இணைந்து மிரட்டும் எதிர்க்கட்சிகள்!- மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தமா?

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

டெல்லி கான்ஸ்டிடியூஷன் க்ளப்பில், ஆகஸ்ட் 3 காலை நடந்த சிற்றுண்டி சந்திப்பில் இட்லி, தோசை, பாவ்பாஜி என சைவ உணவு வகைகள் களைகட்டின. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று அதில் கலந்துகொண்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மோடி அரசுக்கு எதிராக அணிதிரண்டது அங்கு பரிமாறப்பட்ட உணவு வகைகளுக்குக் கூடுதல் காரம் சேர்த்தது.

பெகாசஸ் வேவு விவகாரம் முதல் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு வரை, பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது என எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. இந்தக் காரமும் ஆவேசமும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரமிடுமா அல்லது வழக்கம்போல் நீர்த்துவிடுமா என்பதுதான் இன்றைக்கு முக்கியக் கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

பெகாசஸ்: பேச மறுக்கும் அரசு

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா போன்ற கட்சிகள்கூட பெகாசஸ் விவகாரத்தில் விவாதமும் விசாரணையும் வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு வீரியமுள்ள பிரச்சினையாகக் கருதப்படும் இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகக் கவனமாகக் கையாண்டுவருகிறது. நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் சொல்ல முயன்றபோது, அவர் கையில் இருந்த அறிக்கையை எதிர்க்கட்சி எம்பி-க்கள் பறித்துக் கிழித்தெறிந்ததைச் சொல்லி தங்கள் தரப்புக்கு நியாயம் சேர்க்க பாஜக முயல்கிறது.

உளவு பார்க்கும் விவகாரம் எல்லாம் இத்தனை முக்கியத்துவம் கொண்டதல்ல எனும் தொனியில் பாஜக ஆதரவாளர்களும் பொதுத்தளத்தில் பேசிவருகிறார்கள். உண்மையில், இவ்விஷயத்தில் இறங்கிவந்தால் அது தங்களைத் தார்மிக ரீதியாக வலுவிழக்கச் செய்துவிடும் என்று பாஜக கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல், 2022-ல் உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காத்திருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பணிவது அரசியல் ரீதியிலான பின்னடைவைத் தரும் எனும் எச்சரிக்கை உணர்வு பாஜகவிடம் தெரிகிறது.

முடக்குவது யார்?

இவ்விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவதாகப் பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். தேசவிரோதிகள் போல எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக அவர் விமர்சித்திருக்கிறார். எனினும், பாஜகவினர் முன்பு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது நாடாளுமன்றத்தை முடக்கியதைச் சுட்டிக்காட்டி எதிர்ப் புகார் வாசிக்கிறார் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே.

“நாடாளுமன்றத்தை நடத்த வேண்டியது அரசின் வேலை. எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல” என எதிர்க்கட்சி வரிசையில் பாஜக இருந்தபோது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் கூறியதை தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி-யான மஜீத் மேமனும் சுட்டிக்காட்டியிருக்கிறார். “அரசின் ஊழலை அம்பலப்படுத்தவே நாடாளுமன்றத்தை முடக்க வேண்டியிருக்கிறது” என்று காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜகவினர் பேசிய பேச்சுகள், அவர்கள் மீதே இன்றைக்குப் பூமரங்காகத் திருப்பப்படுகின்றன.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவதில் எதிர்க்கட்சிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவுக்குச் சாதகமாக அமைந்ததை மறக்காத காங்கிரஸ், இவ்விஷயத்திலும் வழக்கு தொடர தயக்கம் காட்டுகிறது. அதேவேளையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவது காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி கட்டும் எலி யார்?

பாஜகவை முற்றிலுமாக வீழ்த்த பிற கட்சிகளின் சகாயம் மிக மிக அவசியம் என்பதைக் காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. எனவே, கருத்து வேறுபாடுகளைக் கடந்து கட்சிகளை அணி திரட்டுவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. எனினும் அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதற்குத் தலைமை ஏற்பது யார் என்பது இன்னொரு முக்கியக் கேள்வி. காணொலிக் கூட்டங்களில்கூட எதிர்க்கட்சித் தலைவர்களையும், முதல்வர்களையும் பேச மோடி அரசு அனுமதிப்பதில்லை என்று புகார் கூறிவந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் மோடிக்கு எதிரான அணிதிரளுக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார். டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சோனியா காந்தியையும் சந்தித்திருக்கும் மம்தா, காங்கிரஸுடனான நல்லுறவைத் தொடர்வாரா என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. காங்கிரஸ் ஏற்பாடு செய்த முந்தைய கூட்டங்களில் பங்கேற்காத திரிணமூல் காங்கிரஸ், சிற்றுண்டிச் சந்திப்பில் கலந்துகொண்டது மட்டும் இப்போதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல, காங்கிரஸின் தலைமையை ஏற்பதில் திரிணமூல் காங்கிரஸைப் போலவே பிற மாநிலக் கட்சிகளிடமும் தயக்கம் இருக்கிறது.

எதிர்க்கட்சிகளை அணிதிரட்டுவதில் காங்கிரஸ் அல்லாத மூத்த தலைவர்கள் பொறுப்பேற்பது பலனளிக்கும் என்று கருதப்படுகிறது. துரதிருஷ்டவசமாக இன்றைய தேதியில் அப்படி தீவிரமாக இயங்கும் மூத்த தலைவர்கள் யாரும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அடிக்கடி அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். சிறை மீண்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ், பிஹார் அரசியலைத் தாண்டி தேசிய அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்படுவாரா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தொடரும் குழப்பங்கள்

காத்திரமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பாஜக தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாள்கிறது. இந்நிலையில், பாஜகவை வீழ்த்த பலமான அணித்திரள் அவசியமாகிறது. மேலும் பல முக்கியக் கட்சிகள், குறிப்பாக மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு எதிரான அணியில் சேர வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. சிற்றுண்டிச் சந்திப்புக்கு அழைத்தும் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. சிரோமணி அகாலி தளத்துக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தொடர்வதாக பகுஜன் சமாஜ் கட்சி மீது காங்கிரஸ் இன்னமும் அதிருப்தியில் இருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளிடையே ஒரு தீர்க்கமான எதிர்ப்பு மனநிலை இன்னமும் உருவாகிவிடவில்லை. பெகாசஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பி-க்கள் விரும்பினாலும், அக்கட்சிகளின் தலைமை அதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பி.கே 

இந்தச் சூழலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியில் அவர் விரைவில் இணைவார் என்றும், மிக முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என்றும் சில வாரங்களுக்கு முன் ஊடகங்களில் செய்திகள் பரவின. இதுதொடர்பான கேள்விக்குக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா மழுப்பலாகவே பதில் சொன்னார்.

எனினும், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் தேர்தல் வியூக வகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் பிரசாந்த் கிஷோர், தனது எதிர்காலப் பணிகள் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருப்பதாக அமரீந்தர் சிங்குக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. அந்தப் பணி, தேசிய அளவில் காங்கிரஸை வலுப்படுத்தும் பணியா, ராகுல் காந்தியின் செல்வாக்கை வளர்த்தெடுக்கும் பணியா என்றெல்லாம் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.

ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, கான்ஸ்டிடியூஷன் கிளப்பிலிருந்து நாடாளுமன்றம் வரை சைக்கிள் ஓட்டிச் செல்ல 
பல எதிர்க்கட்சி எம்பி-க்கள் முன்வந்தனர். அந்தப் பயணம் அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடருமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE