கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பது அரிது. அதிலும், மேடும் பள்ளமுமான பாதைகள் நிறைந்த பகுதி என்பதால், அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதெல்லாம் அசாத்தியமான விஷயம். ஆனால், நீலகிரி மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இனி இந்தப் பிரச்சினை இருக்காது. தேவையான மருத்துவ சாதனங்களுடனும், ஆக்ஸிஜன் சிலிண்டருடனும் ‘ஆம்புரெக்ஸ்’ எனும் பெயரில் மலைப் பாதைகளில் சென்றுவரும் ஆட்டோ ஆம்புலன்ஸ் இங்கு அறிமுகமாகியிருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சேவை இது. குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் ‘கஃபே’ ஒன்றை நடத்திவரும் ராதிகா, தனது வாடிக்கையாளர்களின் உதவியுடன் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் மக்களின் மனதில் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியிலும் இவரது பெயர் இடம்பிடித்ததுதான் விசேஷம். மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கும் ராதிகாவிடம் பேசினோம்.
ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டம் எப்படிச் சாத்தியமானது?
என்னோட வாடிக்கையாளர்கள் பலரும் சேவை மனப்பான்மை உள்ளவங்க. “குன்னூர்ல அவ்வளவு மருத்துவ வசதி இல்லையே... நாம ஏதாவது பண்ணணும்”னு அவங்ககிட்ட அடிக்கடி பேசிட்டே இருப்பேன். அப்பதான், மலைவாழ் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பிச்சா என்னன்னு ஒரு ஐடியா வந்தது. இதைச் சொன்னதும் பலரும் ஸ்பான்ஸர் பண்ண முன்வந்தாங்க. நான் ஒரு ஆம்புலன்ஸுக்கு ஸ்பான்ஸர் பண்ணினேன். கிர்லோஸ்கர் பெங்களூருலயிருந்து ஒரு ஆம்புலன்ஸ், ‘ஸ்டெப் அப் ஃபவுண்டேஷன்’ சார்பாக ஒரு ஆம்புலன்ஸ், சிங்கப்பூரைச் சேர்ந்த சுவாமிநாதன் தம்பதி சார்பில் ஒரு ஆம்புலன்ஸ்னு நாலு ஆம்புலன்ஸ்கள் தனிப்பட்ட முறையிலயே வந்துடுச்சு. மீதி இரண்டு ஆம்புலன்ஸ்கள் கூட்டு முயற்சி வசூல்ல வந்தது.
இந்த ஆம்புலன்ஸ் ஆட்டோக்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் தயாராகுது. ஒரு ஆட்டோவின் விலை 3.5 லட்சம் ரூபாய். ஒவ்வொரு ஆம்புலன்ஸூம் ஏழை எளியவங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சோம். அதனால சேவை மனப்பான்மையுடன் செயல்படும்
மருத்துவமனைகளுக்குத்தான் கொடுத்திருக்கோம்.
108 ஆம்புலன்ஸ் சேவையின்கீழ் வரும் அரசு மருத்துவமனைக்கு ஒன்று, புஷ்பா மருத்துவ மனைக்கு ஒன்று, கேஎம்எஸ் மருத்துவமனைக்கு ஒன்று என மொத்தம் 6 ஆம்புலன்ஸ்களைக் கொடுத்திருக்கோம். ஏழை எளியவர்களுக்கு இலவசம். சிலருக்குக் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கிறாங்க.
இப்படி ஒரு சேவையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
சின்ன வயசிலிருந்தே எனக்கு சேவை மனப்பான்மை உண்டு. சுற்றியிருக்கிறவங்களுக்கு அப்பப்ப சின்னச் சின்ன உதவிகள் செஞ்சிருக்கேன். குறிப்பா, கரோனா காலத்தில் மக்கள் படற அவஸ்தை ரொம்பவே வருத்தம் தந்தது. அதிலும் நீலகிரி போன்ற மலைப்பிரதேசத்தில் எந்த மருத்துவ மனையிலும் ஆக்ஸிஜன் யூனிட் இல்லாம அல்லாடறதைப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன். இரண்டு மாசம் முன்னால, நண்பர்களோட உதவியோட குன்னூர் லாலி மருத்துவமனைக்கு 500 எல்பிஎம் திறன் கொண்ட ஒரு ஆக்ஸிஜன் ஜெனரேட்டிங் பிளான்ட் (ஆக்சிஜன் உற்பத்திக் கொள்கலன்) ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நீலகிரியில் இதற்கு முன்னால எந்த மருத்துவ மனையிலும் ஆக்ஸிஜன் பிளான்ட் கிடையாது. ஆக்ஸிஜன் தேவைப்படற நோயாளிகள் கோவைக்கோ, கேரளாவுக்கோ போக வேண்டி யிருந்தது. நாங்க ஆக்ஸிஜன் பிளான்ட் வச்சதுக்கப்புறம் குன்னூர் அரசுப் பொது மருத்துவமனையில் இன்னொரு ஆக்ஸிஜன் பிளான்ட் போட்டிருக்காங்க. ஊட்டி அரசு மருத்துவமனையில் ஒரு ஆக்ஸிஜன் பிளான்ட் வந்திருக்கிறதா சொன்னாங்க. இப்படி இங்கே ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஆக்ஸிஜன் வசதி வந்துடுச்சு. அதனால நீலகிரியில் ஆக்ஸிஜன் இல்லைங்கிற பயம் இனி இருக்காது!
உங்கள் சொந்த ஊரே குன்னூர்தானா?
இல்லை... உத்தராகண்ட். அங்கே டேராடூன்ல படிச்சேன். அப்புறம் ஐஏஎம் பெங்களூருல படிச்சுட்டு, அங்கேயே ஒரு அமெரிக்க நிறுவனத்துல வேலை செய்தேன். அதுக்கப்புறம் குன்னூர் வந்து செட்டில் ஆயிட்டேன். குன்னூர் ரொம்ப அழகான ஊர். டேராடூன் மாதிரி. அதுதான் புடிச்சுப்போச்சு. இங்கே 2017 ஜனவரியில் கஃபேயை ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் பிஸினஸ் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு.
உங்கள் குடும்பம் பற்றி..?
எனக்குன்னு ஒருத்தரும் கிடையாது. ஒரே ஒரு சகோதரி. அவளும் கனடாவில் இருக்கிறாள். நான் இங்கே தனி ஆள்.
உங்கள் சேவை பற்றி பிரதமருக்கு எப்படித் தெரிந்தது?
பிரதமருக்கு இந்தத் தகவல் எப்படி போச்சுன்னு எனக்கே தெரியாது. அவர் பேசறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடிதான் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திலிருந்து எனக்கு போன் வந்தது. “உங்களைப் பத்தி பிரதமர் பேசப்போறார்”னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம். அதுக்கு ஒரு நாள் முன்னாடி தூர்தர்ஷன்காரங்க வந்து விஷூவல் பைட்ஸ் எடுத்தாங்க. “என்ன விஷயமா எடுக்கறீங்க?”ன்னு கேட்டேன். அவங்களும் எதுவும் சொல்லலை.
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உங்களைப் பாராட்டியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். நீலகிரி பத்தி முதன்முறையா பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கார். அது இன்னமும் கூடுதல் மகிழ்ச்சி. நாம செய்யற சேவை சரியா இல்லையாங்கிற உறுத்தல் எனக்கு இருந்துட்டே இருந்தது. இப்ப நீலகிரி மக்களுக்கு நம்மாலான உதவி பண்ணியிருக்கோம்னு நம்பிக்கை வந்திருக்கு. பிரதமர் பேசியதைக் கேட்டு இன்னமும் நிறைய செய்யணும்னு உத்வேகம் கிடைச்சிருக்கு. பிரதமர் பேசியதால, நிறைய பேர் இப்படி சேவை பண்ண முன் வருவாங்கன்னு நம்பறேன். எல்லாமே அரசாங்கம் செய்யும்னு உட்கார்ந்திருந்தா ஒண்ணுமே நடக்காது. நாமளும் மனமுவந்து நம்மால முடிஞ்ச அளவுக்கு சேவை செய்யணும். அதைவிட மனசுக்கு சந்தோஷம் தர்ற விஷயம் வேறெதுவும் இல்லை!