என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
உடலைத் தொட்ட வயோதிகம், உள்ளத்தைத் தொடவில்லை 84 வயது பத்மநாபனுக்கு. பணிநிறைவு பெற்ற ஆங்கிலத் துறைப் பேராசிரியரான இவர், முறைப்படி கற்றுக் கொள்ளாவிட்டாலும் சிற்பக் கலையிலும் கவனம் குவிக்கிறார். வெவ்வேறு காலகட்டங்களில் தண்ணீரில் மூழ்கிய மூவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். இவர் எழுதிய ‘கீட்ஸ் த வேதாந்தி’ ஆங்கிலப் புத்தகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிப் பாராட்டப்பட்டது. அண்மையில், ‘நடுவுப்பார்வையில் திருக்குறள் அறத்துப்பால்’ புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இத்தனைக்கும் நடுவில் பத்மநாபன் பிரபல குணச்சித்திர நடிகரும்கூட. விஜய் சேதுபதி நடித்த ‘வன்மம்’ படத்தில், அவரது தந்தையாக இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. நாகர்கோவிலை அடுத்த பறக்கையில் இருக்கும் அவரது இல்லத்தில் பத்மநாபனைச் சந்தித்துப் பேசினோம்.
நடித்துப் பார்ப்போமே!
“எனக்குள் இருந்த அனுபவச் செறிவை மக்களுக்கு பகிரவே 82 வயதில் எழுதத் தொடங்கினேன். ‘வன்மம்’, ‘அடைக்கலம்’, ‘திருடி’, ‘ஜெயங்கொண்டான்’ என ஏழெட்டுப் படங்களில் நடிச்சுருக்கேன். ‘வன்மம்’ படத்தில் சினிமாவைத் தாண்டி படப்பிடிப்பின்போதும் விஜய் சேதுபதி என்னை அப்பாவாகவே பார்த்தார். அடிக்கடி விசாரிப்பார்” படபடவென பேசிய பத்மநாபன், ‘வன்மம்’ பட வாய்ப்பு அமைந்த தருணம் குறித்துப் பேசினார்.
“என்னோட வீட்டுவாசலில் நின்றுகொண்டிருக்கும் போது ஒரு குழுவினர் வந்தாங்க. எங்க பகுதியில் படப்பிடிப்பு வைத்திருப்பதால் லொக்கேஷன் பார்க்க உதவும்படி கேட்டாங்க. அப்போ, பட இயக்குநர் ஜெய்கிருஷ்ணா திடீரென, ‘ஐயா... என்னோட படத்துல ஹீரோவுக்கு அப்பாவாக ஒரு தோற்றத்தைக் கற்பனை செஞ்சு வெச்சிருந்தேன். அதுக்கு நீங்க பொருத்தமாக இருப்பீங்க. அதை தெரிஞ்சுக்கத்தான் லொக்கேஷன் பார்க்கிறாப்ல உங்கள கூப்பிட்டோம்’ என்றார். இன்னொருவராக வாழ்ந்துகாட்ட நமக்குக் கிடைக்கும் வாய்ப்புதானே நடிப்பு. அதனால் அந்தப் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்” என்று சொன்ன பத்மநாபன், ஏராளமான குறும்படங்களிலும் நடித்துவருகிறார்.
சும்மா இல்லை இந்தச் சிற்பி!
சினிமாவில் நடித்தது போல் இவர் சிற்பியான கதையும் சுவாரஸ்யமானது தான். “ஒரு நாள் பைக்ல போயிட்டு இருக்கும் போது நல்ல மழையில மாட்டிக்கிட்டேன். மழைக்கு, சிற்பம் செய்யும் கூடத்துல ஒதுங்கினேன். அங்கே சிற்பி வேலை செய்வதை வெச்ச கண் வாங்காம பாத்துட்டே இருந்தேன். அதைப் பாத்துட்டு, ‘என்ன அண்ணாச்சி... சிலை செஞ்சுடுவீங்க போலயே’னு சிற்பி விளையாட்டா சொல்லி சிரிச்சார்.
அப்போ, ‘சும்மாவா இருக்கீங்க?’ னு ஒரு நாள் வழிப்போக்கர் ஒருவர் என்னைக் கேட்டது நினைவுக்கு வந்துச்சு. உடனே, சிற்பம் செதுக்கும் கல்லை வாங்கிக்கொண்டு போய் சின்னதா ஒரு பிள்ளையார் செய்தேன். அதை என்வீட்டிலேயே கோயில்கட்டி பிரதிஷ்டை செய்தேன். இதுபோக நான் செய்த நாகர் விக்கிரகங்களை அக்கம், பக்கத்துக் கோயில்களில் வைத்துள்ளேன்” என்று சொன்ன பத்மநாபன், தான் வடித்த சிற்பங்களைக் கொண்டுவந்து நம்மிடம் காட்டினார்.
ஆண், பெண் கால்கள், மானின் முகத்தோற்றம், காண்டாமிருகத்தின் உடல், வள்ளுவரின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதைச் சொல்வதைப் போன்ற ஒரு சிற்பம் என தனக்குத் தோன்றியதை எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறார். வெவ்வேறு தருணங்களில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேரைக் காப்பாற்றியவர் என்பது பத்மநாபனைப் பற்றிய கூடுதல் செய்தி.
அதுபற்றி சொல்லும்போதே பத்மநாபனின் முகத்தில் ஏகபூரிப்பு. “ஒரு பெரு மழைக்காலத்தில் குளத்தங்கரையில் நடந்து போய்ட்டு இருந்த எங்க ஊரைச் சேர்ந்த போற்றிவேல் என்பவர் தலைசுற்றி குளத்துக்குள்ள விழுந்துட்டார். அவரோட குடை தண்ணீரில் அலசுவதைப் பார்த்துத்தான் அவர் குளத்துக்குள்ள விழுந்துட்டதே தெரிஞ்சுது. உடனே, குளத்துக்குள்ள குதிச்சு அவரைக் காப்பாத்துனேன். இதே மாதிரி வெவ்வேறு சமயங்கள்ல மூணு பேரோட உயிரைக் காப்பாத்துற வாய்ப்பு அமைஞ்சது இறைவன் கொடுத்த வரம்” என்று சொன்னவர் மேலும் பேசுகையில், ‘சதாவதானி செய்குதம்பி பாவலர், ஆறுமுகம் பிள்ளை, கே.சி.தாணுவுக்குப் பின்பு நம் மண்ணிலிருந்து மக்களுக்குப் பயன்படும்படி யாரும் எதுவும் செய்யவில்லை. நீயாவது, ஏதாவது செய்’ என ஒருமுறை பேராசிரியர் டி.என்.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். சொல்லின் செல்வர் பட்டம் வாங்கிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். அவர் சொன்னது இந்த வயதில் என் நினைவுக்கு வந்ததுதான் புத்தகம் எழுதத் தூண்டியது” என்று தான் படைப்பாளி ஆன பின்னணியையும் சொல்லி முடித்தார்.
ஓய்வெடுக்கும் வயதிலும் ஓயாமல், இன்று புதிதாய் பிறந்தது போல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த பத்மநாபன் தாத்தா, இன்னும் பல சாதனைகள் படைக்கட்டும்.