ரஜினி சரிதம் 28: ஆறிலிருந்து எழுபது வரை - பில்லாவில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!

By திரை பாரதி

நடிக்கத் தொடங்கிய நான்கு வருடங்களில் நாற்பது படங்களில் நடித்த ஒரே புதுமுக நடிகர் ரஜினி. அவருடைய இந்தச் சாதனை இன்னும் அப்படியே இருக்கிறது. வில்லன், குணசித்திர வில்லன் எனப் பயணித்து, ‘பைரவி’யில் கதாநாயகனாக உயர்ந்த ரஜினியை, ‘ப்ரியா’, ‘குப்பத்து ராஜா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, தாய் மீது சத்தியம்’,‘அன்னை ஓர் ஆலயம்’ ஆகிய தொடர் வெற்றிகள், கதாநாயகர்கள் என்றால் வெள்ளையாக, ஆணழகனாக இருக்க வேண்டும் என்கிற அதுவரை யிலான பிம்பத்தை உடைத்து தூள் தூளாக்கின.

கறுப்பாக பிறந்த ஒருவர் கதாநாயகனாக அல்ல, மதிப்புள்ள மனிதனாகவும் ஏற்றுகொள்ள மறுத்த அந்நாட்களின் பொதுப்புத்தியை ரஜினியின் நுழைவு புரட்டிப்போட்டது. எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வசதியான வீட்டுப் பிள்ளைகள் ரஜினியைப் பார்த்து தாக்கம் பெறத் தொடங்கினார்கள். தலைநிறைய முடியை வளர்த்துக் கொண்டு. ரஜினியைப் போல் தலையைச் சிலுப்பிக்கொண்டு, சட்டையின் மேல் பட்டனை கழற்றிவிட்டுக்கொண்டு, வேகமாக நடப்பது, வேகமாகப் பேசுவது என ரஜினியை அப்படியே பிரதிபலிக்கத் தொடங்கி னார்கள். அவர்கள் தங்களையும் ஹீரோவாகவும் உணரத் தொடங்கினார்கள்.

ரஜினியின் அதிரடி அறிவிப்பு!

முதல் நான்கு வருடங்களில் ஓய்வென்றால் என்னவென்றே தெரியாமால், தன்னுடைய தூக்கத்தை விலையாகக் கொடுத்து, புகழின் உச்சத்தைத் தொட்டிருந்த ரஜினியை, ஒருபக்கம் உடல் ரீதியாக உபாதைகள் சூழ்ந்தன. இன்னொருபக்கம், ரஜினியைப் போட்டியாக எண்ணிய சிலரும், அவரிடம் கால்ஷீட் பெறமுடியாத சிலரும் அவரைப் பற்றிய எதிர்மறையான விஷயங்களைப் பரப்பினார்கள். அரசியல் வட்டத்திலோ சிலர், வேண்டுமென்றே எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பரபரப்பைக் கிளப்பி, ரஜினியை மண்டை காய வைத்தனர்.
“எம்ஜிஆருக்குப் பிறகு எனக்குத்தான் மக்கள் அதிகமாக கைத்தட்டுகிறார்கள்” என்று ரஜினி கூறியதாக ஒரு சினிமா பத்திரிகை எழுத, ஏற்கெனவே ஓய்வின்மையால் எரிமலையாக தகித்துக்கொண்டிருந்த  ரஜினியை இது மேலும் கொதித்தெழச் செய்தது.  இம்முறை தன்னுடைய குமுறலைத் தன்மீதே காட்டிக்கொண்டார் ரஜினி.  “நான் சினிமாவைவிட்டு விலகுகிறேன்” என்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதைக் கேட்டு ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகமும் அதிர்ந்தது! ரஜினியின் நலம் விரும்பிய பாலசந்தரும் இன்னும் பலரும் ரஜினியை சமாதானம் செய்தார்கள்.  

அந்த இக்கட்டான தருணத்தைக் கடந்து வந்த ரஜினியின் வாழ்க்கையில் 1980-ம் வருடம் ஒரு மைல்கல்லாக மாறிப்போனது. அதற்குக் காரணம், அந்த வருடத்தில் வெளியான ‘பில்லா’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘பொல்லாதவன்’, ‘முரட்டுக்காளை’ ஆகிய நான்கு படங்கள் தான். ‘பைரவி’ போஸ்டர்களில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று போட்டு ரஜினியை விநியோகஸ்தர் தாணு குஷிப்படுத்தினாலும், அவரை உண்மையாகவே சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது இந்த நான்கு படங்கள்தான். ஆனால், ரஜினிகாந்த் எனும் சூப்பர் ஸ்டார் பிறப்பதற்கு ‘பில்லா’தான் பிள்ளையார் சுழியாக அமைந்தது.  ‘பில்லா’ படத்தின் ஒரிஜினலான  ‘டான்’ இந்திப் படத்தின் பூர்வக் கதை சுவாரஸ்யமும் கொஞ்சம் சோகம் மிகுந்தது.

அமிதாப் - ரஜினி நட்புக்கு பாலமான படம்

இந்திப் படவுலகை தங்களுடைய விறுவிறுப்பான ஹீரோயிஸத் திரைக்கதைகளால் ஆட்சி செய்த ஜாவேத் - அக்தர் இருவரும், 30 வயது இளைஞர்களாக சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது அவர்கள் எழுதியது தான் அமிதாப் பச்சன் நடித்து 1978-ல் வெளியான ‘டான்’ . இந்தப் படத்தின் திரைக்கதையை எடுத்துக்கொண்டு பாலிவுட்டில் ஜாவேத் -அக்தர் இருவரும் ஏறி இறங்காத படக் கம்பெனிகளே இல்லை. போகும் இடங்களி லெல்லாம் நிராகரிக்கப்பட்ட அந்தக் கதை, கடைசியாக அமிதாப் கைகளுக்கு வந்து சேர்ந்து ஓகே ஆகக் காரணம் அவரது உதவும் உள்ளம்!

எழுபதுகளின் பாலிவுட்டில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக விளங்கிய நாரிமன் இரானி சொந்தப் படம் ஒன்றைத் தயாரிக்கப்போய் (ஜிந்தகி ஜிந்தகி) பெரும் நஷ்டத்தில் சிக்கி, பழையபடி ஒளிப்பதிவுக்கே திரும்பியிருந்தார். அவருடைய ஒளிப்பதிவில் ‘இம்மான் தராம்’ என்கிற படத்தில் அமிதாப் பச்சன் நடித்தார். அப்போது சொந்தப் படமெடுத்து நஷ்டப்பட்ட நாரிமனின் கடன் சுமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு படத்தில் அவருக்கு நடித்துக் கொடுத்து உதவ நினைத்தார் அமிதாப். தன்னுடைய அந்த முயற்சியில் ஜீனத் அமன், பிரான் ஆகியோரையும் இணைத்துகொண்டார். அதற்காக நல்ல கதை வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தார் அமிதாப் .

அந்த சமயத்தில்தான் ஜாவேத் - அக்தர் எழுதிய ‘டான்’ திரைக்கதையைப் படித்திருந்த நாரிமன் இரானியின் உதவியாளரான சந்திரா பரோட் அக்கதையை அமிதாப்புக்கு விவரித்தார். கதையைக்கேட்டு அமிதாப் துள்ளியெழுந்து, அதில் நடிக்க முன்வந்தார். சந்திரா பரோட் இயக்கத்தில், 70 லட்சம் ரூபாய் செலவில் தயாராகி, வெளியானது ‘டான்’. முதல் வாரம் முழுக்க தியேட்டரில் கூட்டமில்லை. அமிதாப் கவலை கொண்டிருந்த நேரத்தில், ‘கைக்கே பாணு பனாரஸு வாலா’ என்கிற பாடலை அவசர அவசரமாகப் படமாக்கி படத்தில் சேர்ந்தார்கள். இரண்டாவது வாரத்திலிருந்து தியேட்டர்களில் கூட்டம் எகிறத் தொடங்கியது. 100 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்து அமிதாப்பை பாலிவுட்டின் உச்சாணிக் கொம்புக்கு அழைத்துக் கொண்டுபோனது ‘டான்’. ஆனால், படம் வெளிவந்தபோது ஒளிப்பதிவாளர் இரானி உயிரோடு இல்லை. ஆனாலும் அவரது குடும்பத்தின் கடன் ‘டான்’ வசூலால் முழுவதுமாக அடைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல... அமிதாப் - ரஜினியிடையே ஆழமான நட்புக்கும் ‘டான்’ படத்தின் தமிழ் ரீமேக்கான  ‘பில்லா’ பாலம் அமைத்துக் கொடுத்தது.

வாய்ப்பை மறுத்த ஜெயலலிதா!

நாடக நடிகர், திரையுலகில் துணை நடிகர், தயாரிப்பு நிர்வாகி, குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர், படத் தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து சாதித்த தனிப்பெரும் ஆளுமை கே.பாலாஜி. இவர் படத் தயாரிப்பில் இறங்கிய பின், பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களின் ரீமேக் உரிமையைப் பெற்று உத்திரவாதமான வெற்றிகளைக் கொடுத்துவந்தார். இந்திப் படங்களின் உரிமையை வாங்க, இவர் மேற்கொண்ட உத்தி வித்தியாசமானது.

மும்பையில் போய் இறங்கியதும் டாக்ஸியில் ஏறிக்கொள்ளும் பாலாஜி, டாக்ஸி டிரைவரிடம், “நல்ல படமா பார்க்கணும்... என்ன படம் பார்க்கலாம் பையா?” என்று மரியாதையாக பேச்சுக்கொடுப்பார் பாலாஜி. உழைக்கும் வர்க்கத்துக்கு எந்தப் படம் பிடித்திருக்கிறது என்கிற விஷயத்தை சாதாரண மனிதர்களிடம் பேசிப் பேசித் தெரிந்துகொண்டு அந்தப் படத்தை வாங்கிவிடுவார். அப்படி பாலாஜி கொத்திக் கொண்டு வந்த படம் தான் ‘டான்’.

“இனி நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை” என்று ரஜினி அறிவித்திருந்த சமயத்தில், அவரைச் சந்திக்கப்போன பாலாஜி ‘டான்’ கதையைச் சொல்லி கால்ஷீட் கேட்டது மட்டுமல்ல, அதுவரை அவர் பெறாத ஒரு தொகையை சம்பளமாகத் தருவதாகவும் சொன்னார். கூடவே, “இந்தப் படத்தில் ஜெயலலிதா தான் கதாநாயகி நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் மீது அத்தனை மரியாதை கொண்டவர்” என்றும் ரஜினியிடம் சொன்னார். அப்போது ரஜினி, “உங்கள் முயற்சியை நான் தடுக்க மாட்டேன். ஆனால், உறுதி செய்யாமல் விளம்பரம் கொடுத்துவிடாதீர்கள்” என்று மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிட்டார்.

ரஜினி சொன்னது தான் நடந்தது. ‘நதியைத் தேடி வந்த கடல்’ படத்துக்கு முன்பே, எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று கட்சி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜெயலலிதா, பாலாஜியிடம் “ மன்னிக்கணும்... நான் இனி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ‘நதியைத் தேடி வந்த கடல்’ மகரிஷியின் நாவல் என்பதாலும் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர்களில் ஒருவரான பீம்சிங் அவர்களின் மகனான லெனின் அந்தப் படத்தை இயக்கியதாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். என்றாலும் உங்களுக்கும் ரஜினிக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று உளமாறப் பாராட்டி மறுத்துவிட்டார். ஆனால் அதற்கு  முன்பே, ‘ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்கிறார்’ என்கிற செய்தி பத்திரிகைகள் வழியே கசிந்து பரபரப்பாகிவிட்டது. பின்னர் ஜெயலலிதாவுக்கு பதிலாக பில்லாவில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்தார்.

அமிதாப் பச்சனின் எந்த பாதிப்பும் இல்லாமல், பில்லா - ராஜப்பா  என ரஜினி இரட்டை வேடங்களில் கொடுத்த மாஸ் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். காரணம், அதுவரையிலான தமிழ் சினிமாவின் கதாநாயகக் கோட்பாடுகளை உடைத்தெறிந்தது ‘பில்லா’. அதன் பிரம்மாண்ட வெற்றியை எதிர்பார்க்காத ரஜினி, தன்னுடைய பாதையை மாற்றி அமைத்துகொள்ள ‘பில்லா’வின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்தது.

 (சரிதம் தொடரும்)
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE