வேலைசெய்யத் தயங்குகிறார்களா தமிழ் இளைஞர்கள்?- தொழில் துறையினருடன் ஓர் அலசல்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

“இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு வேலைக்குப் போகிற ஆர்வமே இல்லை. கரோனா ஊரடங்குக்குப் பிறகு இன்னும் மோசம். வடஇந்திய இளைஞர்கள் அப்படியில்லை. தொழில் பக்தி மிக்கவர்கள். தமிழக இளைஞர்கள் மாறாவிட்டால் உற்பத்தித் தொழிற்சாலைகள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டே போய்விடும்” என்று திருப்பூரைச் சேர்ந்த ‘கிளாசிக் போலோ' முதலாளி சிவராமன் கூறியிருக்கும் கருத்து, தொழில் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

இந்தத் தகவல்கள் எல்லாம் உண்மையா என்று தொழில் துறையினரைக் கேட்டால், ஆமாம் என்றே தலையாட்டுகிறார்கள் பெரும்பாலானவர்கள். சிவராமனின் பார்வை தவறு என்று மறுப்பவர்களும் இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தமிழ்நாடு. ஆக தமிழ்நாட்டின் எதிர்காலம் கருதியேனும் இந்தப் பிரச்சினை பற்றி நாம் பேசியாக வேண்டியதிருக்கிறது. தொழில் துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

கஷ்டப்படக் கூடாது எனும் எண்ணம்

“கப்பலூர் தொழிற்பேட்டையில் சுமார் 550 சிறுகுறு நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் 16 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். கரோனா முதல் அலையின்போது பொதுமுடக்கம் போடப்பட்டபோது, வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குப் போய்விட்டார்கள். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில், கிராமம் கிராமமாக விளம்பரம் செய்தோம். ஆனால், சும்மா இருந்தாலும்கூட பலர் வேலைக்கு வரமுன்வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மறுபடியும் வடமாநிலத் தொழிலாளர்களை வைத்துத்தான் தொழில் செய்துகொண்டிருக்கிறோம்.
‘கஷ்டப்பட்டு வேலை செய்யக் கூடாது; சம்பளம் மட்டும் நிறைய வேண்டும். ஒயிட் காலர் வேலையாக இருந்தால் நல்லது. ஆனால், அதையும் ஒழுங்காகச் செய்ய மாட்டோம்’ என்பதுதான் நம் இளைஞர்களின் மனநிலை” என்கிறார் மதுரை கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பி.என்.ரெகுநாதராஜா.

மேலும், “ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதால், நாம் பட்ட கஷ்டம் நம் பிள்ளைகள் படக்கூடாது என்ற எண்ணம் பெற்றோருக்கு வந்துவிடுகிறது. கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கிறோம். அடுத்து, அரசின் இலவசத் திட்டங்கள். திருமணத்துக்கு 8 கிராம் தங்கம், உதவித்தொகை, மகப்பேறுக்கு மாதாந்திர உதவித்தொகை, அங்கன்வாடியில் இலவச உணவு, பள்ளியில் இலவசக் கல்வி என்று இலவசங்களாகக் கொடுத்து மக்களை வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாமல் ஆக்கிவிட்டது அரசு” என்கிறார் ரெகுநாதராஜா.

வேலையே தெரியவில்லை

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க நிர்வாகி ஓசூர் வெற்றி. ஞானசேகரனிடம் கேட்டபோது, “பி.இ., படித்த நம் இளைஞர்களை நேர்காணலுக்கு அழைத்தால்,  ‘எவ்வளவு மணி நேரம் சார் வேலை... என்ன மாதிரி வேலை?’ என்று அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார்கள். ‘சரிப்பா, உனக்கு வெர்னியர்ல அளக்கத் தெரியுமா, மைக்ரோ மீட்டரை பயன்படுத்தத் தெரியுமா?’ என்று கேட்டால், ‘எங்க லேப்ல அதைப் பார்த்திருக்கேன். ஆனா, பயன்படுத்தத் தெரியாது’ என்கிறார்கள். ‘அது 7, 8-ம் வகுப்புப் பாடம். பி.இ முடிச்சிட்டு அதையெல்லாம் பயன்படுத்தத் தெரியாதுன்னு சொல்ற?’ன்னு கேட்டால் எழுந்து போயிடுறாங்க.

பி.இ., முடிச்சிட்டாலே நல்ல சம்பளம் கொடுப்பாங்கன்னு இந்தக் காலத்து இளைஞர்கள் நினைச்சுக்கிறாங்க. தனக்கு அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. சிறுகுறு தொழில் செய்றவங்க என்பதால் காலையில் கேட் திறப்பது முதல், ராத்திரி கேட் மூடுறது வரைக்கும் எல்லா வேலைகளையும் நாங்களும் செய்றோம். ‘அர்ஜென்ட் வேலைப்பா, கொஞ்சம் இருந்து முடிச்சிக் குடுத்துட்டுப் போங்க. நாளைக்கும் கொஞ்சம் சீக்கிரமா வந்திடுங்கப்பா’ என்றால் வர்றதேயில்ல. வட இந்தியர்கள் அப்படியல்ல.  ‘எனக்கு 8 மணி நேர வேலை பத்தாது. 12 மணி நேர வேலைகொடுங்க’ன்னு கேட்கிறார்கள். அந்த ஓவர் ட்டியூட்டி காசை தங்களது செலவுக்கு வைத்துக்கொண்டு, சம்பளத்தை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். வருடத்தில் 11 மாசம் மிஷின் மாதிரி வேலை செய்கிறார்கள். ஹோலியை ஒட்டி மட்டும் ஒரு மாசம் ஊருக்குப் போயிடுவார்கள்” என்றார்.

“அதற்காக நம் பையன்களிடம் பிளஸ் பாயின்டே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு வேலையைச் சொன்னால், மிகச் சரியாகப் புரிந்துகொண்டு நாம் கேட்கிற ஃபினிஷிங்கை நம்மாட்கள் கொடுத்துவிடுவார்கள். வடமாநில இளைஞர்களுக்கு அந்தளவுக்குத் தெரியாது. மொழிப் பிரச்சினை வேறு. முழுமையாக வேலையைப் புரிந்துகொள்ளும் வரையில் சின்னச் சின்ன நஷ்டங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அதேபோல வடஇந்தியத் தொழிலாளர்கள் குழுவாக வேலைக்கு வருகிறார்கள் என்றால், ஒருவர் தவறு செய்யும்போது அவர் மீது நடவடிக்கை எடுத்தால் 10 பேரும் வேலையைவிட்டு நின்றுவிடுவார்கள். இந்தக் குழு மனநிலை நம்மாட்களிடம் இல்லை என்பதும் ஆறுதல் பட வேண்டிய செய்தி" என்கிறார் ஞானசேகரன்.

தவறான கருத்து

‘கான்சோட்டீ' என்ற பெயரில் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தொழில் துறை வளர்ச்சிக்கான கூட்டமைப்பை நிறுவி
யுள்ள ஆர்.ஜெ.ஜெயபாலனிடம் இதுகுறித்து கேட்டபோது, “நம் இளைஞர்களைப் பொறுப்பில்லாதவர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எத்தனை ஆண்களும், பெண்களும் உணவு டெலிவரி செய்யும் உடையுடன் வாகனங்களில் பறக்கிறார்கள்? கணவனும் மனைவியும் தனித்தனி அறையில் உட்கார்ந்துகொண்டு இரவு முழுக்க கணினியில் வேலை செய்வதையும் பார்க்கத்தானே செய்கிறோம். இன்னும் சொல்லப் போனால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

அதேநேரத்தில், படித்த இளைஞர்கள் தங்களுக்குரிய வேலையை அக்கறையுடன் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மையிருக்கிறது. காரணம், நம்முடைய இளைஞர்களுக்கு முன்பைவிட படிக்கிற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால், எதைப் படிப்பது என்ன வேலைக்குப் போவது என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. பெற்றோர்கள் பலர் தங்கள் விருப்பத்தைப் பிள்ளைகள் மேல் திணிக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் நம்மைக் காட்டிலும் 5 மடங்கு புத்திசாலிகள். சரியான வழிகாட்டுதலும், வாழ்க்கை குறித்த புரிதலையும் ஏற்படுத்தினால் அவர்கள் நிச்சயம் மேம்படுவார்கள்” என்றார் அவர்.

தொழில் முனைவோரான அழகேச பாண்டியன் நம்மிடம் பேசுகையில், “தமிழர்கள் சோம்பேறிகள் என்பது மாதிரியான கருத்தை நான் பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது. எல்லா இனத்திலும் சோம்பேறிகளும், சுறுசுறுப்பானவர்களும் இருப்பார்கள். வேலையில் இருந்தே ஆகணும் என்று நினைக்கிற சமூகம் உழைத்தே ஆக வேண்டும். வடஇந்தியத் தொழிலாளர்கள் நம்முடைய வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்கிற வாதத்தை ஏற்க முடியாது. தமிழர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று வேலை பார்க்க உரிமை உள்ளது என்றால், மற்றவர்கள் உள்ளே வரவும் உரிமை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, எந்தத் தனியார் நிறுவனமாக இருந்தாலும் குறைந்தது 30 சதவிகிதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்று அரசு சட்டம் போடலாம். அரசு சலுகைகளை அனுபவித்துத்தான் ஒவ்வொரு தொழிலும் நடக்கிறது என்பதால், அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அதற்காக 50 சதவீதத்துக்கு மேல் கேட்டோம் என்றால், அவர்கள் தொழில் நிறுவனத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு போய்விடுவார்கள். முதலாளிகளுக்கு லாபம்தானே பிரதானம்?” என்றார்.

சுரண்டல் தடுக்கப்படுகிறது

திருப்பூரில் பனியன் ஆலை நடத்தும் யுவராஜ் சம்பத் இதுபற்றி கூறுகையில், “இலவசங்களால்தான் தொழில் துறைக்குத் தொழிலாளர்கள் இல்லாமல் போனார்கள் என்ற கருத்து கண்டனத்துக்கு உரியது. தொழில்களும் தொழிலாளர்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. நான் ஏற்றுமதியில் நுழைந்த காலகட்டமான 70-களில் என்னுடைய இந்திய, ஐக்கிய அரபு குடியரசு, மாலத்தீவில் இருந்த நிறுவனங்களில் வேலைபார்த்தவர்களில் 50 சதவீதம் பேர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். அன்றைக்குத் தமிழக இளைஞர்களுக்குத் தொழிற் கல்வி படிப்பதற்கும் உயர் கல்வி படிப்பதற்கும் வசதி வாய்ப்புகள் இல்லை. எனவே, கிடைத்த வேலைகளுக்கெல்லாம் போனார்கள். ஆனால், தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகளின் செயல்பாட்டால் இங்கே ஆராய்ச்சிப் பட்டம் பெறும் அளவுக்குக்கூட இலவசமாகக் கல்வி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைக்குத் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளிலும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் பயிற்சிபெற்ற வேலைகளைச் செய்கிறார்கள். அதற்கு ஒருபடி மேல் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கணினி மென்பொருள் துறையிலும் கோலோச்சி வருகிறார்கள்.

இன்றைய சூழலில் தமிழர்கள் படித்துவிட்டார்கள், விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். எனவே, கொத்தடிமைகளாக இருப்பதற்கு அவர்கள் யாரும் தயாராக இல்லை. எனவே, அப்படியான விழிப்புணர்வு இல்லாத வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துச் சுரண்டுகிறார்கள். இதுதான் உண்மை” என்றார்.

இன்றைய தொழில் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதில்லை என்பதும் கசக்கும் உண்மை. கான்ட்ராக்ட் அது இது என்று அத்தக்கூலியாகத்தான் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை நடத்துகின்றன. பிறகெப்படி நிறுவனம் மீதும் முதலாளி மீதும் இளைஞர்களுக்கு மரியாதை வரும்? எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம்! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE