கரு.முத்து
muthu.k@kamadenu.in
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் முக்கியமான அம்சமாக இருந்தது, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம். பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. எனினும், இந்த வியூகத்தால் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்குப் பெரும் சரிவு ஏற்பட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் திமுக, இதை எப்படிக் கையாளப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதற்கான அரசாணையைப் பிறப்பித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்த வெற்றிக்குத் தாங்கள்தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் உரிமை கொண்டாடிவரும் சூழலில், வேல்முருகனிடம் ஒரு பேட்டி.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
வன்னியர்களின் வாழ்நாள் கோரிக்கை இது. நான் திமுக கூட்டணியில் இணைகிறபோதே இக்கோரிக்கையை வலியுறுத்தியிருந்தேன். எங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்திருந்தார். மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலிலும் திமுக இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவந்தது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தக் கோரிக்கை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
ஆனால், இச்சட்டம் அதிமுக ஆட்சியில்தானே கொண்டுவரப்பட்டது?
சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், எப்போது கொண்டுவந்தார்கள்? பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவராத சட்டத்தை, ஆட்சி அதிகாரத்தை இழப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள். இதைத் தங்களின் சொந்த லாபத்துக்காகக் கொண்டுவந்தார்களே தவிர இதனால் வன்னியர்கள் பலன்பெறவில்லை.
நீங்கள் 15 சதவீத இட ஒதுக்கீடு தேவை என்றல்லவா கோரிவந்தீர்கள்? இப்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த 10.5 சதவீதம் போதுமானதுதானா?
தற்போதிருக்கும் வன்னியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதேநேரத்தில் இப்போதைய நிலையில் வல்லுநர்களும், மற்ற அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ள 10.5 சதவீத ஒதுக்கீடு தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இப்போதைய நிலையில் இது ஆதாயமானதாகத்தான் இருக்கும். எனினும், தமிழ்நாட்டில் அனைவருக்குமான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு ஒன்றே முழுமையான நிரந்தரத் தீர்வாக இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்புக்குப்பின் அதனடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை, அது எத்தனை சதவீதமாக இருந்தாலும், அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அமலுக்கு வந்திருப்பதில் உங்களுடைய பங்கு என்ன?
நாங்கள் திமுக கூட்டணியில் இணைகிறபோது விடுத்த கோரிக்கை இது. “சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கிடையில் தற்காலிக ஏற்பாடாக பல்வேறு வன்னியர் சமூகத்தினுடைய தலைவர்களும், அமைப்புகளும் உள்ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். அதைப் பரிசீலனை செய்து நிறைவேற்றித் தர வேண்டும்” என்று சட்டமன்றத் தேர்தலின்போது வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதுதானே இப்போது நடந்திருக்கிறது.
வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக பலகட்டப் போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் நடத்தியிருக்கிறார். அதனால் இந்த இடஒதுக்கீடு கிடைத்ததில் அவருக்கும் பங்கிருக்கிறது தானே?
பல ஆண்டுகாலமாக அவர் போராட்டங்களை நடத்திவருகிறார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதற்கெல்லாம் பயன் கிடைக்கவில்லையே? 1987-ல் சாலைமறியல் நடந்தபோது இந்த இடஒதுக்கீட்டை எம்ஜிஆர் கொடுத்திருந்தார் என்றால் ராமதாஸின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று சொல்லலாம். அப்போது போராடிய வன்னியர்கள் உயிரிழந்தார்களே தவிர எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபோது, எந்தவித போராட்டமும் இல்லாமல் கோரிக்கைகளை பரிசீலித்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் நானும், சி.என்.ராமமூர்த்தி போன்றவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரையிலும் 15 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அப்போதெல்லாம் ராமதாஸ் அதைப் பற்றி பேசவேயில்லை. கடந்த அதிமுக ஆட்சியின்போது, வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டதைப் பார்த்த பிறகுதான் ராமதாஸ் விழித்துக்கொண்டார். எங்கே நாங்கள் கேட்ட 15 சதவீத உள்ஒதுக்கீடும் வழங்கப்பட்டுவிடுமோ என்ற ஐயத்தில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவரும் கேட்க ஆரம்பித்தார். அதனால் இடஒதுக்கீட்டுக்கும் அவர் காரணமில்லை. இப்போது வழங்கப்பட்டிருக்கும் உள் இடஒதுக்கீட்டுக்கும் அவர் காரணமில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம் தாக்கலானபோதும், தனக்குக் கிடைத்த வெற்றி என்று அவர் மார்தட்டிக் கொண்டார். இப்போது திமுக ஆட்சியில், நாங்கள் கோரிக்கை வைத்து செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கும் நிலையிலும், இதையும் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அவர் சொல்லிக்கொள்கிறார். இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.
ராமதாஸின் பிறந்த நாளுக்குத் தமிழக முதல்வர் வாழ்த்து சொன்ன அன்றைய தினமே, இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
தமிழகத்தில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளுக்குச் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டார்கள். அந்த நேரத்தில் இந்த இடஒதுக்கீடு உண்டா இல்லையா என்ற கேள்வி விஸ்வரூபமாக எழுந்தது. அதைத் தெளிவுபடுத்தவே அன்றைய தினமே கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு உண்டு என்பதை அரசு அறிவித்திருக்கிறது. அவ்வளவுதான். இதற்கு வேறு பின்னணி எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டத்தால் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், இந்த சட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கும் திமுகவுக்குப் பாதகம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?
எந்தப் பாதகமும் ஏற்படாது. இது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அம்பாசங்கர் அறிக்கை, சட்டநாதன் ஆணையம் உட்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சமூகநீதியைப் புரிந்துகொண்ட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். புரிதல் இல்லாதவர்களையும் இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வைத்திருக்கிறது. அதனால் போராட்டங்களுக்கு வேலையில்லை. திமுகவுக்குப் பாதகம் ஏற்படும் என்ற பேச்சுக்கும் இடமில்லை.
உங்களைக் காணவில்லை என்று தொகுதிவாசிகள் சார்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்தனவே... அதற்கு என்ன காரணம்?
இந்த இடஒதுக்கீடு விவகாரத்துக்காகத்தான் அப்படிச் செய்தார்கள். அவர்களின் இயலாமைதான் அதில் தெரியவருகிறது. நான்தான் அதைப் பெற்றுத்தர முடியும் என்று அவர்களும் நம்பியிருக்கிறார்கள். இதற்காக நான் தொடர்ந்து அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். மற்றபடி 24 மணி நேரமும் தொகுதியில்தான் இருக்கிறேன். சொந்தச் செலவில் நிவாரணம் உள்ளிட்ட பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அமைச்சர்களைச் சந்தித்தும், அவர்களை அழைத்துவந்தும் தொகுதிக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர உழைத்துக்கொண்டிருக்கிறேன்.