திமுக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்களில் சிலர், பழைய பாசத்தில் அதிமுகவினருக்கும் காரியம் சாதித்துக் கொடுக்கிறார்களாம். இதனால் பல இடங்களில் பரம்பரை திமுகவினர் பல்லைக் கடிக்கிறார்கள். காரைக்குடியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக டெப்போவில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேந்த பாலகிருஷ்ணன் என்பவர் டிராஃபிக் டூட்டியில் இருந்தாராம். ஆட்சி மாறியதும், அந்த இடத்துக்கு திமுகவின் தொமுசவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை நியமிக்க சிபாரிசு செய்தாராம் தொமுச செயலாளர். அதை ஓவர் லுக் செய்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் தம்பியைப் பிடித்து அமைச்சரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வந்து தன்னையே அந்த இடத்தில் நியமிக்கச் சொல்கிறாராம் பாலகிருஷ்ணன். ஆனால், “அமைச்சரே சொன்னாலும் அதிமுககாரரை அந்த இடத்தில் போடவிடமாட்டேன்” என மல்லுக்கு நிற்கிறாராம் தொமுச செயலாளர்.