முகத்திரையை விலக்கும் முதல்வரின் மருமகன்!- சபரீசன் பிறந்தநாளில் ‘சர்ப்ரைஸ்’ காட்சிகள்

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

இதுநாள் வரை அதிகம் முகம் காட்டாமல் இருந்த முதல்வரின் மருமகன் சபரீசனின் சமீபத்திய பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழக அரசியல் களத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

அரசியல் ஆர்வம்

ஸ்டாலினின் குடும்பத்தில் அரசியல் வாடையே பிடிக்காதவர், அவருடைய மகள் செந்தாமரை. ஆனால், அவரது கணவர் சபரீசன் அதற்கு நேர்மாறானவர். ஆரம்பத்திலேயே அவருடைய அரசியல் ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலையே உதாரணமாகக் கூறலாம். அந்தத் தேர்தலில், கடைசி கட்டத்தில் கூட்டணியிலிருந்து மதிமுக கழன்றுகொள்ள அப்செட்டானது திமுக முகாம். அந்தத் தேர்தலில் அதிமுகவைவிட திமுகவினரால் வைகோ அதிகம் விமர்சிக்கப்பட்டார்.

தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், திமுக கூட்டணி வெற்றி முகம் காட்ட, சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டருகே தனது நண்பர்களுடன் சென்று பட்டாசு கொளுத்தி, திமுகவின் வெற்றியைக் கொண்டாடினார் சபரீசன். அப்போது அவருக்கு எதிராகச் செய்தியாளர் சந்திப்பிலேயே சீறினார் வைகோ. அதற்கு ஆதாரமாகப் பட்டாசு வெடித்தபோது சபரீசன் விட்டுச் சென்ற அடையாள அட்டையைக் காட்டினார். அப்போதுதான் முதன்முறையாக அரசியல் ரீதியாக சபரீசனின் பெயர் அடிபடத் தொடங்கியது.

மாமனாருக்கு ஜே!

கருணாநிதி முதல்வராக இருந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்டாலினைப் புரொமோட் செய்யும் பணிகளைக் கச்சிதமாகச் செய்யத் தொடங்கினார் சபரீசன். கருணாநிதியின் வாரிசுகளான மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரும் தீவிர அரசியலில் களமாடிக்கொண்டிருந்த வேளையில் மாமனாருக்காக அந்தப் பணிகளை அவர் செம்மையாகச் செய்தார். சமூக ஊடகங்கள் கோலோச்சாத காலத்திலேயே அதற்கான பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார் சபரீசன். குறிப்பாக, 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலினுக்கென பிரத்யேகமாக ஓர் இணையதளத்தை வடிமைத்து, அதில் ஸ்டாலின் குறித்த செய்திகள், வீடியோக்களைப் பகிரத் தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்தார் சபரீசன். இதெல்லாம் மாமனாருக்குப் பிடித்துப்போகவே, அவருடைய அரசியல் குட் புக்கில் மருமகனுக்குச் சட்டென இடம் கிடைத்தது.

அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாத குடும்பத்திலிருந்து சபரீசன் வந்திருந்தாலும், ஸ்டாலினின் மருமகனாக ஆனபிறகு அரசியல் காய்நகர்த்தல்களில் தேர்ந்தவரானார். 2014-க்குப் பிறகு கருணாநிதியின் உடல்நலம், அரசியல் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியபோது, திமுகவில் ஸ்டாலினுக்குப் பக்கபலமாக சபரீசன் இருந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவை எப்படியும் ஆட்சிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் திமுக தலைவர்களைவிட முனைப்புக் காட்டியவர் அவர்தான் என்கிறார்கள் சில உடன்பிறப்புகள்.

“2014-ல் மோடியை பிரசாந்த் கிஷோர் புரொமோட் செய்து தேர்தல் பணிகளைச் செய்ததைப் போல, திமுகவுக்கும் செய்யலாம் என்ற யோசனையை முன்வைத்தது சபரீசன்தான். அந்த அடிப்படையில்தான் பிரசாந்த் கிஷோரிடமிருந்து பிரிந்துவந்த ஓஎம்ஜி சுனிலை வைத்து திமுகவுக்கான வியூக வேலைகளை அவர் ஒருங்கிணைத்தார். 2015-ல், ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்த ‘நமக்கு நாமே’ ஐடியா எல்லாம் அவருடையதுதான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர். 2016 தேர்தலில் திமுக தோல்வியடைந்தாலும், அதிமுகவுக்கு இணையாகத் திமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது ஸ்டாலினை மகிழ்விக்கவே செய்தது. இதில் தன்னுடைய மருமகனின் கணிசமான பங்கும் இருப்பதாக ஸ்டாலின் நம்பினார்.

முரசொலி மாறனின் இடத்தில்...

கருணாநிதியின் மனசாட்சியாக அவருடைய மருமகன் முரசொலி மாறன் இருந்ததைப் போலவே, ஸ்டாலினுக்கு அவருடைய மருமகன் சபரீசன் இருக்கிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மூத்த நிர்வாகிகளே புகழும் அளவுக்குக் கட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளத் தொடங்கினார் சபரீசன். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை சினிமாவில் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நிலையில், ஸ்டாலினுக்கு அரசியலில் பக்கபலமாக இருந்தார் சபரீசன். தமிழக அரசியல் தலைவர்கள் தொடங்கி டெல்லி தலைவர்கள் வரை அனைவருடனும் தொடர்புகொள்ளும் அளவுக்கு, கூட்டணி குறித்துப் பேசும் அளவுக்கு சபரீசன் வளர்ந்ததையே இதற்குச் சான்றாக திமுக நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்கள்.

“நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தையும் கூட்டணியில் இணைப்பதற்கான பணியில் சபரீசன் களமிறங்கினார். ஆனால், அது முடியாமல் போனது. அதேவேளையில் 2016 தேர்தலில் நூலிழையில் தோல்வி ஏற்பட்டதைப்போல ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் சபரீசன் உறுதியாகவே இருந்தார். 2021 தேர்தலுக்குப் பிரசாந்த் கிஷோரை அழைத்துவந்தது முதல், அவரது ஐ-பேக் நிறுவனம் போட்டுக்கொடுத்த திட்டத்திலேயே ஸ்டாலினைப் பயணிக்க வைத்தது வரை எல்லாப் பணிகளையும் ஒருங்கிணைத்தது சபரீசன்தான். ஐ-பேக் குழுவினரால் திமுக மூத்த நிர்வாகிகளே முகம் சுளிக்க நேர்ந்தபோதெல்லாம், அவர்களைச் சமாதானப்படுத்தி, அக்குழுவினருடன் திமுகவினரைப் பயணிக்க வைத்தார் சபரீசன். ‘ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தரப் போறாரு' எனும் பிரச்சாரப் பாடலைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘ரீச்' செய்ததுவரை, இந்தத் தேர்தலில் சபரீசனுக்குப் பெரும் பங்கு இருக்கிறது” என்கிறார் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்.

மாறும் முகம்

திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே, அடிமட்டத் தொண்டர்கள் முதல் தலைவர் வரை கட்சியில் எல்லோர் மனதிலும் இன்று சபரீசன் இடம் பிடித்துவிட்டார். ஸ்டாலின் குடும்பத்தில் உதயநிதிக்கு எந்த அளவுக்குக் கட்சி நிர்வாகிகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவுக்கு சபரீசனுக்கும் மரியாதை தரும் அளவுக்கு இன்று திமுகவில் காட்சிகள் மாறியுள்ளன. அதற்கேற்ப சபரீசனின் செயல்பாடுகளிலும் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.

முன்பெல்லாம் என்னதான் திமுகவில் சபரீசன் பற்றி செய்திகள் கசிந்தாலும், கட்சி சார்ந்த எந்த நிகழ்விலும் அவரைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கட்சியின் பொது நிகழ்வுகளில் அவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். தனது புகைப்படங்களை எங்குமே காண முடியாத அளவுக்குத் தவிர்த்துவிடுவார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, யதேச்சையாக திமுக நிகழ்வுகளில் பங்கேற்றாலும் புகைப்படங்கள் எடுக்கும்போது நாசூக்காக ஒதுங்கிவிடுவார். யார் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினாலும், புகைப்படத்தை எடுத்த பிறகு அதைச் சமூக ஊடகங்களில் பகிரக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டுவிடுவார்.

சபரீசனின் பிறந்த நாளான ஜூலை 17-ல் அதெல்லாம் மாறிப்போனது. அன்றைய தினம் சமூக ஊடகங்களைப் பார்த்த உடன்பிறப்புகள் ஆச்சரியமடைந்தனர். திமுக அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் சபரீசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பதிவுகளை, புகைப்படங்களைப் பகிர்ந்திருந் தனர். இது கட்சியினர் மத்தியில் பேசு பொருளானது.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பின்னணியிலிருந்து அரசியல் செய்துவந்த சபரீசன், தற்போது பொதுவெளியில் தன்னை முன்னிலைப்படுத்த தொடங்கிவிட்டதை உணர முடிகிறது. முதல்வராக ஸ்டாலின் கோட்டையில் பொறுப்பேற்றபோது, நாற்காலியில் அவர் அமர்ந்திருக்க, அவருக்குப் பின்னால் நின்றபடி சபரீசன் சிரித்தபடி கொடுத்த போஸ் சமூக வலைதளங்களில் வலம் வந்ததோடு, திமுகவினரின் புருவங்களையும் உயரச் செய்தது. மொத்தத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சபரீசனிடம் நிறையவே மாற்றம் தெரிகிறது.

இதுகுறித்து தேர்தலில் சபரீசன் டீமில் பணியாற்றிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “இந்த முறை சபரீசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஏராளமானோர் ஆர்வம் காட்டினார்கள். திமுகவினர் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், தொழிலபதிபர்கள், ஏன்... மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். சபரீசனோடு எடுத்த புகைப்படங்களை அனைவருமே எந்தத் தயக்கமும் இன்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்கள். அதற்கு சபரீசன் கிரீன் சிக்னல் கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான் பலரும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள்” என்கிறார் அந்த நிர்வாகி.

வெளிப்படையான களப்பணிக்குத் தயார்

ஆக, இது நாள்வரை திமுகவின் வெற்றிக்காகவும் ஸ்டாலினை புரொமோட் செய்யவும் பின்னணியிலிருந்து உழைத்துவந்த சபரீசன், இனி வெளிப்படையாகக் களப்பணியாற்றுவார் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி யிருக்கின்றன. ஏற்கெனவே, அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்குத் திமுக அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் கிடைக்க சபரீசனின் காய் நகர்த்தல்களே காரணம் என்றும் பேசப்படுகிறது. மேலும், காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிகளில் ஒன்று சபரீசனுக்காக ஒதுக்கப்படும் என்ற தகவலும் நீண்ட நாட்களாக அறிவாலயத்தை வட்டமடிக்கிறது.

இதற்கெல்லாம் ஏற்ப, இதுவரை பின்னணியிலேயே இயங்கிய சபரீசன் தற்போது முகம் காட்டத் தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வர் குடும்பத்தில் ஓர் அரசியல் அதிகார மையமாக உருவெடுத்திருப்பதை, சபரீசனே வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதும் காலத்தின் கட்டாயம் தான் போலிருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE