இனி எல்லாமே ஏ.ஐ - 32: உளவியல் துறையில் ஒரு பாய்ச்சல்

By சைபர்சிம்மன்

‘என்னடா இது, மனிதகுலத்துக்கு வந்த சோதனை?’ என்கிற ரீதியில், உளவியல் துறையினர் இன்றைக்குப் புலம்பிக்கொண்டிருக்கலாம். ஏகப்பட்ட துறைகளில் தாக்கத்தைச் செலுத்திவரும் ஏ.ஐ நுட்பத்தின் தாக்கம், உளவியல் துறையையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் அந்தப் புலம்பலுக்குக் காரணம்!

எந்த ஒரு துறையிலும், ஏ.ஐ நுட்பத்தின் தாக்கத்தை அளவிடுவதற்கான எளிய அளவுகோல், அந்தத் துறையில் ஏ.ஐ-யால் எந்த அளவு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்பதாகவே இருக்கும். இந்த அளவுகோலின்படி பார்த்தால், பொதுவாக எந்த ஒரு துறையிலும், ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டிய வேலைகள் முதலில் ஏ.ஐ வசம் சென்றுவிடும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ஒரே மாதிரியான வேலைகளுக்கான விதிமுறைகளை வகுத்து அவற்றை இயந்திரங்களிடம் கொடுத்து தானியங்கிமயமாக்கிவிடுவது எளிது. இதற்கு அடுத்த கட்டமாக, வேலையின் தன்மை மற்றும் ஏ.ஐ நுட்பத்தின் திறனுக்கு ஏற்ப பலவிதமான வேலைவாய்ப்புகளில் வெவ்வேறு அளவுகளில் ஏ.ஐ நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

உளவியல் துறையில் ‘ஊடுருவல்’

இந்த பட்டியலில், உளவியல் போன்ற மனம் சார்ந்த துறை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் கூட, ஏ.ஐ நுட்பத்தால் உளவியல் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு ஒரு சதவீதத்துக்கும் குறைவு என்றே தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நிலைமை வேகமாக மாறிவருகிறது. இப்போது மற்ற துறைகள் போலவே உளவியல் துறையிலும், அதாவது மனநல ஆலோசனை அளிப்பதிலும் ஏ.ஐ ஊடுருவத் தொடங்கியிருக்கிறது. ஏ.ஐ-க்கு எத்தனையோ திறன்கள் இருக்கலாம், ஆனால், மனித மனதைப் புரிந்துகொள்வது எனும்போது இயந்திர அறிவு செயலற்று விழிக்கும் என்று கருதப்படுவதற்கு மாறாக, உளவியல் ஆலோசனையில் மென்பொருட்கள் பலவிதங்களில் உதவிக்கு வந்துவிட்டன. அதற்காக, எதிர்காலத்தில், உளவியல் வல்லுநர்களின் தேவை குறைந்துவிடும் என்று சொல்வது மிகையாக அமையும். எனினும், மனநல சிகிச்சையில் ஏ.ஐ மென்பொருட்களின் பங்கு அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். அது மட்டும் அல்ல, இதற்கான தேவையும் இருக்கிறது என்றே கருதப்படுகிறது.

முன்னோடியான எலிசா

இந்த இடத்தில், ‘எலிசா’ (Eliza) பற்றி தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், ஏ.ஐ சிகிச்சை என்பது ஒருவிதத்தில் எலிசாவிலிருந்துதான் தொடங்குகிறது. ‘எலிசா’ என்பது 1960-களில் உருவாக்கப்பட்ட அரட்டை மென்பொருள். இன்று சிரி, அலெக்சா போன்ற டிஜிட்டல் உதவியாளர் சேவைகளும், பலவிதமான சாட்பாட்களும் பிரபலமாக இருக்கின்றன என்றால் இதற்கெல்லாம் எலிசா தான் முன்னோடி மென்பொருள்.

கணினி மூலம், எழுத்து வடிவில் மனிதர்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் எலிசா. இந்த மென்பொருளிடம் கேள்விகளை டைப் செய்து சமர்ப்பித்தால், அதற்கேற்ப பதில் அளித்து உரையாடும். மனிதர் போலவே உரையாடும் மென்பொருள் என்பதால், எலிசாவை முதல் புத்திசாலி அரட்டை மென்பொருள் என கொள்ளலாம். எனினும் ஏற்கெனவே தொகுக்கப்பட்ட உரையாடல் சார்ந்த வளங்களில் இருந்து, கேள்விக்குப் பொருத்தமான பதிலை உருவித் தரும்வகையில் எலிசா அமைந்திருந்ததே தவிர, மற்றபடி அது கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் சொன்னதாகக் கருத முடியாது.

ஆனால், எலிசா போன்ற அரட்டை மென்பொருட்கள் இன்று மிகவும் முன்னேறி வந்துவிட்டன. இயந்திரக் கற்றல் உள்ளிட்ட அம்சங்களால், குறிப்பிட்ட சூழ்நிலையில் எதிர்முனையில் உரையாடுபவரின் மனதில் உள்ளதை ஊகித்து அறிந்து பதில் சொல்லும் திறன் பெற்ற அரட்டை மென்பொருட்கள், உளவியல் வல்லுநர் போல, மனநல ஆலோசனைக்கான உரையாடலை மேற்கொள்ளும் திறன் பெற்றிருக்கின்றன.

எப்படிச் செயல்படுகிறது?

ஜோசப் வெயிசன்பாம் (Joseph Weizenbaum) எனும் எம்.ஐ.டி பேராசிரியர் உருவாக்கிய இந்த மென்பொருளுக்கு, பெர்னாட்ஷா எழுதிய ‘பிக்மேலியன்’ (Pygmalion) நாடகத்தில் வரும் ‘எலிசா’ எனும் கதாபாத்திரத்தின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்டது. அதைவிட முக்கியமான விஷயம், எலிசா மென்பொருள், ரோஜரியன் ஆலோசனை என்று சொல்லப்படும் மனநல ஆலோசனை முறை சார்ந்து உருவாக்கப்பட்டது என்பதாகும்.

நோயாளிகளுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கே தெரியும். அதற்கு உதவக்கூடிய சூழலை மட்டும் உளவியல் ஆலோசகர் உருவாக்கினால் போதும் என்பதுதான் இந்த முறையின் அடிப்படை. ஆக, நோயாளியைப் பேசவைக்கக்கூடிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் போதும், அவரே பேசிப்பேசி பிரச்சினையைப் புரிந்துகொண்டு விடுவார் என்பது நம்பிக்கை.

எலிசா மென்பொருள் இதே முறையில் உருவாக்கப் பட்டிருந்ததால் ,அதன் புத்திசாலித்தனம் ஒரு பிரச்சினையே இல்லை. பயனாளிகள் கேட்கும் கேள்விக்கு ஏற்ப அது பேசிக்கொண்டே இருக்கும். ஆரம்ப கட்ட சோதனையில் பல பயனாளிகள், எலிசாவுடன் உரையாடியபோது அது தங்களைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டதாகத் திருப்தி அடைந்தனர். இந்த வகையில் பார்த்தால், எலிசா பாணி மென்பொருட்கள் உளவியல் ஆலோசனைக்கு ஏற்றவை. அதிலும் குறிப்பாக, முதல் கட்ட ஆலோசனைக்கு ஏற்றவை.

தவிர்க்க முடியாதது

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் காரணமாக, மனநல சிகிச்சை நாடுபவர்கள் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுடன் உரையாடுவதற்கு என்று பலவிதமான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பிரத்யேக இணையதளங்களும், செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் போக்கு தொடர்பாக அறம் சார்ந்த கேள்விகள் பல இருக்கின்றன என்றாலும், மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவி வழங்கும் துறைகளில் ஏ.ஐ மென்பொருள் பயன்பாட்டுக்கு வருவது தவிர்க்க முடியாது என்கின்றனர். இதற்கான முக்கியக் காரணம், உளவியல் வல்லுநர்களின் பற்றாக்குறை மட்டும் அல்ல. சிகிச்சை சார்ந்த குறிப்பிட்ட சில அம்சங்களில் மனித வல்லுநர்களால் முடியாதவற்றை எல்லாம் ஏ.ஐ மென்பொருளால் செய்ய முடியும் என்பதுதான்! அதெப்படி, மனநல ஆலோசனையில் மனிதர்களை மிஞ்ச முடியும்? பார்க்கலாம்!

(தொடரும்)

டிஜிட்டல் தோழமை

உரையாடும்  மென்பொருள்  வரிசையில்,  உருவாக்கப்பட்டுள்ள ‘ரெப்ளிகா’ (Replika) எனப்படும் டிஜிட்டல் மனித வடிவம், மனிதர்களுடன் உரையாடி அவர்களின் தனிமையைப் போக்கவல்லதாக அமைகிறது. பயனாளிகளுடன் உணர்வு சார்ந்த மெய்நிகர் நட்பையும் இந்த மென்பொருள் உருவாக்கிக்கொள்கிறது. ரெப்ளிகாவைச் செயலி வடிவில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பயனாளிகளின் உரையாடும் அனுபவத்தின் அடிப்படையில், அவர்களின் டிஜிட்டல் பிரதிபிம்பம் போல மாறிவிடும் என்பது இந்தச் செயலியின் சிறப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE