ஓவர் நைட்டில் ஒபாமா... ஓலாஜுமோக் உச்சம் தொட்ட கதை!

By காமதேனு

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

‘ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது’ என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஓலாஜுமோக் ஒரிசகுனாவுக்கு நன்றாகவே பொருந்தும். ரொட்டிகளைத் தலையில் சுமந்துகொண்டு, வீதிகளில் விற்றுக்கொண்டிருந்தவர், ஒரே இரவில் மாடலாக மாறிய கதை ரொம்பவே சுவாரசியமானது!

நைஜீரியப் பெண்ணான ஓலாஜுமோக் அதிகம் படிக்கவில்லை. சிகை அலங்காரம் செய்பவராக இருந்தார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள். வருமானம் அதிகம் இல்லை என்பதால், ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு லாகோஸ் நகருக்குச் சென்றார் ஓலாஜுமோக். அங்கே தெரிந்தவர் ஒருவரின் ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கணவர் சண்டே ஒரிசகுனா சொற்ப வருமானம் ஈட்டி, இன்னொரு குழந்தையைக் காப்பாற்றிவந்தார்.

ஒருநாள் இரவு ரொட்டி பாக்கெட்டுகளைத் தலையில் சுமந்துகொண்டு, வீதியில் நடந்துகொண்டிருந்தார் ஓலாஜுமோக். அப்போது அந்த ஏரியாவில் நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல ஒளிப்படக் கலைஞர் டை பெல்லோ, பிரிட்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் டைனி டெம்பாவை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்திக்கொண்டிருந்தார். அதை அறியாத ஓலாஜுமோக், தவறுதலாக ஃப்ரேமுக்குள் வந்துவிட்டார். யாரும் அதைக் கவனிக்கவில்லை.

இரவில் அந்தப் படங்களைக் கணினித் திரையில் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஓலாஜுமோக்கைக் கண்டு பெல்லோ ஆச்சரியப்பட்டார். ஓலாஜுமோக்கின் முகம் ஒரு மாடலுக்கு உரிய அம்சங்களுடன் இருந்தது. உடனே, அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் பெல்லோ. அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. பல மாடலிங் நிறுவனங்கள் ஓலாஜுமோக் பற்றி விசாரித்தன.

இந்த விஷயங்களை எல்லாம் அறியாத அந்த ஏழைப் பெண், மறுநாள் வழக்கம்போல் ரொட்டிகளை விற்பனை செய்துகொண்டிருந்தார். பெல்லோ அவரைச் சந்தித்து, விஷயத்தைக் கூறினார். ஓலாஜுமோக்கால் அதை நம்ப முடியவில்லை. வறுமையின் பிடியிலிருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டதாக மகிழ்ந்தார். அவருக்கு மாடலிங் பயிற்சியளித்தார் பெல்லோ.
“என் கேமராவுக்கு முன்பாக ஓலாஜுமோக் வந்து நின்றபோது. எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. கேமராவுக்கு ஏற்ற முகம். நான் தெருவில் பார்த்த ஓலாஜுமோக்குக்கும் மாடலாக நிற்கும் ஓலாஜுமோக்குக்கும் எவ்வளவு வித்தியாசம்” என்று வியந்தார் பெல்லோ. பெல்லோவால் எடுக்கப்பட்ட ஓலாஜுமோக்கின் படம் ‘ஸ்டைல்’ என்ற பத்திரிகையின் அட்டையில் வெளிவந்தது. இதையடுத்து வாய்ப்புகள் குவிந்தன. புகழும் பணமும் ஓலாஜுமோக்கைத் தேடி வர, கணவரும் குழந்தையும் லாகோஸ் வந்து சேர்ந்தனர்.

“நான் அன்று பெல்லோவின் ஃப்ரேமுக்குள் தவறுதலாக வரவில்லை என்றால், இன்றும் ரொட்டிகளைத்தான் விற்றுக்கொண்டிருப்பேன். மாடலிங்குக்கு எவ்வளவோ தகுதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், இரண்டு குழந்தைகளின் அம்மாவான என்னை மாடலிங்குக்கு ஏற்றவள் என்று பெல்லோ முடிவு செய்ததை நினைத்தால் இன்றும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது” என்று சொல்லும் ஓலாஜுமோக், சர்ச்சைகளிலும் சிக்கி அவஸ்தைப்படுகிறார்.

தன்பாலின உறவாளர்கள் குறித்து அவர் பேசிய வார்த்தைகள் கடும் விமர்சனங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. கூடவே, ‘அவர் மாடலிங்கை விட்டுச் சென்றுவிட்டார், மணமுறிவு’ என்றெல்லாம் வதந்திகள் பரவத் தொடங்கிவிட்டன.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, “கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவோ நிறுவனங்களுக்கு மாடலாக இருந்திருக்கிறேன். நன்றாகச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்துக்கு வந்ததைவிட, இந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்குத்தான் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் ஓலாஜுமோக்.

சர்ச்சைகள் பல வரிசைகட்டினாலும் தனது அபாரமான தன்னம்பிக்கையால் அத்தனையையும் சமாளித்து, மாடலிங் துறையில் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஓலாஜுமோக்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE