ஆட்சி மாறினாலும் கோவை மண்டலத்தில் இருக்கும் சில அதிகாரிகள் இன்னும் அதிமுக அனுதாபிகளாகவே இருக்கிறார்களாம். அதனால் அங்கே ஆளும் கட்சியினரைவிட அதிமுகவினருக்கே சகல மரியாதையும் கிடைக்கிறதாம். கோவை மக்களின் தாகம் தீர்க்க 740 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்ட பில்லூர் 3 -ம் குடிநீர் திட்ட பணிகளின் தொடக்க விழா அண்மையில் நடந்தது. இந்த விழா குறித்து ஆளும்கட்சியினருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ-க்களை மட்டுமே வைத்து விழாவை நடத்தி முடித்துவிட்டார்களாம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள். இந்த விவகாரம் ஆளும் தரப்பை சூடேற்றியதைத் தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிமுக ஆதரவு நிலையில் இருக்கும் இன்னும் சில அதிகாரிகளின் சிரசுகளும் சீக்கிரமே உருளும் என்கிறார்கள்.