துரோகம் செய்த சசிகலா அதிமுகவை எப்படிக் காப்பாற்றுவார்?- ஓ.எஸ்.மணியன் தடாலடி

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

கட்சி ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் போய்விட்டது என்றாலும், மீண்டும் சசிகலா வரலாம் என்கிற பயம் அதிமுக தலைவர்களை விட்டுப்போகவில்லை. அதற்கேற்ப, தொண்டர் களிடம் அலைபேசியில் பேசி ஆடியோக்களை வெளியிடச் செய்துவந்த சசிகலாவும், டிவி சேனல்களில் பேட்டி கொடுப்பது, மதுசூதனனைப் பார்க்க அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் மருத்துவமனைக்குச் சென்றது என தனது அரசியல் ஆட்டத்தைத் தொடர்கிறார். இதுகுறித்தெல்லாம், அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம்.

சசிகலாவின் சேனல் பேட்டியைப் பார்த்தீர்களா?

பழைய கதைகளையெல்லாம் சொல்வதால் இன்றைய அரசியலுக்கு என்ன ஆகப்போகிறது?

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் மதுசூதனனை சசிகலா சென்று பார்த்ததும், தொடர்ந்து அதிமுக தொண்டர்களிடம் பேசுவதும் அதிமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்களே?

என்னுடைய மனைவி இறந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்தார். அதனால் நான் திமுக என்று அர்த்தமாகிவிடுமா? துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார் அவ்வளவுதான். அதுபோல் மதுசூதனன் உடல்நலமில்லாமல் இருப்பதால் சசிகலா அவரைப் போய்ப் பார்த்திருக்கிறார். இதெல்லாம் வழக்கம்தான். இதில் அரசியல் கிடையாது. இதனாலோ, அவர் சில பேரிடம் போனில் பேசுவதாலோ அதிமுகவுக்குள் எந்த சலசலப்பும் பாதிப்பும் ஏற்படாது.

அதிமுகவைக் காப்பாற்ற வரப்போவதாக சசிகலா அடிக்கடி சொல்கிறாரே?

தேர்தலின்போது அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அவர் சொன்னார். ஆனால், அமமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அப்படிச் செய்ய வேண்டாம் என்று சசிகலா சொல்லியிருக்க வேண்டும். குறைந்தபட்சம், “என்னை மனதில் வைத்து நீங்கள் யாருக்கும் ஓட்டுப்போட வேண்டாம். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, அம்மா உழைத்த கட்சி ஆட்சிக்கு வரட்டும்” என்று பகிங்கிரமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

தேர்தலில் அமமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை; 75 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்றது எனும் நிலையில், அதிமுகவைக் காப்பாற்றப் போகிறேன் என்று சசிகலா எப்படி சொல்ல முடியும்? அமமுகவைத்தான் அவர் காப்பாற்ற வேண்டுமே தவிர, அதிமுகவைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் எதுவும் இல்லவே இல்லை!

அதிமுகவுக்கு சசிகலா ஏன் வரக்கூடாது?

அவர்கள் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, கட்சி தொடர்பாக வழக்குகள் போடப்பட்டன. 18 எம்எல்ஏ-க்களைப் பிரித்தார்கள். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக தோற்று ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சிகளை செய்தார்கள். கடந்த தேர்தலில் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இல்லாமல், அதிமுக தோற்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வேலை பார்த்தார்கள். இவ்வளவு துரோகங்களைச் செய்தபிறகு இப்போது அதிமுகவைக் காப்பாற்ற வரப்போகிறேன் என்று பேசுவது எந்த வகையில் நியாயம்?

நீங்கள் சொல்வதையெல்லாம் செய்தது தினகரன்தானே?

சிறையில் சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் தேர்தலில் நிற்கப்போவதாக தினகரன் அறிவித்தார். அது பொய் என்றால், அப்போதே தனக்கும் தினகரனுக்கும் சம்பந்தமில்லை என்று சசிகலா சொல்லியிருக்க வேண்டும். சிறையிலிருந்து வரும்போதுகூட தினகரனின் ஏற்பாட்டில்தான் காரில் அவர் ஊர்வலம் வந்தார். எனவே, தினகரனின் செயல்பாடுகளில் தனக்குத் தொடர்பு இல்லை என்று அவரால் சொல்லவே முடியாது.

கட்சியின் முகமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும்தான் பேசுவாரா? வேறு யாரும் பேசக் கூடாதா?

செய்தித்தொடர்பாளராகப் பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கென்று தலைமையில் அவரை நியமித்திருக்கிறார்கள். எல்லோரும் பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். வாய்தவறி சொல்லப்படும் எந்த ஒரு வார்த்தையும் அரசியலில் பாதகத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்காக யாரும் அநாவசியமாகப் பேச வேண்டாம், யாரையும் சந்திக்க வேண்டாம், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிமுக தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

அதெல்லாம் தவறான வாதம். அரசியலில் யாரையும் தூக்கிவிடுவது கிடையாது. அரசியலில் ஈடுபாடு, அர்பணிப்பு, தியாகம் வேண்டும். அதோடு ‘ஃபேஸ் வேல்யூ’ வேண்டும். யாராக இருந்தாலும் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதுதான் அரசியலே தவிர, யாரும் சொல்வதாலோ தூக்கிவிடுவதாலோ ஒருவர் வளர முடியாது.

ஒற்றைத் தலைமை எனும் புள்ளியை நோக்கி எடப்பாடி நகர்ந்துசெல்கிறார் என்று சொல்லப்படுகிறதே?

அரசமைப்புச் சட்டமே நூற்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டிருக்கிறது. அதனால் காலத்திற்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப, தேர்தலில் பெற்றிருக்கிற படிப்பினைக்கு ஏற்ப அரசியல் வியூகங்கள் மாறும். அதுதான் அரசியல். நேற்று இருந்த மாதிரியே இன்றைக்கும் இருக்க முடியாது!

பாமகவுக்குப் பதிலடிமொடுத்த புகழேந்தி நீக்கப்படுகிறார்; பாஜக கூட்டணியை விமர்சித்த சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை இல்லை. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

புகழேந்தி கர்நாடக மாநிலச் செயலாளராக இருந்தவர். ஒரு கிளைக்கழகம்கூட பெங்களூருவில் கிடையாது. முன்பு கோலார் தங்கவயல் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. இப்போது அதுவும் கிடையாது. கர்நாடகத்தில் கட்சியை வளர்ப்பதில் திறமையைக் காட்டாமல், தமிழ்நாட்டுக்கு வந்து தன்னைக் கட்சியின் பொதுச்செயலாளர் மாதிரி நினைத்துக் கொண்டு பேசினால் என்ன அர்த்தம்?

உங்கள் கட்சியை இன்னொரு கட்சி விமர்சித்தால், யாராவது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?

தேவையான விஷயங்களுக்கு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு பெரிய கட்சியின் சார்பில் எல்லாவற்றுக்கும் வரிக்கு வரி பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதுவே பெரும் தவறாகவும் அமைந்துவிடும்.

பாஜக - அதிமுக உறவு தற்போது எப்படி உள்ளது?

நன்றாகவே இருக்கிறது. அதேநேரம் உறவு, கூட்டணி என்பதெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல்தான். பாஜகவின் கொள்கைகள் வேறு. எங்கள் கொள்கைகள் வேறு.

திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் தமிழகத்தில் நேரடி அரசியல் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறாரே?

அது அவருடைய எண்ணம். அவரது கட்சியை அவர் உயர்த்திப் பேசுகிறார். அதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இதில் நாம் என்ன கருத்து சொல்ல முடியும்?

அதிமுக உட்பட மற்ற கட்சிகளுடன் திமுக இணக்கமாகச் செல்வதுபோல தெரிகிறதே?

கரோனா, மேகேதாட்டு போன்ற விவகாரங்களில் தன் மீது மொத்த பழியும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அனைவரையும் கூட்டிவைத்துப் பேசுகிறார்.

இது ஒரு நல்ல அணுகுமுறை இல்லையா?

அதெல்லாம் கிடையாது. இது அவருடைய இயலாமையின் வெளிப்பாடுதான்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட சிலவற்றைப் பார்த்தால், அதிமுகவும் திமுகவோடு இணக்கமாகச் செல்வது போலத்தானே தெரிகிறது?

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒத்த கொள்கைகள் என்று சில கொள்கைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பது வழக்கம்தான். தமிழ்மொழி போன்ற விஷயங்களில் இரண்டு கட்சிகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி எல்லாவற்றிலும் என்றும் தனித்தனிதான்.

சசிகலாவைச் சமாளிக்க அதிமுக என்ன திட்டம் வைத்திருக்கிறது?

அம்மாவின் மறைவுக்குப் பிறகு இயற்கை இடர்ப்பாடுகள், அரசியல் காழ்ப்புணர்வுகள், எதிரிகளின் சூழ்ச்சிகள் என எல்லாவற்றையும் சமாளித்து ஒரு நிலையான இடத்தைத் தமிழக மக்களிடம் பெற்றிருக்கிறோம். அதனால் வானத்திலிருந்து வரும் வம்பாக இருந்தாலும் சரி, பூமியைப் பிளந்து வரும் வம்பாக இருந்தாலும் சரி... அதனையெல்லாம் சமாளிக்கக்கூடிய தெம்பும் திறனும் அதிமுகவுக்கு இருக்கிறது.

அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும் திமுகவுக்குச் செல்கிறார்களே?

இது எல்லா காலத்திலும் நடப்பதுதான். இன்னும் சொல்லப்போனால், இப்போது திமுகவை நடத்திக்கொண்டிருப்பதே அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே! அதிமுகவிலிருந்து ஆட்கள் வர வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பதே அதிமுகவுக்கு வெற்றிதான்.

வைத்திலிங்கம், முனுசாமி ராஜினாமாவால் அதிமுகவுக்கு இரண்டு ராஜ்ய சபா எம்பி பதவிகள் வீணாகிவிட்டனவே?

மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று 100 சதவீதம் நம்பினோம். அதனால் வந்த விளைவு அது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுக்கப்பட்டுவிட்டதா?

சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர்தான் வெற்றி பெற்றிருக்கிறாரே தவிர, ஸ்டாலின் வெற்றி பெறவில்லை. அதிமுகவைத் தேர்தல் களத்தில் எந்த இடத்திலும் எந்தக் கேள்வியும் மக்கள் கேட்கவில்லை. அதிமுக மீது மக்களிடம் எந்த வெறுப்பும் கிடையாது. அதனால்தான் ஒரு கோடியே 43 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுக்கள் எங்களுக்குக் கிடைத்தன. எங்களுடைய அரசியல் பாதை நிதர்சனமானது, வெளிப்படையானது, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வெற்றி தோல்வி என்பது அரசியலில் சகஜம்தான். அம்மா உயிரோடு இருந்தபோது 1996-ல் வெறும் நான்கே தொகுதிகளில்தான் வெற்றிபெற்றோம். இன்று 75 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. சொற்ப வாக்குகளில்தான் ஆட்சியைத் தவறவிட்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்பது எங்களுக்குத் தெரியும். அதிலிருந்து மீண்டெழுந்து, இனிவரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE