வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in
“மும்பையைப் போன்று சொல்லிசைக் கலைஞர்களுக்கோ சுயாதீன இசைக் கலைஞர்களுக்கோ இன்னமும் நம்மூரில் ஆதரவு கிடைப்பதில்லை. சினிமா எனும் பெரிய சுவரைத் தாண்டி சுயாதீன இசை எனப்படும் சொல்லிசைக் கலைஞர்களின் உலகம் இருக்கிறது. மக்களுக்கான அந்தக் கலையை வளர்ப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் ஊடகங்கள் சிறிது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்கிறார் இளம் இசைக் கலைஞர் நிகவித்ரன்.
“எல்லாருமே சினிமா இசையை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, நான் ராப் எனப்படும் சொல்லிசை வடிவத்தை என்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே பழகிவருகிறேன். திரை இசையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை எனக்குப் பிடிக்கும். மலேசிய ராப்பர்களான யோகி பி, டாக்டர் பர்ன் ஆகியோரின் பாடல்களுக்கும் நான் ரசிகன். சொல்லிசைக்கு அடிப்படையே நிறைய படிக்க வேண்டும் என்பதுதான். நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளைப் படிக்க வேண்டும். நானும் அப்படி மக்களின் பிரச்சினைகளைப் படித்துத் தெரிந்துகொண்டுதான் பாடல்களை எழுதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் சொல்லிசை பொழுதுபோக்கு அல்ல. புரட்சியின் வடிவம். ஆரம்பத்தில் நான் எழுதிய பாடல்களை என்னுடைய அண்ணன் திருத்திக் கொடுத்திருக்கிறார். இதுதவிர, எடிட்டர் விநோத், ரோட்ரிக்ஸ், ராயப்பன், பிரான்ஸிலிருந்து மாஸ்டரிங் செய்திருக்கும் பிரிட்டோ ஜுட், ஹரி உள்ளிட்ட பலரின் உழைப்பு இந்த ஆல்பத்தில் இருக்கிறது” என்று நெகிழ்கிறார் நிகவித்ரன்.
நிகவித்ரனின் நண்பர்கள் டி.விநோத், எம்.ஜே.சூர்யா, ஃபின்னி, மைக் அசி, மைக் விஜய் சான்டி, தமிழ்மணி ஆகியோர் இணைந்து ‘டியூட்ஸ் இன் மெட்ராஸ்’ எனும் இசைக் குழுவின் சார்பாக வெளியிட்டிருக்கும் இந்த சொல்லிசைப் பாடல்கள், ஐ-டியூன் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
‘எகெய்ன்ஸ்ட் மை ஸ்கூல்’, ‘டிஜிட்டல் மூஞ்சி’ (டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக விளைநிலங்களைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக எழுதிய பாடல்) என எட்டு பாடல்களின் தொகுப்பாக இந்த ஆல்பம் வந்திருக்கிறது. முதல் பகுதியில் நிகவித்ரனின் பால்ய பருவம், சொல்லிசைக்கு ஓர் அறிமுகம், சென்னை, சேப்பாக்கத்திலிருக்கும் லாக்நகர் பகுதியில் வாழ்ந்த காலம் உள்ளிட்டவற்றைப் பாடலில் சொல்கிறது ‘82 D பிளாக்’ பாடல். `மச்சி டீ சொல்லு’ பாடல் நட்பின் நெருக்கத்தைச் சொல்லும் அதே நேரத்தில், அத்தியாவசியமான பாலின் விலையேற்றத்தையும் கண்டிக்கிறது. `டோன்ட் டச்’ பாடல் 2018-ல் கதுவாவில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்கிறது.
கலைஞர்கள் தம்மிடமிருக்கும் கலைத் திறமையைக் கொண்டு, மக்களை உற்சாகப்படுத்துவதையும் சந்தோஷப்படுத்துவதையும் மட்டுமே கலையின் நோக்கமாக நினைக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை அரசு திணிக்கும்போதும் அதற்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கவும், அதில் இருக்கும் தீமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுத்த வேண்டும். அதுதான் கலைஞர்களின் பிரதானமான நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் நிகவித்ரனின் ஆழமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவரது ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுகிறது.
கேள்விகளால் வேள்வி செய்யும் சொல்லிசைக்கு: https://www.youtube.com/watch?v=d9F9E8YODEE
* * *
பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு ஸ்தோத்திரம்
‘அயிகிரி நந்தினி நந்தித மேதினி...’ எனத் தொடங்கும் ‘மகிஷாசுரமர்த்தினி’ ஸ்தோத்திரப் பாடல், இறை சிந்தனை கொண்டவர்கள் மத்தியில் பிரபலம். கடந்த ஆண்டு இந்தப் பாடலை பல்கேரியாவைச் சேர்ந்த சோஃபியா செஷன் இசைக் குழுவின் துணையோடு சிம்பொனி இசையில் இசையமைத்துப் பாடி வெளியிட்டிருந்தார் எஸ்.ஜே.ஜனனி. கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கவே இந்த ஸ்தோத்திரப் பாடல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அண்மையில், ‘ஆதித்ய ஹிருதயம்’ ஸ்லோகப் பாடலைக் கிழக்கும் மேற்கும் இணையும் கலப்பிசையில் அமைத்துப் பாடியிருக்கிறார் ஜனனி.
“இந்தப் பாடலை ராமபிரானுக்கு மகரிஷி அகத்தியர் உபதேசித்தார். சத்ரு சம்ஹார ஸ்தோத்திரமான இப்பாடல் ராவணனுடன் போரிடுவதற்கு முன்பாக யுத்த பூமியில் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்துக்கே சத்ருவாக உருக்கொண்டிருக்கும் கரோனாவை வெல்வதற்கும் இந்த ஸ்தோத்திரம் உதவும் எனும் நம்பிக்கையில்தான் இதை வெளியிட்டிருக்கிறேன்” என்கிறார் ஜனனி.
ஸ்திரம் தரும் ஸ்தோத்திரத்தைக் கேட்க: https://www.youtube.com/watch?v=FOyi0jzfuNU
* * *
இது ஆபிரகாம் மாதம்!
நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான இசை நூல்களில், ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாம்ருத சாகரம்’ முதன்மையானது. ஆபிரகாம் பண்டிதர் பிறந்தது 1859 ஆகஸ்ட் 2. மறைந்தது 1919 ஆகஸ்ட் 31-ல். பண் அடிப்படையிலான நம்முடைய தமிழிசையே கர்நாடக இசைக்கு ஆதாரமானது என்பதை நிரூபித்தவர் ஆபிரகாம் பண்டிதர். அவரின் ‘கருணாம்ருத சாகரம்’ வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி, கருணாம்ருத சாகரம் இணையதளத்தின் மூலமாக பல்வேறு இசை சார்ந்த பணிகளை ஆவணப்படுத்திவருகிறது ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை.
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரிய முள்ளது நம்முடைய இசை. அதன் அருமை பெருமைகளை அதன் தொன்மையை எளிமையாக எடுத்துச் சொல்லும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளையின் கருணாம்ருத சாகரம் இணையதளம் காட்சிப்படுத்துகிறது. ஏழு இசை மாநாடுகளை நடத்தி, அற்புதமான இசை நூலை நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கும் ஆபிரகாம் பண்டிதரின் குடும்பத்திலிருந்து சில பேர் இந்த ஆவணத்தில் இசை குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். ஆபிரகாம் பண்டிதரின் பாடல்களையும் பாடியிருக்கின்றனர்.
நம்முடைய தொன்மையான இசை மரபு, சங்க காலம், சங்கம் மருவிய காலத்திலிருந்து, நாட்டுப்புற இசையாக, திரையிசையாக தற்போது பாடப்படும் கானா இசைவரை கண்டுள்ள பரிமாணங்களை இந்த இணையதளம் விளக்குகிறது. இசையின் பல்வேறு வகைகளைக் கையாண்டு தங்களைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் பலர். வெளி உலகுக்குத் தெரியாமல், விளம்பர வெளிச்சம் படாமல் அமைதியாக இசைப் பணியில் ஈடுபட்டு வரும் எளிய மனிதர்களை இந்த இணையதளம் ஆவணப்படுத்துகிறது.
குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களை அபுபக்கர் பாடியிருக்கிறார். ஓதுவார் தேவாரம் பாடியிருக்கிறார். செவ்வியல் இசையில் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கியவர் தண்டபாணி தேசிகர். அவரின் நேரடி மாணவரான முத்துக்குமாரசாமி, தேசிகர் எழுதி இசையமைத்த பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.
‘பார்க்கப் பலவிதமாய் / பல்க அண்டம் தன்னை அடைகாக்கும் / திருக்கருணை கண்ணே றஹுமானே…’ எனும் ஆன்மிக சித்தர் குணங்குடி மஸ்தான் பாடலை, குமரி அபுபக்கரின் குரலிலும், `இசையின் எல்லையை யார் கண்டார் என்று / இயம்பிடுவாய் மனமே…இனிமை தரும்’ எனும் தண்டபாணி தேசிகரின் பாடலை முத்துக்குமாரசாமியின் குரலிலும் இந்த இணையதளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
இசையின் பன்முகங்களைத் தரிசிக்க: http://karunamirthasagaram.org/