டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
இந்திய ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், ஆடவர் - மகளிர் என இரு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ஓர் அரிதான நிகழ்வு. இதில் 41 ஆண்டுகாலப் பதக்க ஏக்கத்துக்கு ஆடவர் ஹாக்கி அணி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதேநேரம், ஒலிம்பிக்கில் மகளிர் அணி இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டதே பிரம்மாண்ட சாதனை. ஒலிம்பிக்கில் தகுதி பெறவே தள்ளாடிக்கொண்டிருந்த மகளிர் அணி, டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதிக்க யார் காரணம்?
ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியைப் போல நீண்ட பாரம்பரியம் கொண்டதில்லை மகளிர் ஹாக்கி. நவீன ஒலிம்பிக் தொடங்கி 84 ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில்தான் முதன்முதலாக மகளிர் ஹாக்கி அறிமுகமானது. அப்போது ஒரு பக்கம், அமெரிக்க - சோவியத் இடையேயான பனிப்போர்; இன்னொரு பக்கம், சோவியத் - ஆப்கன் போர். இதன் காரணமாக மாஸ்கோ ஒலிம்பிக் களையிழந்தது. 65 நாடுகள் அப்போது ஒலிம்பிக்கில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
வழக்கமான நாடுகள் எதுவும் இல்லாமல்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. வழக்கமாக ஹாக்கி பிரிவில் தகுதியின்
அடிப்படையில்தான் ஒலிம்பிக்கில் அணிகள் பிரிக்கப்படும். ஆனால், அப்படி அணிகள் அமையாததால், மகளிர் பிரிவில் விளையாட பல நாடுகளுக்கு, ஒலிம்பிக்கை நடத்திய சோவியத் நட்பு அழைப்பு விடுத்தது. அப்படித்தான் முதன் முதலாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் விளையாடியது. அந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆனது.
ஒவ்வொரு முறையும் முயன்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியால் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவே முடியவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 36 ஆண்டுகள் கழித்து இந்திய மகளிர் இளம் ஹாக்கி அணி, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. அப்படி தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றியவர் அன்றைய கேப்டன் ரிது ராணி. ஹாக்கி என்பது அணியின் கூட்டு உழைப்புதான். ஆனாலும், கத்துக்குட்டி அணியான இந்திய மகளிர் ஹாக்கியை தலை நிமிரச் செய்ததில் முக்கிய பங்காற்றியவர் ரிது ராணி.
சர்வதேச ஹாக்கியில் 14 வயதிலேயே அறிமுகமான துடிப்பான வீராங்கனை ரிது ராணி. ஹரியாணாவைச் சேர்ந்த இவர், நடுக்களத்தில் துடிப்பாகவும் பம்பரம்போல 360 டிகிரி கோணத்திலும் சுழலக் கூடியவர். எதிரணியிடமிருந்து பந்தைக் கடத்தி லாவகமாக கோல் அடிப்பதில் வல்லவர். அவருடைய விவேகமும் ஆக்ரோஷமான விளையாட்டு உத்தியும் 20 வயதிலேயே இந்திய மகளிர் அணியின் கேப்டன் என்ற அந்தஸ்துக்கு அவரை உயர்த்தியது.
ரிது ராணியின் தலைமையில், 2012 முதல் 2016 வரை பல சர்வதேச தொடர்களில் மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேறியது. அந்தத் தொடர் முன்னேற்றத்தால்தான் 2016 ஒலிம்பிக் வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்றது.
ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பது ரிது ராணியின் நெடுநாள் கனவு. அந்த வாய்ப்பு அவருடைய தலைமையிலேயே கிடைத்தது ஹாக்கி வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மகுடமானது. ரிது ராணியைக் கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை அர்ஜூனா விருது பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு. ஆனால், இந்த மகிழ்ச்சியெல்லாம் ஒரு மாதம்கூட அவருக்கு நீடிக்கவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ரிது ராணி கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்ல, ஹாக்கி அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தார். ரிதுவின் நீக்கம் அவரை மட்டுமல்ல... ஒட்டுமொத்த ஹாக்கி ரசிகர்களையுமே அதிர்ச்சியில் தள்ளியது.
ஐந்து ஆண்டுகள் கேப்டனாக இருந்து அணியை முன்னேற்றி ஒலிம்பிக்கில் அணியை வழிநடத்தும் கனவுடன் இருந்த ரிதுவின் நம்பிக்கை, ஒரேநாளில் சுக்குநூறாக உடைந்தது. அவரது நீக்கத்துக்குக் கவனச் சிதறல், தவறான மனோபாவம், உடல் தகுதியின்மை எனப் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொன்னது ஹாக்கி இந்தியா அமைப்பு. இதனால் மனம் நொந்துபோன ரிது ஹாக்கியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
ஆறாத ரணத்துடன் ஹாக்கியிலிருந்து விலகியிருந்த ரிது ராணியை, ஆறு மாதங்கள் கழித்து அணியில் சேர்த்து ஹாக்கி இந்தியா அறிவிப்பு வெளியிட்டது. ரிதுவுக்குள் ஒளிந்திருந்த திறமையும் அர்ப்பணிப்போடு விளையாடும் அவரது அணுகுமுறையும் மீண்டும் ஹாக்கிக்கு அவரை அழைத்துவந்தது. ஆனால், அவருடைய ஒலிம்பிக் கனவு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் நனவாகாமலேயே போய்விட்டது.
ரிது விளையாடாவிட்டாலும், அவர் அணியைக் கட்டமைத்தபோது விளையாடியவர்களில் 8 பேர் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்கில் 12-ம் இடத்தைதான் இந்திய மகளிர் ஹாக்கி அணியால் பிடிக்க முடிந்தது. ரிது ராணி அணியில் முக்கிய வீராங்கனையாக இருந்த ராணி ராம்பால்தான், டோக்கியோ ஒலிம்பிக்குக்கு கேப்டன். இவரும் ரிது ராணி தலைமையில் ஏராளமான போட்டிகளில் விளையாடிவர். அருகிலிருந்து ரிதுவின் தலைமைப் பண்பைக் கற்றுக்கொண்டவர்தான்.
இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வியக்கத்தக்க அளவில்மகளிர் அணி முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறது. பலம் வாய்ந்த அணிகள் பிரிவில் இடம் பிடித்து, காலிறுதிவரை முன்னேறியதே ஒரு சாதனை என்றால், ஹாக்கியில் ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை காலிறுதியில் வீழ்த்தியது மலைக்க வைக்கும் சாதனை. அதுவும் முழுக்க முழுக்க ஏழ்மை நிலையிலிருந்து பின் தங்கிய மாநிலத்திலிருந்து வந்த வீராங்கனைகளைக் கொண்டு இந்த அசாத்திய முன்னேற்றத்தை ஒலிம்பிக்கில் காட்டியிருக்கிறார்கள். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இந்த முன்னேற்றம் ஒரேநாளில் வந்ததில்லை. இந்திய அணி இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க உரம் போட்டவர் ரிது ராணி!
ஹாக்கியைக் காக்கும் ஒடிசா!
எந்தவொரு விளையாட்டும் ஜொலிக்க வேண்டுமென்றால், ஸ்பான்ஸர் அவசியம். இன்று கிரிக்கெட் கோடிகளில் புரள்கிறது என்றால், அதற்கெல்லாம் காரணம் இந்தியாவில் வரிசை கட்டி நிற்கும் ஸ்பான்ஸர்கள்தான். 2018-க்கு முன்புவரை ஹாக்கியின் ஸ்பான்ஸராக சகாரா நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனம் விலகிய பிறகு, இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியின் ஸ்பான்ஸர் யார் தெரியுமா? ஒடிசா மாநில அரசு. இதற்காக 150 கோடி ரூபாயை ஒதுக்கி, ஹாக்கி அணிகளை அரவணைத்து வருகிறது ஒடிசா அரசு. தேசிய அணிக்கு ஒரு மாநில அரசு ஸ்பான்ஸர் என்றால், இந்திய ஹாக்கி அணிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று நாமே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். இதையெல்லாம் தாண்டி தான் நம்மவர்கள் சாதித்திருக்கிறார்கள்.