சமயம் வளர்த்த சான்றோர் 33: ஊத்துக்காடு வேங்கட கவி

By காமதேனு

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

ஊத்துக்காடு வேங்கட கவி என்று அழைக்கப்படும் வேங்கட சுப்பையர், கண்ணபிரானை நேரில் தரிசித்து, அவர் மீது எண்ணற்ற பாடல்கள் புனைந்து, இசையுலகுக்கு பெரும் சேவையாற்றியவர். கிருஷ்ண பக்தராக இருப்பினும், சிவபெருமான், முருகன், விநாயகர். காமாட்சி என்று அனைவர் மீதும் பாடல்கள் இயற்றியவர் இவர்.

தட்சிண துவாரகை என்றழைக்கப்படும் மன்னார்குடியில். ராமச்சந்திர வாதுலர் – கமல நாராயணி தம்பதி வசித்து வந்தனர். கண்ணபிரானின் அருளால் இவர்களுக்கு காட்டு கிருஷ்ணய்யர் என்ற மகனுக்கு அடுத்தபடியாக, 1700-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ம் தேதி இரண்டாவது குழந்தையாக வேங்கட சுப்பையர் பிறந்தார்.

பிறந்ததிலிருந்து இசையில் ஆர்வம் காட்டிய வேங்கட சுப்பையருக்கு, நீடாமங்கலம் நடேச ரத்தின பாகவதர் மூலம் இசை பயிற்றுவிக்கப்பட்டது. அதோடு சம்ஸ்கிருத மொழியிலும் புலமை பெற்றார். குருநாதர் பயிற்சி அளித்ததும், மிக விரைவாக கற்றுக் கொண்டார் வேங்கட சுப்பையர்.  

ஒருநாள், குருநாதர், வேங்கட சுப்பையரிடம், “எனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டேன். இனி வேறு குருநாதரைத் தேடி, மேற்பயிற்சி எடுத்துக் கொள்” என்று கூறிவிடுகிறார். இதனால் வேங்கட சுப்பையர், வேறு குருநாதரைத் தேடினார். கிருஷ்ண யோகி என்ற அக்னி ஹோமம் செய்யும் இசைப் பண்டிதரிடம் சென்று, வேங்கட சுப்பையரை சங்கீதம் பயிலச் சொல்கிறார் கமலநாராயணி. கிருஷ்ண யோகியிடம் சென்று தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேங்கட சுப்பையர் வேண்டுகிறார். ஆனால், அவரை சீடராக ஏற்க கிருஷ்ண யோகி மறுத்துவிடுகிறார்.

இசை பயில சரியான குரு கிடைக்காத வேங்கட சுப்பையரிடம் அவரது தாயார், “கிருஷ்ண யோகி இல்லையென்றால் என்ன... அதுதான் கிருஷ்ணர் இருக்கிறாரே... நீ சென்று அவர் முன்னர் அமர்ந்து, உனக்குத் தெரிந்ததையெல்லாம் பாடு” என்று கூறுகிறார்.
தாயின் சொற்படி, தனது இல்லத்தில் இருந்த கிருஷ்ணர் விக்கிரகம் முன்னர் அமர்ந்து, தம்புராவுடன் பாடத் தொடங்கினார் வேங்கட சுப்பையர். அப்போது வானில் ஓர் அசரீரி ஒலித்தது. “இன்று முதல் உமக்கு நாமே குருவானோம், கோயிலின் ஈசான மூலையில் உள்ள துளசி மாடத்தருகே உமது இசை ஞானத்தை சோதிப்போம்” என்று கூறி கிருஷ்ணரே குருவாக இருந்து, சுப்பையரை வழி நடத்தினார். அவரது அருளால், கிருஷ்ணர் மீது பாடல்கள் புனையத் தொடங்கினார் வேங்கட கவியாகிய வேங்கட சுப்பையர்.  

(இந்த நிகழ்வை “கூடப் படித்தவன் குசேலன் - ஆடற்கொடுத்து வைத்தவன் காளியன் – பகவத் கீதை கேட்டான் விஜயன் – சங்கீர்த்தனம் கேட்டவன் அடியேன் என்ற பாடல் மூலம் விளக்குகிறார் வேங்கட கவி)

கண்ணனே குருவாக அமைந்ததால், உலகப் பற்றுகளில் இருந்து விடுபட நினைத்தார் வேங்கட சுப்பையர்.  தலையில் மயில்பீலி, கையில் புல்லாங்குழல், கால்களில் சலங்கை, தாமரை போன்ற கண்கள் என்று கண்ணனை மனதில் தியானித்துக் கொண்டார்.  தன் பாடலுக்கு கண்ணன் ஆடுவதாக நினைத்துக் கொள்வார். எப்போதும் கண்ணன் தன்னுடன் இருப்பதை உணரும் வகையில் கண்ணனின் குழலிசையும், காற்சலங்கை ஒலியும், வேங்கட கவியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தனது பாடல்களைக் கேட்டு கண்ணன் ஆடுவதால், வரிசையாக  அசைந்தாடும் மயில் (சிம்மேந்திர மத்யமம் ராகம்), யாரென்ன சொன்னாலும் (மணிரங்கு), பார்வை ஒன்றே போதுமே (சுருட்டி), ஆடாது அசங்காது வா கண்ணா (மத்யமாவதி), குழலூதி மனமெல்லாம் (காம்போஜி), தாயே யசோதா (தோடி), பத்மாவதி ரமண (பூர்வி கல்யாணி), வந்ததுக்கும் போனதுக்கும் (பிலஹரி), விஷமக்கார கண்ணன் (செஞ்சுருட்டி), ஸ்வாகதம் கிருஷ்ணா (மோஹனம்), நீ தான் மெச்சிக் கொள்ள வேண்டும் (ரஞ்சனி) என்று பாடிக் கொண்டே இருந்தார் வேங்கட கவி.  

பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், ஒரு துறவி போலவே வாழத் தொடங்கினார் வேங்கட கவி. இஷ்ட தெய்வங்களாக மன்னார்குடி ராஜகோபால சுவாமியும், காளிங்க நர்த்தனனும் இருப்பதால், காளிங்க நர்த்தனன் ஊத்துக்காடு (ஆவூர் அருகே) என்று அழைக்கப்படும் தேனுஜவாசபுரத்தில் கோயில் கொண்டுள்ளதாக உணர்ந்து, அங்கு செல்கிறார் வேங்கட கவி. அங்கேயே தங்கியிருந்து, நர்த்தன கண்ணனைப் பற்றி பாடிய வண்ணம் இருந்தார். தனது பாடல்களுக்கு, கண்ணன் ஆடுவதால், அவற்றில் ஜதி கலந்திருக்கும். இதனால் வேங்கட கவியின் பாடல்கள், கச்சேரி, உபன்யாசம் நடன நிகழ்ச்சி அனைத்துக்கும் ஏற்றவையாக அமைந்துள்ளன. பாடல்களில் வார்த்தை ஜாலங்கள் இடம்பெற்றிருக்கும்.

கரகரப்ரியா ராகப் பாடலில் ஸ்வராக்‌ஷரம் (பாடல் வரியாகவே ஸ்வரக் கோர்வைகள் அமைந்திருப்பது)  பயன்படுத்தப்பட்டிருக்கும். காந்தாரம் பயன் தரு மாமா, நீ தநி மாமா, நிதான மாமா, பாதக மாமா, ஸரிஸரி மாமா, ஸமான மாமா போன்ற ஸ்வராக்ஷரங்கள் வார்த்தை ஜாலங்களாக சகுனி மாமாவை நோக்கிப் பாடப்படுவதாக அமைந்திருக்கும்.  

‘விநாயகர், முருகன், காமாட்சி, ராமபிரான், சிவபெருமான், திருமகள், அனுமன் என்று அனைத்து தெய்வங்களைப் பற்றியும் அவர்களின் அருளிச் செயல்களை பாடல்களாகவும் ஸ்லோகங்களாகவும் பாடினார். ஸப்த ரத்னா’ என்ற ஒரு தொகுப்பில் ‘ஆளாவதென்னாலோ’ என்ற பரஸ் ராகப் பாடலில், 63 நாயன்மார்களின் பெயர்களோடு, மாணிக்கவாசகரையும் சேர்த்து பாடினார் வேங்கட கவி.  

நாமதேவர், துக்காராம் போன்ற மகான்களின் சரித்திரம், நாயன்மார்கள் சரித்திரம், பிரகலாத் சரித்திரம், துருவ சரித்திரம், கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும்படியாக பாடல்களாகப் புனைந்தார். தமிழ் மொழி மட்டுமல்லாது சம்ஸ்கிருத மொழியில், ‘மதுர ப்ருந்தாவன நிலயே’ மரகதமணி என்று தொடங்கும் பாடல்களைப் பாடினார் வேங்கட கவி. குந்தி ஸ்துதி, காமாட்சி நவாவர்ணம், திருவாரூர் தியாகராஜ சுவாமி பெயரில் மல்லாரி ஆகியவற்றை இயற்றினார். நிறைய ஜாவளி, வர்ணம், தில்லானாக்கள் இயற்றினார். பாதாதிகேச வர்ணனை, ப்ருந்தாவன வர்ணனை, வைகுண்ட வர்ணனை, ராக வர்ணனை என்று நிறைய உரைநடை வர்ணனைகளையும் அருளினார்.  

ஒவ்வொரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் தொடர்புடையது போல் பாடல்களை அமைத்திருப்பார் வேங்கட கவி. ‘தாயே யசோதா’ என்ற தோடி ராகப் பாடல் அதட்டல் தொனியில் இருக்கும். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ‘இல்லை இல்லை அம்மா’ என்று மோகன ராகத்தில்  பாடலை அமைத்திருப்பார். முருகனைப் பற்றிய, ‘நின்றிங்கு உன் அருள்காட்டும்’ என்று தொடங்கும் பாடலின் இடையே ‘ஓரேழு படை வீடு’ என்று குறிப்பிட்டிருப்பார். தன் உள்ளத்தையும் சேர்த்து முருகனுக்கு ஏழுபடை வீடு என்று கூறியிருப்பார்.

அருளிச் செயல்கள்

ஒருசமயம், தஞ்சை மன்னருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. செய்வினைக் கோளாறு  என்று மன்னரை ஒரு மந்திரவாதி ஏமாற்றி வந்தார். இந்தச் செய்தியை அறிந்ததும் அரண்மனைக்குச் சென்றார் வேங்கட கவி. அப்போது மந்திரவாதியின் பல்லக்கை தூக்கிச் செல்பவர்களோடு அரண்மனைக்குள் சென்றார். கண்ணன் மீது பாடல்கள் பாடி மன்னரின் வயிற்று வலியைப் போக்கினார்.  

மற்றொரு சமயம் கண்ணனைப் புகழந்து வேங்கட கவி பாடிக் கொண்டிருப்பதைக் கேட்ட நாகஸ்வர வித்வான் பெரிய ருத்ராபதி பிள்ளை, அவர் பாடிய ‘ஸ்ரீருத்ர சப்தம்’ என்று கூறப்படும் கனம் வழியை அப்படியே கடைபிடித்து, நாகஸ்வரத்தில் வாசித்துக் காண்பித்தார். அப்படியே வேங்கட கவியின் சீடரானார் அந்த வித்வான்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி வெண்ணெய்த்தாழி சேவையின்போது, பஜனை குழுவினருடன் பாடிக் கொண்டு வந்த வேங்கட கவி, ஒரு செல்வந்தருடன் வந்த சிறுவன் காணாமல் போனதை அறிகிறார். உடனே, காணாமல் போன சிறுவனைத் தேடி கொடுக்குமாறு கண்ணனிடம் வேண்டி, “கண்ணா.. எழுந்திரும் பிள்ளாய்” என்று பாடினார் வேங்கட கவி. எங்கோ உறங்கிக் கொண்டிருந்த சிறுவன், இந்தக் குரல் கேட்டு, செல்வந்தரிடம் வந்து சேர்ந்தான்.
 
திருக்கண்ணபுரத்தில் வசிக்கும் அபிராமி என்ற நடனமங்கை, காசி அரண்மனையில் நடைபெற்ற ஒரு போட்டியில் நடனமங்கை சித்ராவளியிடம் தோற்றார். தனது தல யாத்திரையில் சிக்கல், ஸ்ரீரங்கம், திருவாரூர், பழனி, தணிகாசலம், திருப்பரங்குன்றம், பண்டரிபுரம், உடுப்பி, மதுரை, திருவல்லிக்கேணி, சிதம்பரம், காஞ்சிபுரம் கூத்தனூர், திருவானைக்காவல் ஆகியவற்றை முடித்துவிட்டு, திருக்கண்ணபுரம் கோயிலை தரிசிக்க வந்த வேங்கட கவியிடம், தனது தோல்வி குறித்து கூறி வருத்தப்பட்டார் அபிராமி. வேங்கட கவி, நடனம் தொடர்பான சில லய நுணுக்கங்களை அபிராமிக்கு கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு காசியில் நடைபெற்ற போட்டியில், சித்ராவளியை வெற்றி கண்டார் அபிராமி.  

ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கண்ணனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டதால், கோயிலிலேயே தங்கியிருந்து, அவருக்கு சேவை புரிந்து வந்தார் வேங்கட கவி. இப்படியே வருடங்கள் ஓடின. வயதான காரணத்தால், வேங்கட கவியால் சரியாக நடக்க முடியாமல் போனது. கோயில் பிரகாரத்தை வலம் வர முடியவில்லை. தன் இல்லத்தில் உள்ள கண்ணனைச் சுற்றி வரலாம் என்றால் அதுவும் முடியவில்லை. தவழ்ந்து தவழ்ந்து கண்ணனை சுற்றிச் சுற்றி வந்தார்.

ஒருநாள் அவரால் ஒரு நிலையாக இருக்க முடியவில்லை. தன் உயிர் பிரியப் போவதை உணர்ந்தார் வேங்கட கவி. “அலை பாயுதே கண்ணா” என்று கானடா ராகப் பாடலைப் பாடுகிறார். பாடிக் கொண்டே இருக்கும்போது, ஒரு நறுமணம் வீசியது. தென்றல் காற்று தன் மேனியை வருடுவதாக உணர்ந்தார் கவி. கண்களும் சரியாகத் தெரியவில்லை. மடியில் ஒரு குழந்தை படுத்திருப்பதை போன்று ஓர் உணர்வு. யார் தன் மடியில் படுத்திருப்பது என்று கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. மீண்டும் கேட்டதும், “நான் தான் கண்ணன்… உன் மடியில் படுத்திருக்கிறேன்… என்னைப் பார்” என்று அந்தக் குழந்தை கூறுகிறது.  

கண்ணன் அவ்வாறு கூறியதும், தான் உடல் திடத்துடன் இருந்தபோது, காட்சி தராமல், தன்னால் பார்க்க முடியாத சமயத்தில் கண்ணெதிரே இருக்கிறேன் என்கிறாயே என்று வருத்தப்பட்டார் வேங்கட கவி. தான் எவ்வாறு வேங்கட கவிக்கு காட்சி தரவேண்டும் என்று கேட்கிறான் கண்ணன்.

வேங்கட கவியும், ஊத்துக்காட்டில் தான் பாடி, கண்ணன் ஆட வேண்டும் என்று  கூறுகிறார். மேலும், காளிங்க நர்த்தனனாக காட்சி அளிக்கும்படி கண்ணனை வேண்டுகிறார். கண்ணனும் அதற்கு உடன்படுகிறான். ஆனால் ஒருசமயம், இடையே பாட முடியாத சூழல் வேங்கட கவிக்கு ஏற்பட்டால், தான் அந்த இடத்திலேயே காளிங்க நர்த்தன கோலத்திலேயே விக்கிரகமாக அமர்ந்து விடுவேன் என்று கூறுகிறான் கண்ணன்.

வேங்கட கவியும் அதற்கு உடன்பட்டு, ‘தாம்தீம் தரநதாம்’ என்ற காளிங்க நர்த்தன தில்லானாவை பாடத் தொடங்குகிறார். வேங்கட கவி பாட, கண்ணன் நர்த்தனம் ஆடினான். சில சமயங்களில், கண்ணனின் நர்த்தனத்துக்கு ஏற்றார்போல், வேங்கட கவியால் பாட முடியாது போயிற்று. அதனால் முன்னர் கூறியபடி, ஊத்துக்காட்டில் காளிங்க நர்த்தன கண்ணனாக கோயிலில் விக்கிரகமாக அமர்ந்தான் கண்ணன்.  

இன்றும் இந்தக் கோயிலில் இரவு நேரங்களில் வேங்கட கவி பாடுவதாகவும், கண்ணன் சலங்கை கட்டிக் கொண்டு ஆடுவதாகவும் கூறப்படுகிறது. 65 வயது வரை ஊத்துக்காட்டிலேயே வாழ்ந்திருந்து, கண்ணனின் திருவடிகளைப் பணிந்தார் வேங்கட கவி.  
வேங்கட கவியின் சகோதரர் காட்டுக் கிருஷ்ணய்யர் வழியே ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், வேங்கட கவியின் பாடல்களைப் பாடியும், தொகுத்தும், நூல்களாக வெளியிட்டுள்ளார். காட்டுக் கிருஷ்ணய்யரின் பெண்வழியில் தோன்றிய கல்யாண சுந்தரம், ராஜகோபாலன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் ஊத்துக்காடு சகோதரர்கள் என்ற பெயரில் வேங்கட கவியின் பாடல்களை இன்றைக்கும் பிரபலப்படுத்தி வருகின்றனர். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE