இசை வலம்: கார்கில் வீரர்களுக்காக ஒரு கானம்

By காமதேனு

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

ஜூலை 26, கார்கில் போர் நிறைவடைந்த தினம். அந்தப் போரில் நமக்குக் கிடைத்த வெற்றியையும் அதற்குக் காரணமான நமது ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், ‘ஜெய் போடுவோம்’ எனும் பாடலை உருவாக்கியிருக்கிறார் பிரபல வயலின் வித்வான் லால்குடி கிருஷ்ணன். நாம் உறங்கும்போதும் பனிமலையின் உச்சியில் நமக்காக விழித்திருக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் தீரத்தையும் போற்றும் அழகான, அர்த்தமுள்ள வரிகளையும் அவரே எழுதியிருக்கிறார். அவரிடம் இசை பயிலும் விஜயா சங்கர், நாராயண் ஷர்மா ஆகியோர் இந்தப் பாடலை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள்.

விதைநெல்லை விதைக்கும்போதும் சரி, விளைந்த பயிரை அறுவடை செய்யும்போதும் சரி... அந்த நிகழ்வுகளைப் பாடலில் ஏற்றிப் பாடுவதற்கு காலம் காலமாக நம்முடைய விவசாயிகள் தவறியதே இல்லை. சீறிவரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பாடல்கள் பாடி வைத்திருக்கிறோம். ஆனால், நாட்டைக் காப்பவர்களுக்காகப் பாடப்பட்டிருக்கும் நாட்டுப்புறப் பாட்டு இது. நாட்டுப்புறப் பாடல்களுக்கே உரிய தெம்மாங்குக் குரல் விஜயா சங்கரிடமிருந்து தொடங்கும் போதே மனத்தின் எல்லா கதவுகளும் திறந்துகொள்கின்றன.

‘கடும் பனி கொல்லும் குளிர்
சுடும் வெயில்… நடு நிசி... கொல்லும் பசி…
எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு…
எல்லையில்லா தியாகம் பண்ணி…
எல்லையத்தான் காக்கிறாங்க…’

என, வெகு இயல்பாகக் கிராமத்தில் வெள்ளந்தியான மனிதர்களின் மொழியில் நம் வீரர்களை வாழ்த்துவது தான், இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் வசீகரிக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

எதிரிகளிடம் சிக்கிய வீரமகன் அபிநந்தன் மீண்டுவந்த காட்சிகளும் எண்ணற்ற வீரர்களின் தியாகங்களும் வார்த்தைகளாக, சம்பவங்களாக நிழலாடுகின்றன.

‘எதிரிகளும் குண்டுகளும் இவங்களுக்குக் குண்டுமணி’ எனும் வரிகளில் இருக்கும் உருக்கம்… வீரமரணம் அடைந்தவர்களின் உருவங்களை நம் மனக்கண்ணில் தோன்றவைக்கிறது. கேட்கும் ஒவ்வொருவருக்கும் பாடலை இன்னமும் நெருக்கமாகக் கொண்டு வருவதில் துணை செய்கின்றன பாடலுக்கேற்ற இசையும், வார்த்தைகளுக்கேற்ற காட்சிகளின் தொகுப்பும்.

‘ஜெய் போடுவோம்’ பாடலைக் காண: https://youtu.be/NAem99FOVYI

* * *

பாடலை எங்கிருந்து பாடுவது?

‘என்ன சத்தம் இந்த நேரம்?’ பாடலை சன்னமான குரலில்தான் எஸ்பிபி பாடியிருப்பார். ‘வராஹ நதிக்கரையோரம் ஒரேயொரு பார்வை பார்த்தேன்’ எனும் பாடலை உச்ச ஸ்தாயியில் ஷங்கர் மகாதேவன் பாடியிருப்பார். ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாடலைக் கேட்கும்போதெல்லாம், அடிவயிற்றிலிருந்து குரல் எடுத்துப் பாடியிருக்கும் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் வளம் நம்மை அசரடிக்கும். இப்படிப் பாடலை எங்கிருந்து பாடுவது, தலையிலிருந்தா, மார்பிலிருந்தா, வயிற்றிலிருந்தா, தொண்டையிலிருந்தா என அலசி ஆராய்கிறார் ஷங்கர் மகாதேவன்.

இந்தியில் பேசினாலும், நன்றாக பாடிக் காட்டுவதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. மேடையில் பாடுபவர்களுக்கு மட்டும் அல்ல, தங்களின் விருப்பத்துக்குப் பாடுபவர்களுக்குக்கூட இவர் சொல்லும் நுட்பங்கள் பயன்படும். பாடுவதைப் பற்றிப் பேசுவது ஒரு சுகமான அனுபவம். ஷங்கர் மகாதேவன் அளிக்கும் அந்த அனுபவத்தை நீங்களும் அனுபவியுங்கள்! புதுமையாக மட்டும் அல்ல புதிராகவும் இருக்கும்.

ஷங்கர் மகாதேவனின் இசை https://www.youtube.com/watch?v=vgafdA4I4bI

* * *

தவில் வித்வானின் உலக சாதனை!

கரோனா ஊரடங்கால் மங்கள வாத்தியமான நாகஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், இந்தத் துறையில் புதிதாகக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் தவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசன், ஒரு நாளுக்கு ஒரு தாளம் என 108 தாளங்களை எப்படிக் கையாள வேண்டும் எனும் நேர்த்தியைக் காணொலியில் ஆவணப்படுத்தி அசத்தியிருக்கிறார். இதற்காக ‘இந்தியன் வோர்ல்ட் ரிகார்ட்ஸ்’ அவருக்கு உலக சாதனையாளர் விருது வழங்கியிருக்கிறது.

“தாளங்களின் பெயர்கள் அதன் அங்கங்கள் அதன் விளக்கங்களை ஒழுங்குபடுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதற்காகக் கடந்த பத்தாண்டுகளாகப் பல இசை மேதைகளைச் சந்தித்தும், நூல்களின் வாயிலாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன். அதன் பயனாக 108 தாளங்களை நிர்வகிக்கும் ஒழுங்குமுறையை ஆவணப்படுத்த முயன்றேன்.

ஒரு லய வித்வானுக்குத் தனி ஆவர்த்தனத்தின்போது, வாசிக்கப்படும் இந்தத் தாளக் கணக்கு தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். இதை உலக சாதனைக்காகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் திட்டமிடவில்லை. அடுத்த தலைமுறைக்கு 108 தாளங்களைப் பற்றிய ஒரு தெளிவை வழங்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த முயற்சியில் இறங்கினேன். எங்கள் தலைமுறைக்கே 108 தாளங்கள் பற்றிய விவரங்கள் கிடைப்பது அரிதாக இருக்கும்போது, எதிர்வரும் தலைமுறைக்கு இந்த விவரங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் இந்த முயற்சியில் இறங்கினேன்” என்கிறார் சிலம்பரசன்.

மேலும், “108 தாளங்களை எப்படிக் கையாள வேண்டும் எனும் தெளிவை என்னுடைய இந்தப் பதிவுகளைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும். எந்தெந்த தாளத்தை எப்படிக் கையாளுவது? அதன் அங்கங்கள், அறுதி போன்ற பல விவரங்களையும் ஒவ்வொரு தாளத்திற்கும் நிர்ணயித்து கூறியிருக்கிறேன். குறைவான அட்சரங்களில் முடியும் தாளங்கள் முதல் 128 அட்சரங்களைக் கொண்ட சிம்ம நந்தன தாளம் வரை இந்தப் பதிவில் உள்ளன. தினம் ஒரு தாளமாக 108 நாட்களில் 108 தாளங்களைக் காணொலியாக வெளியிட்டிருக்கிறேன். 108 தாளத்துக்கு இதுவரை யாரும் இப்படி அதன் அங்கங்களை நிர்ணயித்து ஆவணப்படுத்தவில்லை. அதை அடிப்படையாகக் கொண்டுதான் உலக சாதனையாளர் விருதை எனக்கு கொடுத்திருக்கின்றனர்” என்று அடக்கம் நிறைந்த குரலில் சொல்கிறார் சிலம்பரசன்!

தாளக் கணக்குகளின் காணொலி: https://www.youtube.com/watch?v=YOx25b7Pdes

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE