தமிழக மீனவர்கள் என்றால் கிள்ளுக்கீரையா இலங்கைக்கு?

By காமதேனு

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் இன்னமும் தொடர்வது வேதனையளிக்கிறது. சர்வதேசச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது, கட்டைகளால் தாக்குவது, படகுகளில் இருக்கும் வலைகளை அறுத்தெறிவது என அத்துமீறி வருகிறார்கள் இலங்கைக் கடற்படையினர்.

ஆகஸ்ட் 1-ல், கோடியக்கரைக் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் ஒன்பது பேர் மீது இலங்கைக் கடற்படை நடத்தியிருக்கும் துப்பாக்கிச்சூடு, இந்த அக்கிரமப் பட்டியலில் சமீபத்திய கணக்காகியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கைக் கடற்படையினர் ஒருபக்கம் இப்படியான அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், இலங்கை மீனவர்களும் அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இதே குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்களைச் சிறைபிடிக்கும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தொடர்கிறது.

இதனிடையே, இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துதான் இப்படியான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனத் தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இதைக் கண்மூடித்தனமாக வேடிக்கை பார்க்க முடியாது” என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், வாழ்வாதாரம் சார்ந்த இந்தப் பிரச்சினையில் சட்டத்துக்கு உட்பட்டும், மனிதாபிமானத்துடனும் இலங்கை அரசு நடந்துகொள்ள மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும் கடிதம் எழுதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், வெவ்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். முதல்வர் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, இதற்கு அரசியல் தீர்வு காண வேண்டியது மிக மிக அவசியம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE