பழமையான இந்த மடத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் செயல்படுவார் என்று நம்புகிறார்கள் பக்தர்கள். கூடவே, மதுரை ஆதீனம் விட்டுச்சென்றிருக்கும் மகத்தான மரபையும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொடர்வார் என்று நம்புவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE