நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?- ஆளும்கட்சியினரை சுட்டிக்காட்டிக்  கேட்கும் ஜெயக்குமார்!

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

எப்போதும் பரபரப்பாகவே இருந்துவரும் அதிமுக, தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருப்பதால் இன்னும் சூடாகியிருக்கிறது. இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான டி.ஜெயக்குமார் திமுக அரசைக் கேள்விகளாலும் கேலிகளாலும் துளைத்தெடுக்கிறார். ‘காமதேனு' மின்னிதழுக்காக அவரிடம் பேசினோம்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் நீங்கள். இங்கே எந்தப் பிரச்சினை யிலும் நீங்களோ மற்ற சபாநாயகர்களோ கண்ணீர் விட்டதில்லை. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவைத் தலைவர் கண்ணீர்விட்டுக் கதறுகிறாரே ஏன்?

தமிழக சட்டமன்றம் வேறு, இந்திய நாடாளுமன்றம் வேறு. மாநிலத்துக்கு மாநிலமே கருத்து மோதல்களும், அவை நடவடிக்கைகளுமே மாறும்போது, அகில இந்திய அவை என்பதால் அது வேறுவிதமாகத்தான் இருக்கும். மக்கள் பிரச்சினை களை ஆக்கபூர்வமாகப் பேசித் தீர்வுகாணவேண்டிய இடம் அது. அந்த இடத்தில் இப்படி வாரக்கணக்கில் அமளி நடக்கிற போது, இப்படி பொன்னான நேரத்தையும், மக்கள் பணத்தையும் வீணாக்குகிறார்களே என்கிற வருத்தம் அவைத் தலைவருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் மனசும்கூட வேறுபடும் இல்லியா? அவர் இளகிய மனசுக்காரர். அதனால் கண்ணீர் விட்டிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி கண்ணாடி உடைப்பு, ஜெயலலிதா சேலை இழுப்பு, விஜயகாந்த் நாக்கு துருத்தல் என்று பல பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனாலும் சபாநாயகர்கள் அவைக் காவலர்களைப் பயன்படுத்தியாவது அவையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஒருவேளை, தமிழகத்தைவிட டெல்லியில் அதீத ஜனநாயகம் இருப்பதுதான் பிரச்சினையா?

என்னுடைய முதல் பதிலிலேயே இதற்கான பதிலும் இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் கலாச்சாரம், பண்பாடு மாறுபடும். குஜராத், மேற்கு வங்கம், தமிழகம், உத்தர பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கலாச்சாரத்திற்கேற்பத்தான் அவை நடவடிக்கைகளும் இருக்கும். எனவே, தமிழகத்தையும், நாடாளுமன்றத்தையும் ஒப்பிட முடியாது.

தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களை வீட்டில் சந்திக்கலாம், அவர்களது கோரிக்கைகளை எதுவானாலும் அதை நிறைவேற்றுவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்வீர்கள் என்று உங்களைப் பற்றிச் சொல்வார்கள். பிறகேன் தேர்தலில் தோற்றீர்கள்?

அரசியல்ல நல்லவனா இருக்கலாம். நான் ரொம்ப நல்லவனா இருந்துட்டேன். அதனாலதான் தோத்துட்டேன்னு நினைக்கிறேன் (சிரிக்கிறார்). மக்களுக்குத் தெரியும் நான் எவ்வளவு சேவை செய்திருக்கேன்னு. எவ்வளவு நல்லது கெட்டதுகளுக்குப் போயிருக்கேன்னு. நான் நிதி அமைச்சராக இருந்தபோது, 16 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம்போட்டு வடசென்னையையே டெவலப் பண்ணுனேன். இப்பவும் தொகுதியில திரும்பின பக்கம் எல்லாம் என்னோட பெயர் தாங்கிய கட்டிடங்களைப் பார்க்கலாம்.

எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தொகுதிக்குள்ள தண்ணி நிற்காது, குடிசையே கிடையாதுன்னு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எல்லாம் செஞ்சேன். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். இன்னைக்கும் ராயபுரம் எம்எல்ஏ யாருன்னு கேட்டா, மக்கள் என் பேரைத்தான் சொல்லுவாங்க. எதிர்த்து நின்னு ஜெயிச்சவரு எம்எல்ஏ-ன்னு கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கலாம். ஆனா, மக்கள் மனசுல நான்தான் என்னைக்கும் எம்எல்ஏ!

எம்ஜிஆர் காலத்திலேயே திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் அதிமுக வெற்றிபெற்றது. இப்போது மீண்டும் சென்னை கைவிட்டுப் போயுள்ளது, அதிமுகவுக்கு வலுவான தலைமை இல்லாததைக் காட்டுகிறதா?

ஆளுங்கட்சியாக திமுக வந்திருந்தாலும், எதிர்பார்த்த வெற்றி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. புள்ளிவிவரத்தைப் பார்த்தால் எங்களுக்கும் அவர்களுக்கும் வெறும் 3 சதவீதம்தான் ஓட்டு வித்தியாசம். பல தொகுதிகள்ல வெறும் ஆயிரம் ஓட்டுகளில் தோற்றிருக்கிறோம். தலைவர் மறைவுக்குப் பிறகு கட்சி இருக்காது என்றார்கள். அம்மா இந்தக் கட்சியை நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தார். பிறகு அம்மா மறைந்ததும் அதிமுக ஒழிந்தது என்றார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சியையும் சின்னத்தையும் பாதுகாத்தார்கள். தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கிற ஒரு கட்சி இவ்வளவு தொகுதிகளைப் பெற்றிருப்பதே பெரிய வெற்றிதான்.

எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் இருந்தாலும் நீங்களும், சி.வி.சண்முகமும்தான் சசிகலாவைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். மற்றவர்கள் பயப்படுகிறார்களா அல்லது உங்களுக்கு சசிகலா மீது தனிப்பட்ட வெறுப்பா?

எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. எந்தக் கோப தாபமும் கிடையாது. எனக்கென்ன அவர் பங்காளியா, பகையாளியா? கட்சி நலனுக்காகவே நான் அப்படிப் பேசினேன். “சசிகலா அதிமுகவில் சேர்வதற்கு 100 சதவீதம் வாய்ப்பே கிடையாது” என்று ஒருங்கிணைப்பாளரும், “மீண்டும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தின்கீழ் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று இணை ஒருங்கிணைப்பாளரும் சொல்லிவிட்டார்கள். ஆக, ஒட்டுமொத்த கட்சியின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறேனே தவிர, அது என்னுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது.

எஸ்.பி.வேலுமணி வீட்டு ரெய்டை எப்படிப் பார்க்கிறீர்கள். இன்னும் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் ரெய்டு நடக்கும் என்கிறார்களே?

‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…’ என்ற சிவாஜி பாட்டுதான் நினைவுக்கு வருது. திமுக அமைச்சரவையில் இப்போதுள்ள அமைச்சர்கள் மீது மட்டும் சொத்துக்குவிப்பு உள்பட 82 வழக்குகள் இருக்கு. தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுகதான். தன் முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு மற்றவர்களைக் குறை சொல்லக் கூடாது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அதிமுகவைச் சிறுமைப்படுத்துகிற, கட்சியை அழிக்கிற வேலையைச் செய்வது வழக்கம்தான். கேஸைப் போட்டால் பேச மாட்டாங்க… அவங்க குரல்வளையை நசுக்கிடலாம்னு நினைக்கிறாங்க. அவங்க அப்பாவாலேயே முடியாததை ஸ்டாலினா பண்ணிடப் போறாரு? அடிக்க அடிக்க பந்து எழுவது போல், அடக்க அடக்க வீரியமா அண்ணா திமுக வளருங்கிறதுதான் வரலாறு.

வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனைத் தவிர பாஜகவினர் யாருமே கண்டிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக எதிர் பாஜக என்ற நிலை வர வேண்டுமென்றால், அதிமுக அழிவதே நல்லது என்று இதை எல்லாம் பாஜக ரசிக்கிறதா?

வானதி சீனிவாசன் அகில இந்திய பாஜக மகளிரணி தலைவி. அவர் கண்டித்தால், அது கட்சி கண்டித்தது என்றுதானே அர்த்தம்? எது நடந்தாலும் சரி. நீதிமன்றத்தை நாடி நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம். வழக்குகளுக்கு அஞ்சப் போவதில்லை.

தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை பற்றி..?

அது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை, வெள்ளரிக்காய். வெங்காயம். உரிக்க உரிக்க ஒண்ணும் இருக்காது. நிறைவேற்றவே முடியாத 505 வாக்குறுதிகளைக் கொடுத்து ஜெயித்த திமுக அதிலிருந்து தப்பிப்பதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக் கிறது. 2 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிவாரணம், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் 5 ரூபாய், டீசலுக்கு 4 ரூபாய், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய்  மானியம், மீனவர்களுக்குத் தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரமாக உயர்வு, கல்விக்கடன், விவசாயக் கடன், நகைக்கடன் ரத்து என்பது மாதிரி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டார்கள். “எப்போது நிறைவேற்றுவீர்கள்” என்று கேட்டால் “நாங்கள் என்ன தேதி போட்டா வாக்குறுதி கொடுத்தோம்” என்கிறார் நிதி அமைச்சர். பஸ், மின்சாரக் கட்டணத்தை ஏத்தப்போறோம் என்பதைச் சொல்வதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை. சட்ட மன்றம் கூடப் போகிறது. அங்கே வைக்காமல் வெளியே விட்டதே உரிமை மீறல். இன்னொரு பக்கம் அமைச்சர் கண்ணப்பன், பஸ் கட்டணம் ஏறாது என்கிறார். பட்ஜெட் சமயத்தில் இப்படி எல்லாம் வெளியில் பேசுவது மரபல்ல.

அதிமுக ஆட்சியில் வீட்டுக்கொரு செல்போன் உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள். ஆனால், தொடர்ந்து 10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் நிறைவேற்றாதது ஏன் என்று மா.சுப்பிரமணியன் கேட்டுள்ளாரே?

இன்றைக்கு செல்போன் இல்லாத ஆட்களே கிடையாது. எனவே, கொடுக்கவில்லை. ஆனா, தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு 2,500 ரூபாய் கொடுத்தோமே? இவர்களைப் போல, “நீட் தேர்வை ரத்து செய்வோம்” என்று பொய் சொல்லி, லட்சக்கணக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடினோமா? இந்தாண்டு பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வுக்கே தயாராகவில்லை. அவர்களைப் படிக்கவிடாமல் செய்தது திமுகதான். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, ஒரு பக்கம் சட்டப் போராட்டம் நடத்தினாலும் இன்னொரு பக்கம் மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தினோம். இவர்களைப் போல தவறாக வழிகாட்டவில்லை. நீட் தேர்வைக் கொண்டுவந்ததே திமுகதான் என்பதுகூட தெரியாமல், சுகாதாரத் துறை அமைச்சர் இருக்கிறார். என்னத்தைச் சொல்ல?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE