ரஜினி சரிதம் 27: ஆறிலிருந்து எழுபது வரை- ரஜினியைப் பார்க்க வந்த எம்ஜிஆர்!

By திரை பாரதி

‘தாய் மீது சத்தியம்’ படத்துக்கு ரஜினி எதிர்பார்க்காத மிகப் பெரிய சம்பளத்தை, ஒரே தவணையாகக் கொடுத்தார் தேவர். ரஜினியோ, “அய்யா இப்போ ஐயாயிரம் அட்வான்ஸ் போதும்... வியாபாரம் ஆனதும் சம்பளம் கொடுங்க” என்றார். இதைக்கேட்ட தேவர். “அப்படியே சின்னவர் மாதிரி நடந்துக்கிறப்பா… பூஜை போட்ட அன்னிக்கே படம் வியாபாரமாகிப் போச்சு” என்று பணக்கட்டுகளை புதிய ப்ரீப் கேஸ் பெட்டியில் வைத்துக்கொடுத்தார்.

அவ்வளவு பெரிய தொகையை வாங்கிய ரஜினியின் முகத்தில் மகிழ்ச்சிக்கான எந்தச் சலனமும் இல்லை. கைநிறையப் பணம் வாங்குகிறோம் என்று சம்பிரதாயத்துக்குக்கூட ரஜினி முகத்தில் மலர்ச்சியைக் காட்டவில்லை. இதைக் கண்ட தேவர், ரஜினியை அழைத்துக்கொண்டு தன்னுடைய அலுவலகத்தின் பூஜையறைக்குள் போனார்.

அங்கே முருகன் படத்தின் முன்னாள் நிற்கவைத்துவிட்டுச் சொன்னார், “ரஜினி இது ஒன்னோட ஆபீஸ்... என் வீடு ஒன்னோட வீடு. நீ எப்ப வேணா வா. எங்க வேணா தூங்கு. மனசு சரியில்லையா... அப்போ, இதோ இருக்கான் பாரு எங்கப்பன்... அவன்கிட்ட சொல்லு. வாய் திறந்து என்ன மாதிரி அவன் கிட்டப் பேச மாட்டியா... எங்கிட்ட மனசவிட்டுச் சொல்லு. உனக்கு என்னப்பா கஷ்டம்?” பெற்ற தகப்பனைப்போல் கேட்டார். அந்த நிமிடம் சட்டெனக் கலங்கிவிட்டார் ரஜினி.

“என்ன இருந்து என்ன சார்... என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாதும் பத்திரிகைகள்ல தொடர்ந்து எழுதுறாங்க... இப்போ பாருங்க, எம்ஜிஆர் என்மேல கோபத்துல இருக்கிறதா எழுதுறாங்க. முதலமைச்சரா அவர் நாட்டு மக்களைப் பார்ப்பாரா... இல்ல இந்த ரஜினியப் பார்ப்பாரா..? எழுதுறவங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? பேசாம பெங்களூருக்கே போயிடலாம்னு இருக்கேன்” என்று குமுறிவிட்டார் ரஜினி.

அதைக்கேட்ட தேவர், லேசாக புன்முறுவல் செய்துவிட்டுச் சொன்னார்.“வெவரம் புரியாத பச்சப் புள்ளையா  இருக்கியேப்பா… இங்கப் பாரு ரஜினி இப்போ நீ பெரிய ஹீரோ. இந்த இடத்துக்கு வர இந்த சினிமா உலகத்துல எவ்வளவு போட்டி இருக்கும்? போட்டியிருந்தா பொறாமையும் இருக்குமில்லையா? அப்போ...  உன்னைப் பத்தி எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி கருத்து இருக்கும்னு நீ எதிர்பார்க்கக் கூடாது. நாலு பேரு நாலுவிதமா பேசத்தான் செய்வான். முருகன் இன்னும்கூட உனக்குச் சோதனைகளக் கொடுப்பான். அது எல்லாமே உன்னை உயர்த்தத்தான். உனக்கு எப்போ மனசுல சங்கடம் அழுத்துதோ அப்போல்லாம் ‘முருகா... முருகா...’ன்னு மனசுகுள்ள சொல்லிக்கோ. மத்ததை அவன் பார்த்துக்குவான். இப்போ உன்னப் பத்தி தப்பா பேசிட்டிருக்கிற யாரும் உன் கூட வரப்போறதில்லை. அதை மனசுல வெச்சுக்க முதல்ல.”

இப்படி சொல்லிவிட்டு ஒருபிடி திருநீற்றை அள்ளி ரஜினியின் நெற்றி நிறையப் பூசிவிட்டார் தேவர். திருநீற்றின் வாசனை தெய்
வீகமாக நாசியை நிறைக்க, தேவரின் அந்த அறிவுரையை அப்படியே மனதில் ஏந்திக்கொண்டார் ரஜினி.  இன்று வரை, ரஜினியின் பூஜை அறையில் இடம்பெற்றிருக்கும் வெகுசில ஆளுமைகளின் புகைப்படங்களில் சின்னப்பத்தேவரின் படமும் ஒன்று.

11 படங்கள்

தேவருக்குப் பின் அவரது மருமகன் ஆர்.தியாகராஜனுடன் தண்டாயுதபாணி பிலிம்ஸுக்காக,  தமிழ், தெலுங்கு, இந்தி என 11 படங்களில் நடித்துக்கொடுத்த ஒரே கதாநாயகன் ரஜினி மட்டும்தான்.   ‘ஒரு படத்துக்கு கதை எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு நடிகர்கள் முக்கியம். அவர்கள் மனம் கோணக் கூடாது. நம்முடைய பணம் ‘அதிக பற்று’ ஆக அவர்களிடம் இருக்கலாமே தவிர,  நடிகர்களுக்கும், படத்தில் வியர்வை சிந்தி உழைக்கிற தொழிலாளிகளுக்கும் ஒரு பைசாகூட சம்பள பாக்கி இருக்கக் கூடாது’ என்கிற பாடத்தை தன்னுடைய மாமனார் தேவரிடமிருந்து படித்தவர் இயக்குநர் ஆர்.தியாகராஜன். தேவரின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றிய அவரை, ரஜினிக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.

ஒருமுறை, ஓய்வில்லாத காரணத்தால் அடுத்த ஷாட்டுக்கு அழைக்கும் இடைவெளி யில் ரஜினி அயர்ந்து தூங்கிவிட, அவரை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டு விட்டார் தியாகராஜன். கண்விழித்து எழுந்து பார்த்த ரஜினி, தேவரைப் போலவே தியாகராஜனும் தன் மீது அக்கறை காட்டுவதைப் பார்த்து நெகிழ்ந்துபோனார். அன்று முதல் தியாகராஜனை ‘மாப்பிள்ளை’ என்று உறவு சொல்லி அழைக்கத் தொடங்கினார் ரஜினி.

‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் சிங்கத்துடன் ரஜினி பங்கேற்ற சண்டைக்காட்சி, இன்றைக்கும் ரசிகர்களால் நினைவுகூரப்படும் வியப்பான காட்சி. அந்தக் காட்சியில் பங்கேற்ற சிங்கத்தின் மனநிலை அறிந்து, அது உற்சாகமான விளையாட்டு மனநிலைக்கு வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து தியாகராஜன் படமெடுத்ததைப் பார்த்தார் ரஜினி. விலங்குகளை வைத்து எடுக்கும் எல்லா காட்சிகளுக்குமே இந்த பொறுமையை தியாகராஜன் கடைபிடித்தார். இதனால், வழக்கமாக அந்தக் காலகட்டத்தில் ஒரு படத்துக்கு 18  நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து வந்த ரஜினி,  தேவர் பிலிம்ஸ் என்றால் 25 நாட்கள் கொடுத்தார்.

“மற்ற நிறுவனங்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நேரம் அமையும்போதெல்லாம்  தேவர் பிலிம்ஸுக்கு வந்துவிடுவார் ரஜினி. அப்படி வரும்போது களைப்பாக இருந்தால், எங்கேயாவது ஓர் ஓரத்தில் கையை தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்வார். சாலையோரத்தில் இருக்கும் சின்ன ஒண்டுக் கடையில் இடியாப்பமும் பாயாவும் வாங்கி வரச்சொல்லி அதையே சாப்பிடுவார். அந்த ரஜினியை இன்றுவரை காண்கிறேன்” என்று கூறியிருக்கிறார் மறைந்த தியாகராஜன்.

போக்குவரத்து நெரிசல்

‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் குட்டி யானையை சர்க்கஸிலிருந்து மீட்டுவந்து, தாய் யானையுடன் சேர்க்கும் ரஜினியின் போராட்டத்தில், அந்தக் குட்டியானை ஒரு திரையரங்குக்குள் புகுந்து ரகளை செய்யும். அந்தக் காட்சியை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்க வளாகத்தில் படம்பிடித்தார் தியாகராஜன். அந்த சமயத்தில் ரஜினியைப் பார்க்க ஆயிரக் கணக்கான இளைஞர்களும் பெண்களும் அந்தத் திரையரங்கின் முன்பு, அண்ணாசாலையை அடைத்தபடி கூடிவிட, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.

போலீஸார் வந்து ரசிகர்கள் கூட்டத்தை வெளியேற்றுவதற்கு 2 மணிநேரம் பிடித்தது. இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகி எம்ஜிஆரின் கவனத்துக்கு வந்தது. திரையரங்கக் காட்சிகள் எடுத்து முடித்தபின் சத்யா ஸ்டுடியோவில் ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. அந்த சமயத்தில் ரஜினிக்கு மன அழுத்தம் இன்னும் அதிகமாகியது. ஓய்வின்மைதான் இந்த சிக்கலுக்குக்  காரணம் என்று நினைத்த தியாகராஜன், ரஜினிக்கு உடல்நலம் சரியாகட்டும் என்று படப்பிடிப்பை பல நாட்கள் ரத்து செய்தார். அவர் விட்டுக்கொடுத்த நாட்களில்கூட ரஜினியை சும்மாவிடவில்லை மற்ற சிலர். அவர் ஏற்கெனவே நடித்திருந்த படங்களுக்கு டப்பிங் பேசி முடிக்கும்படி பிய்த்துப் பிடுங்கினார்கள். ரஜினியால் எதுவும் செய்யமுடியவில்லை.

எம்ஜிஆர் வந்தார்

இதை அறிந்த தியாகராஜன், ரஜினிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாதே என்று பயந்து, அப்போது எம்ஜிஆரின் செயலாளராக இருந்த பத்மநாபனிடம் இதுபற்றி கவலையுடன் சொன்னார். பத்மநாபன் அந்தச் செய்தியை எம்ஜிஆரிடம் எடுத்துச் செல்ல, “நானே ரஜினியைச் சந்திப்பதாக இருந்தேன்.. நாளைக்கே ஸ்டுடியோவுக்குப் போய் ரஜினியைப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர். இதைக் கேட்டதும் பத்மநாபன் ஆடித்தான் போனார்..  ‘முதல்வராக இருக்கும் தலைவர் வளர்ந்து வரும் ஒரு நடிகரைப் பார்க்க வருகிறேன் என்கிறாரே… அப்படியானால் ரஜினியின் வீச்சு அவ்வளவு பெரிதா’ என்று பத்மநாபனே வியந்தார்.

மீண்டும் ‘அன்னை ஓர் ஆலயம்’ படப்பிடிப்பு தொடங்கியபோது, சொன்னபடியே சத்யா ஸ்டுடியோவுக்கு வந்தார் எம்ஜிஆர். அவரை ஓடோடிப்போய் வரவேற்றார் ரஜினி. அப்போது எம்ஜிஆர், “உங்களை நலம்  விசாரிக்கத்தான் வந்தேன் தம்பி. எது நம்மைவிட்டுப் போனாலும் மீட்டுவிடலாம். ஆனால், உடல்நலன் போய்விட்டால் திரும்பக் கொண்டுவர முடியாது. சுவர் இருந்தால்தானே சித்திரம்...” என்று அன்போடு ரஜினிக்கு அறிவுரை சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். எம்ஜிஆர் தன் மீது இவ்வளவு அக்கறையும் அன்பும் காட்டியதைக் கண்ட ரஜினிக்கு புதுத் தெம்பு பிறந்தது.

காலம் உருண்டோடியது. தேவரைப் போலவே விலங்குகளை வைத்து படமெடுப்பதில் கெட்டிக்காரராக தியாகராஜன் விளங்கினாலும், விலங்குகள் இல்லாமல் சமூகப் படமெடுத்து பெயர்பெற வேண்டும் என்கிற கனவும் அவரிடம் இருந்தது. தியாகராஜன் எடுத்த பல படங்கள் வரிசையாகத் தோல்வியைத் தழுவ, ஒரு கட்டத்தில் விஜயகாந்தை வைத்து கடைசி முயற்சியாக ‘அன்னை பூமி’ என்கிற  3டி படத்தை எடுத்தார். அதுவும் பெரும் நஷ்டத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. தேவரின் மகனும் மருமகனும் அவரது குடும்பத்தினரும் நம்பியிருந்த தண்டாயுதபாணி ஃபிலிம்ஸை சோதனையான காலகட்டம் சூழ்ந்து கொண்டது. இதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மூலம் அறிந்துகொண்ட ரஜினி, தனது ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தண்டாயுதபாணி ஃபிலிம்ஸுக்குக் கொடுத்து, தேவரின் வாரிசுகளைக் கடனிலிருந்து மீண்டுவரச் செய்தார்.

(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE