ஒலிம்பிக்கில் ஊற்றெடுத்த அன்பு நதி- நெஞ்சைத் தொட்ட நெகிழ்ச்சிக் காட்சிகள்

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

ஒலிம்பிக் போட்டி போர்க் குணமிக்கவர்களுக்கானது என்றே நெடுங்காலமாக நம்பப்பட்டுவந்தது. ஆகவேதான், ‘வேகமாக, உயரமாக, வலிமையாக’ என்ற குறிக்கோளுடன் நவீன ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 127 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே ஒலிம்பிக் தொடங்கப்பட்டுவிட்டது என்பது வேறு கதை!

மகிழ்ச்சி தரும் மாற்றம்

அந்த வழமையில் உணர்வுபூர்வமான மாறுதல் முதன்முறையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்துள்ளது. பேரிடரும் பெருந்தொற்றும் சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை, மனித குலத்துக்குக் கடத்த முயன்றிருக்கிறார் உலக ஒலிம்பிக் கமிட்டியின் தற்போதைய தலைவர் தாமஸ் பாக். போட்டியாளரை எதிராளியாக வெறுப்போடு எதிர்கொள்ளாமல் சகோதரத்துவத்துடன் அணுகுவதற்கு, ‘ஒன்றாக’ என்ற சொல்லை ஒலிம்பிக் இலக்கில் இணைத்தார் தாமஸ். அதுமட்டுமல்ல... பல்வேறு நாடுகள், வெவ்வேறு பண்பாடுகள், விதவிதமான சிந்தனைகள் சங்கமிப்பதை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் சின்னமும் வடிவமைக்கப்பட்டது. ‘வேற்றுமையில் ஒன்றுமை’யின் குறியீடாக மூன்று விதமான செவ்வகங்கள் கொண்ட வட்டம் வடிவமைக்கப்பட்டது. ‘எண்ணமே செயலாகும்’ என்பதுபோல் எழுத்திலும் வடிவத்திலும் பொறிக்கப்பட்டவை நிஜமாகியிருக்கின்றன.

தாங்கிப் பிடித்த சிந்து!

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் எனத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துவிட்டார் இந்தியாவின் பி.வி.சிந்து. இந்தச் சாதனையைவிடவும் மகத்தானது, தன்னைத் தோற்கடித்து பெண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தைவான் வீராங்கனையை அவர் ஊக்குவித்த விதம்தான். சீன வீராங்கனையிடம் தைவான் வீராங்கனை தைசூஜிங் இறுதியில் தோற்றார். உடனடியாக தைசூஜிங்கை அணைத்து தன் கைகளில் தாங்கிப்பிடித்தார் சிந்து. “நீ பிரமாதமாக விளையாடினாய். உனக்கு உடல்நலம் சரியில்லாமல் போதனால்தான் தங்கத்தைத் தவறவிட்டாய்” என்று உளமாற ஆறுதல்படுத்தினார். விழா மேடையிலேயே நடந்ததைச் சொல்லி பி.வி.சிந்துவை நினைத்து நெகிழ்ந்து கண் கலங்கிப்போனார் தைசூஜிங்.

நன்றி கனோவா!

நீர் சறுக்குப் போட்டியின் இறுதிச்சுற்றில், ஜப்பானைச் சேர்ந்த கனோவா இகராஷிவை பிரேசில் வீரர் இடாலோ ஃபெரேரா தோற்கடித்தார். இதை அடுத்து, இனவெறி பிடித்த சில பிரேசிலியர்கள் கனோவாவைத் தூற்றி முழக்கமிட்டனர். சொந்த மண்ணிலே தோல்வியுற்றதாலும் இனவெறிச் சீண்டலாலும் கனோவாவின் மனம் துவண்டது. பதக்கம் அணிவிக்கும் மேடையில் தன்னை வென்ற பிரேசில் வீரரை ஜப்பானியப் பத்திரிகையாளர் பேட்டி கண்டார். அப்போது ஜப்பானிய மொழி தெரியாமல் போர்த்துகீசிய மொழியில் தடுமாற்றத்துடன் பேசினார் பிரேசில் வீரர். தனக்குப் போர்த்துகீசிய மொழி தெரியும் எனச் சொல்லி, ஃபெரேராவின் பேச்சை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார் கனோவா. மொழி, இன வேற்றுமை கடந்த கனோவாவின் செயல் ஃபெரேராவை நெகிழ்ச்சியூட்ட, ‘நன்றி கனோவா’ என்று அவர் இதயம் சொன்னது.

பகிர்ந்துகொள்ளப்பட்ட தங்க இதயங்கள்

கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் நண்பர்கள். “இரண்டு பேருக்கும் தங்கப்பதக்கம் கிடைத்தால் எப்படியிருக்கும்?” என்று இருவருமே அடிக்கடி பேசிக்கொண்டதுண்டு. அந்தக் கனவு டோக்கியோ ஒலிம்பிக் அரங்கத்தில் நிறைவேறியது. உயரம் தாண்டுதலில் இருவருமே 2.37 மீட்டரைத் தாண்டி ஒரே புள்ளிகளைப் பெற்றனர். ஆனால், கம்பம் 2.39 மீட்டருக்கு உயர்த்தப்பட்டபோது மும்முறை முயன்றும் இருவரும் வெவ்வேறு தவறுகள் செய்தனர். நட்பா அல்லது முதலிடமா என்று இருவரின் மனமும் பதைபதைக்க, சட்டென பார்ஷிம், “தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா?” என்று நடுவரிடம் கேட்டார். “ஆம்!” என்கிற பதில் கிடைக்க, இருவரும் துள்ளிக் குதித்து ஆரத்தழுவினர். இரண்டு தங்கப் பதக்கங்களுடன் ஜொலித்தபடி,  “இது விளையாட்டுக்கும் மேலான உணர்வு என்பதை இளம் தலைமுறையினருக்குச் சொல்ல ஆசைப்படுகிறோம்” என்றார் பார்ஷிம்; “நண்பருடன் வெற்றியைப் பகிர்வது கூடுதல் அழகு, மாயாஜால உணர்வு” என்றார் தம்பேரி.

இணைந்த கரங்கள்

இதே தடகளப் பாதையில், ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஓடியவர்கள் தாம் அமெரிக்காவைச் சேர்ந்த இசையா ஜெவட் மற்றும் போஸ்ட்வானாவைச் சேர்ந்த நிஜல் அமோஸ். 800 மீட்டர் தடகளப் போட்டி அரையிறுதிச் சுற்றில் இருவரின் கால்களும் பின்னிக்கொண்டு தடுக்கி விழுந்தனர். இதனால், இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகும் வாய்ப்பு தடைபட்டுப் போனது. இருந்தாலும், இருவரும் சண்டையிடவில்லை. இணைந்த கைகளாக இலக்கை எட்டினர்.

வீரர்களும் மனிதர்களே!

ஜிம்னாஸ்டிக்கில், 32 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் ஒலிம்பிக் பதக்கங்களையும் 24 வயதுக்குள் வென்றவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமன் பைல்ஸ். டோக்கியோவிலும் அவர் தங்கத்தை வெல்வது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னுடைய உடலை இயக்கும் மூளையும் மனமும் ‘twisties’ என்றழைக்கப்படும் மருத்துவச் சிக்கலால் தடுமாறியுள்ளதாக அறிவித்துவிட்டு, இறுதிச் சுற்றிலிருந்து விலகினார் சிமன் பைல்ஸ்.

“நாங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல, மனிதர்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்று உரக்கச் சொல்லி பைல்ஸ் விலகியது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உச்சந்தலையில் கொட்டியது போலிருந்தது. எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று விளையாட்டு வீரர்களின் மீது அதீத அழுத்தம் செலுத்தும் போக்கை மாற்றுவதற்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கமிட்டி ஒப்புக்கொண்டது.

மாற்றத்தை விதைத்தவர்கள்

டைவிங் போட்டியில் தங்கத்தை வென்றவர் பிரிட்டன் வீரர் டாம் டேலி. வெற்றி பெற்றவுடன், “எல்ஜிபிடியாக வாழும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் எவ்வளவுதான் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தாலும் நீங்கள் தனியாக இல்லை, எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்பதை உணருங்கள். உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு பல குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. நான் தன்பாலினத்தவர் என்பதை ஒலிம்பிக் சாம்பியன் என்பதற்கு இணையாகப் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

பதக்கத்தை வென்ற அடுத்த நாள், நடைபெற்றுக் கொண்டிருந்த மகளிர் டைவிங் இறுதிச் சுற்றில் பார்வையாளராகக் கலந்துகொண்டார் டேலி. போட்டியை அவரது கண்கள் காண, அவரது கைகளோ ஒரு சிறு கம்பளி பையைப் பின்னிக்கொண்டிருந்தன. அசாத்திய விளையாட்டு வீரரின் இந்தச் செயல் அநேகரின் கவனத்தை ஈர்த்தது. பலர் புகைப்படம் பிடித்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றினர். ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலேயே இந்தக் காட்சி பதிவேற்றப்பட்டது. கிட்டத்தட்ட 2 லட்சம் லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமென்ட்ஸ் குவிந்தன. மாற்றுப் பாலினத்தவர்கள், இடைபாலினத்தவர்கள், தன்பாலினத்தவர்கள் குறித்து இன்றுவரை சரியான புரிதல் எட்டப்படாத நிலையில், டாம் டேலி போன்றோரின் வெற்றியும் செயல்பாடுகளும் மகத்தான மாற்றத்துக்கு வழிகோலும்.

இதன் தொடர்ச்சியாக நியூசிலாந்தைச் சேர்ந்த திருநங்கை லாரல் ஹப்பார்ட் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்றிருப்பது கவனிக்க வைத்தது. மூன்று முறை முயன்றபோதும் அவரால் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. ஆனாலும் நெடுங்காலமாக மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொண்டுவரும் புறக்கணிப்பை ஒலிம்பிக் அரங்கில் தூக்கி எறிந்து சரித்திரம் படைத்துவிட்டார் லாரல்.

வெற்றி தோல்விக்கு அப்பால் நேசக் கரம் நீட்டுவதும், தேய் வழக்குகளைத் தகர்ப்பதும், மனத்தடைகளை உடைப்பதும்... என இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்திருப்பவை மொழி, இனம், பாலின பேதங்களைக் கடந்த புதிய அன்பு சூழ் உலகம் பிறந்துவிட்டதற்கான அறைகூவல்கள் என்பதில் சந்தேகமில்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE