க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியானதிலிருந்து குத்துச்சண்டை குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. சென்னைவாசிகள் பலரும்கூட நம் ஊரில் இப்படி ஒரு குத்துச்சண்டை வரலாறு இருந்ததா என்று வியக்கிறார்கள். குத்துச்சண்டைப் பரம்பரைகள் அழிந்து தற்போது பாக்ஸிங் கிளப்புகளும், பாக்ஸிங் அகாடமிகளும் சென்னையில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. வரலாற்று எச்சங்களாகிவிட்ட பழைய குத்துச்சண்டைப் பரம்பரைகளைத் தேடி வடசென்னையை வலம் வந்தபோது, படத்தில் பேசப்படாத பல சுவாரசியமான விஷயங்களை அறிய முடிந்தது.
சதூர்த்தூரிய சார்பட்டா பரம்பரை
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஆர்யா நடித்த கபிலன் கதாபாத்திரம், ‘நாக்-அவுட்’ ஆறுமுகத்தின் சாயலைக் கொண்டது என்கிறார்கள். ஆறுமுகத்தின் குத்துச்சண்டை வாத்தியாரான 75 வயது நிரம்பிய தேவேந்திரனைச் சந்தித்தோம்.
“இது வெறும் சார்பட்டா பரம்பரை இல்லை. ‘சதூர்த்தூரிய சார்பட்டா பரம்பரை’ என்பதுதான் அசல் பெயர். அதற்கும் முன்னால் சதூர்த்தூரிய சார்பான பரம்பரை என்று சொல்லப்பட்டதாக என் வாத்தியார் கித்தேரி முத்து சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். சதூர்னா ‘நான்கு’ன்னு அர்த்தம். நான்கு திசையிலும் புகழோடு விளங்குவோர் கொண்ட பரம்பரைன்னு அர்த்தம். காலப்போக்குல அது சார்பட்டா பரம்பரை ஆகி, இப்போ சல்பேட்டா பரம்பரைன்னு மருவிப்போச்சு. என் வாத்தியார் கித்தேரி முத்து மாதிரி ஒரு அசகாய சூரனை நான் பார்த்ததில்லை. எங்க பரம்பரைக்குப் பெரும் பெருமை சேர்த்தவர் அவர். பெரியார் அவருக்கு ‘திராவிட வீரன்’னு பட்டம் சூட்டினார்” என்று சொன்ன தேவேந்திரன், பிற குத்துச்சண்டைப் பரம்பரைகளைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“நல்ல போட்டி இருந்தால்தானே விளையாட்டு சுவாரசியமா இருக்கும்? அப்படி எங்களுக்குப் போட்டியாக சூளை பகுதியைச் சுற்றிய வீரர்களைக் கொண்ட ‘இடியப்ப நாயக்கர் பரம்பரை’, பேசின் பிரிட்ஜ் பகுதியிலிருந்த ‘எல்லப்ப செட்டியார் பரம்பரை’, யானைக்கவுனி, ஒத்தவாடை தியேட்டர் பகுதியிலிருந்த ‘சுண்ணாம்புக் குளம் பரம்பரை’, இதுபோக, திருவான்மியூர் பகுதியிலிருந்த ‘நீலக் கடல் பரம்பரை’ன்னு நிறைய பரம்பரைகள் இருந்துச்சு.
சார்பட்டா பரம்பரையில் ராயபுரம், காசிமேடு, ஹார்பர் பகுதியிலிருந்த வீரர்கள் அதிகம். முக்கியமாக, மீனவர்கள் அதிகம் இருப்பாங்க. இந்தப் பரம்பரைகள் தான் அந்தக் காலத்தில் சென்னை குத்துச்சண்டையைக் கட்டி ஆண்டன. பரம்பரைகள் பெயரில் சாதி இருக்கலாம். ஆனா அதுல, எல்லா சாதி ஆட்களும் இருப்பாங்க. நீ திறமைசாலியா, நான் திறமைசாலியான்னுதான் போட்டி இருக்கும். அந்தப் போட்டி அடிக்கடி நீண்ட பகை, வெட்டுக் குத்துன்னு ஆகிடும். சில சமயம் போட்டி நடந்துட்டு இருக்கும்போதே பார்வையாளர்களாக இருக்கிற பரம்பரை ஆட்களுக்குள் அடிதடி நடக்கும். இப்படிப் பல பிரச்சினைகளுக்குப் பிறகு அரசாங்கம் இந்தக் குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் தடை விதிச்சுட்டாங்க” என்றார் தேவேந்திரன்.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்ஜிஆர் தொடர்பாக இடம்பெற்ற தகவல்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. அதைப் பற்றி கேட்டபோது, “இந்தப் படத்தில் எம்ஜிஆர் பாக்ஸர்களைத் தவறா பயன்படுத்தினார்னு காட்டியதாகச் சொல்றாங்க. உண்மையில் பாக்ஸிங் மேல எம்ஜிஆருக்கு ரொம்ப ஆசை. அதனால்தான் முகமது அலியைச் சென்னைக்குக் கூட்டிவந்து நேரு திடலில் மரியாதை செய்தார். ‘நாம்’ படத்தில்கூட பாக்ஸராக எம்ஜிஆர் அற்புதமா நடிச்சிருப்பார். இப்போ பரம்பரைகள் எல்லாம் அழிஞ்சுபோச்சு. பரம்பரை பேர் சொல்ல நான், என் சிஷ்யன்கள் ஆறுமுகம், ரேண்டால்ஃப் பீட்டர் மாதிரி சிலர்தான் இருக்கோம். நான் 1971-ல் ஆரம்பித்த ‘எவர்லாஸ்ட் பாக்ஸிங் கிளப்’ இன்னமும் பல பேருக்கு பாக்ஸிங் சொல்லிக்கொடுக்கிற இடமா இருக்கு” என்றார் தேவேந்திரன்.
பாதை தவறிய பாக்ஸர்கள்
பல குத்துச்சண்டை வீரர்கள் தடம்புரண்டு சீரழிந்த கதைகளும் உண்டு. வடசென்னையில் துணி இஸ்திரி நிலையம் நடத்திவரும் 58 வயதான ஜெயந்திபாபு இது குறித்து நிறையப் பேசினார். “சார்பட்டா பரம்பரையில் நான் சேரும்போது எனக்கு ஒன்பது வயசு. மேடை ஏறி என் முதல் சண்டைய 21 வயசுல போட்டேன். அது வரைக்கும் பயிற்சி மட்டும்தான். உடல் ஆரோக்கியமா இருக்கணும், தற்காப்பு வேணும்னுதான் பல பேர் இதுக்கு வந்தாங்க. தெருச் சண்டையில பாக்ஸர் குத்துக்கு முன்னாடி யாராலும் நிற்க முடியாது. அதை வச்சு, ‘நம்மளை அடிச்சிக்க ஆளு இல்லை’ன்னு நினைச்சு பல பாக்ஸர்கள் ரவுடி ஆகி வாழ்க்கையைத் தொலைச்சுட்டாங்க.
இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்தப் பரம்பரைகளுக்குப் பக்கபலமா இருந்தாங்க. ஆனா, லோக்கல்ல இருக்கிற சில அரசியல்வாதிகள் வழி தப்பிப்போன பாக்ஸர்களைத் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கிட்டாங்க. என் கூட குத்துச்சண்டை கத்துக்கிட்ட மூணு பேர் ரவுடி ஆகிட்டாங்க. அதுல ரெண்டு பேர் இப்ப உயிரோட இல்லை” என்றார்.
குத்துச்சண்டைக்கும் எம்ஜிஆருக்குமான தொடர்பு குறித்து இவரிடமும் பல தகவல்கள் உண்டு.
“குத்துச்சண்டை மட்டுமில்ல... மான்கொம்பு, சிலம்பம்னு பல சண்டைகள் சொல்லித்தர ஆட்களும் சார்பட்டா பரம்பரையில் இருந்தாங்க. சிலர் இந்தத் திறமையை வச்சு சினிமாவுக்குப் போனாங்க. அதில் முன்னோடிதான் எங்க வாத்தியார் சார்பட்டா ரத்தினத்தின் வாத்தியாராக இருந்த திருப்பதிசாமி. ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்ஜிஆர் மான்கொம்பு சண்டை போட்டுட்டு அவர் குரு காலில் ஒரு சலாம் வைப்பார். அந்த குரு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் திருப்பதிசாமி. அவர்கிட்டதான் எம்ஜிஆர் மான்கொம்பு சண்டை கத்துக்கிட்டாராம். திருப்பதிசாமி வாத்தியார் மகன் கல்யாணத்துக்குகூட எம்ஜிஆர் வந்திருந்தார். திருப்பதிசாமிகிட்ட சண்டை கத்துக்கிட்ட எம்ஜிஆரே ஒரு வகையில் சார்பட்டா பரம்பரை ஆள்தான்” என்று ஒரே போடாகப் போட்டார் ஜெயந்திபாபு.
சங்கச் சண்டைகள்
கடந்தகாலத்தில் குத்துச்சண்டை வீரர்களின் நிலை இப்படி இருந்தது என்றால், இப்போது வேறு பல பிரச்சினைகள் இருக்கின்றன என்கிறார் குத்துச்சண்டைப் பயிற்சியாளர் சல்மான். 21 வயதாகும் இவரும் சார்பட்டா வழிவந்தவர்தான். “பல பிரச்சினைகள் வருதுன்னுதான் தனியார் குத்துச்சண்டைப் போட்டிகளை அரசு ரத்து பண்ணுச்சு. இப்போ நிர்வாக ரீதியாகக் குத்துச்
சண்டை மாறினாலும், பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கு. முன்னாடி எல்லாம் பரம்பரை இருந்துச்சு. இப்போ அது அழிஞ்சு பாக்சிங் அசோசியேஷன்ற பேர்ல தமிழ்நாட்டு அளவுல சங்கங்களா இருக்கு. ஒரு பாக்ஸர் ஒரு சங்கத்தில் இருந்தால் இன்னொரு சங்கப் போட்டியில் கலந்துக்க முடியாது. அதுமட்டுமல்ல தேசிய அளவிலான போட்டிக்குத் தமிழக அரசு சார்பா கலந்துக்கும்போது எந்தச் சங்க ஆட்களை எடுப்பதுன்னு அதிகாரிகளுக்கே குழப்பம் இருக்கு. சங்கங்களுக்கு இடையில இருக்குற அரசியல் சண்டையில பல கனவுகளோட வர்ற சின்னப் பசங்களோட வாழ்க்கைதான் கேள்விக் குறியா இருக்கு. பரம்பரைச் சண்டையிலிருந்து மீண்டு, சங்கச் சண்டையில் சிக்கிக்கிடக்கிற குத்துச்சண்டையை அரசாங்கம் மீட்டால் பல நல்ல குத்துச்சண்டை வீரர்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பாங்க” என்றார் சல்மான்.
ஒரு துறையின் வரலாற்றைப் பெருமையுடன் நினைவுகூருவது முக்கியம்தான். அதைவிட சமகாலத்தின் நிலையைச் சீர் செய்வது
சமூகத்தின் அவசியம். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின்மூலம் குத்துச்சண்டைக்குக் கிடைத்திருக்கும் கவன ஈர்ப்பு, அதற்கு ஓர் ஆரம்பப்புள்ளியாக இருக்கட்டும்!