ஈர வெப்பம் எனும் இயற்கை அபாயம்!- சென்னை வரை வாட்டியெடுக்கும் அனல்

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கோடைக்காலங்களில் அனல் காற்றுக்கு மக்கள் பலியான செய்தியைக் கேட்டு வருந்தியிருப்போம். தகிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிப்பதால், புவி வெப்பம் அடைந்து வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எல்லாவற்றையும் கடந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றத்தின் விளைவாக புதியதொரு இயற்கை அபாயம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதை நாம் நேரடியாகவும் உணரத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான் விஷயம்!

அபாயத்தில் சென்னை

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைவாழ் மக்கள் கடும் வெப்பத்தை உணர்ந்தனர்.  “என்ன இது... இப்படி ஒரு புழுக்கம்?” எனப் பலரும் புலம்பித்தள்ளினர். கடும் வெட்பமும் ஈரப்பதமும் ஒரே நேரத்தில் உச்சத்தை எட்டுவது, ஈர பல்பு தட்பவெப்பநிலை (Wet Bulb Temperature) அல்லது ஈர வெப்பம் (wet heat) என்றழைக்கப்படுகிறது. அதுதான் சென்னை மக்களை வாட்டியெடுத்தது!
ஈர பல்பு தட்பவெப்பநிலையானது (Wet Bulb Temperature) 32 டிகிரி செல்சியஸை எட்டும்போது, ஆரோக்கியமான மனிதர்கள்கூட கடும் உடல்சோர்வுக்கு ஆளாவார்களாம். 35 டிகிரி செல்சியஸை எட்டிவிட்டால் ஆரோக்கியமானவர்களும் 6 மணி நேரத்தில் சுருண்டுவிழக்கூடுமாம். நிழலில் ஒதுங்கினால்கூட தப்ப முடியாது. உடனடி சிகிச்சை அளிக்கத் தவறினால் மரணம்கூட சம்பவிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

இத்தனை அபாயகரமான ஈர பல்பு தட்பவெப்பநிலை  சென்னையிலும் மும்பையிலும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதிலும் ஜூலை 10-ம் தேதி சென்னையில் ஈர பல்பு தட்பவெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு உடனடியாக ஈடுபட வேண்டுமென சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஏழைத் தொழிலாளிகளே இலக்காவார்கள்

இது தொடர்பாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் சு.தினகரனுடன் பேசினோம். மனித உடலின் தன்மையை முதலில் புரிந்துகொண்டால்தான், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர முடியும் எனப் பேசத் தொடங்கினார் தினகரன்.

“உயிரினங்களில் குளிர் ரத்தப் பிராணிகளும் உள்ளன, வெப்ப ரத்தப் பிராணிகளும் உள்ளன. இவற்றில் வெப்ப ரத்தப் பிராணிகளால் புறச் சூழலுக்கு ஏற்ப தன் உடலின் தட்பவெப்பத்தை இயற்கையாக மாற்றிக்கொள்ள முடியாது. மனிதர்கள் அப்படிப்பட்ட வெப்ப ரத்த பிராணிகள்தாம். மரபணு மாற்றமாகட்டும், இயற்கை தேர்வாகட்டும் ஊர்வன, பறப்பனவற்றுக்குப் பரிணாம வளர்ச்சிப்படியே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், மனித இனம் கலாச்சார மாற்றத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் இறங்கி இயற்கைப் பரிணாம வளர்ச்சியை இடைமறித்துவிட்டது. ஆகையால் புறச்சூழலுக்கு ஏற்ப மனிதர்களால் இயற்கையாகத் தகவமைத்துக்கொள்ள முடியாது. ஆகவேதான் ரொம்பவும் குளிரெடுத்தால் கம்பளி ஸ்வெட்டர் அணிந்துகொள்கிறோம், வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளை உடுத்துகிறோம். எந்தப் பறவையாவது ஸ்வெட்டர் போட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

சரி, மனிதர்களுக்கு வருவோம். வெப்ப காலத்தில் ரத்தக் குழாய்கள் உடலின் நுனிவரை ரத்தத்தைப் பாய்ச்சும். கடும் குளிர் காலத்திலோ ரத்தக் குழாய்கள் கொஞ்சம் உள்வாங்கிக்கொள்ளும். இப்படிப்பட்ட மனித உடலின் தட்பவெப்பத்தைச் சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை வெளியேறுகிறது. 

ஆனால், சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது கடும் வெப்பமாக இருந்தாலும் நம்முடைய உடல் வியர்க்காது. வியர்வை வெளியேறாமல் போனால், உள்ளிருக்கும் அவயங்களிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு 6 மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும். இதனால்தான் சொல்கிறோம், புவி வெப்பமடைவதால் கடுமையாகப் பாதிக்கப்படவிருப்பது மனித இனமே! அதிலும் கட்டுமானத் தொழிலாளர்கள், 100 நாள் வேலைத் திட்ட விவசாயக் கூலிகளைப் போன்ற ஏழை மக்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். நாள் முழுவதும் தகிக்கும் சூரியனுக்குக் கீழே வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டவர்கள் அவர்கள்தானே” என்று அதிர்ச்சியூட்டும் அறிவியல் விளக்கத்தைக் கொடுத்தார்.

 மேலும் பேசிய அவர், “தொலைநோக்குப் பார்வையுடன் அரசுகள் செயல்பட்டாலன்றி இதற்குத் தீர்வில்லை. மின்சார வாகனம், நெருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகியவை அனைவரின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டால், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து ஓரளவு பேரழிவைத் தள்ளிப்போடலாம். ஆனால், சூழலியலுக்கு உகந்த இந்தக் கண்டுபிடிப்புகள் இன்றுவரை மத்தியதர வர்க்கத்தினரின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலைக்கு வரவில்லை. பயோடீசல் வந்துவிடும் வந்துவிடுமென 30 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நடப்பது என்னவோ, பெட்ரோல் விலைவாசி விண்ணைப் பிளந்துகொண்டிருப்பதுதான். சுற்றுச்சூழல் சீர்கேடு சாமானியர்களின் உயிரை ஒருபுறம் உறிஞ்சிக்கொண்டிருக்க, மறுபுறம் பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலைவாசியால் கதிகலங்கி நிற்கிறார்கள்” என்றார்.

பயமுறுத்தும் பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றத்தால், இன்னும் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கும் அபாயங்கள் அநேகம் என்றும் சொன்ன அவர், மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“கரோனா வைரஸ் மனித இனத்தைப் பீடித்துக் கொள்ளவே பருவநிலை மாற்றம்தான் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இனி வரும் காலங்களில் கரோனா வைரஸ் போன்று மேலும் பல விசித்திரமான நுண்ணுயிர்கள் நம்மை ஆட்டிப்படைக்கும் சாத்தியமும் இருக்கிறது. மறுபுறம் கரோனா பொதுமுடக்க காலத்தில் போக்குவரத்தும் தொழிற்சாலைகளும் முடக்கப்பட்டதால், கடந்தாண்டு அரிய பறவைகள் வலசை வந்ததாகவும் செய்திகள் பார்த்தோம். அதேசமயம், கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகக் கார்பன் வெளியேற்றம் குறைந்திருந்தாலும் சுற்றுச்சூழலில் பெரிய முன்னேற்றமெல்லாம் அறிவியல்பூர்வமாக பதிவாகவில்லை.

இன்றைய தேதியில் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகளே அருகிவிட்டதால், நீர்நிலைப் பறவை இனங்கள் பல அழிந்துவிட்டன. உதாரணத்துக்கு, மதுரை வைகை நதி வெறும் செத்த நதிதான். ஏனென்றால், மழை பொழிந்து நீரோட்டம் ஏற்படும் காலங்களிலும் நதிப் படுகையில் எந்த உயிரினமும் இன்று தழைப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இவற்றைக் குறித்து ஆராயவும் இந்தியாவில் நீர்வள உயிரியல் பொறியாளர்களுக்கான துறையும் இன்றுவரை ஏற்படுத்தப்படவில்லை. எல்லோரும் மாலிக்குலர் பயாலஜி, பயோ டெக்னாலஜி என்று ஓடுவதால் அடிப்படை விலங்கியல் ஆராய்ச்சியாளர்களுக்கே இன்று கடும் பஞ்சம் நிலவுகிறது. இந்த நிலை மாறினால்தான் நாம் எதிர்கொள்ளும் அபாயம் என்ன என்பதையே நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்” என்று முடித்தார் தினகரன்.

சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் மனித இனத்துக்கு, இதற்கு மேலும் படிப்பினை தேவையா என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE