மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடரட்டும்!

By காமதேனு

கரோனா பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பலரும் இன்றைக்குத் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளிலிருந்து விலக்கி, அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. இது ஒருவகையில் மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும், இவ்விஷயத்தில் இன்னும் முகங்கொடுக்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளையும் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

பொதுவாகவே, அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லாத நிலை நீடிக்கிறது. பள்ளி தொடர்பான நிர்வாகப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்கிறது. அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகள்
மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. பல பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அப்படியே இருந்தாலும், பள்ளி நிர்வாகத்தின்கீழ் தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை என்பதால், நேரடியாக அவர்களைப் பயன்படுத்துவது, அவர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்துவது என்பன போன்ற பல விஷயங்கள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியின் தரம் இன்னமும் மேம்படுத்தப்படாத சூழலில், தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி பயின்ற மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேரும்போது, பலவித அழுத்தங்களை எதிர்கொள்ள நேரும். பள்ளிகள் திறக்கப்படும்பட்சத்தில் இந்தப் பிரச்சினைகள் பகிரங்கமாகவே எதிரொலிக்கும்.

இன்னொரு பிரச்சினையும் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 8-ம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே மாணவர்களைப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால், பலரும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் தனியார் பள்ளிகளிலிருந்து தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்குக் கொண்டுசெல்ல முடியாமல் தவிக்கின்றனர். 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் தேவை இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தினால், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் நிம்மதியடைவார்கள். இதுபோன்ற விஷயங்களில் அரசு உரிய கவனம் செலுத்தினால், பெருந்தொற்றுக் காலத்திலும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடரும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE