சென்னை முட்டுக்காடு நில விற்பனை பரிவர்த்தனை தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் எம்பி மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்குகிறதாம். சிறப்பு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு பாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் கார்த்தியின் மனைவி டாக்டர் ஸ்ரீநிதி. காங்கிரஸ் கட்சியினரால் ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நடத்தப்படுகின்றன. அதன்படி ஜூலை 29-ம் ஆலங்குடி தொகுதியிலும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுமைக்கும் ஸ்ரீநிதியின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால், சிவகங்கை நகரில் நிரந்தரமாக தங்கிவிட்ட சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்மாவும் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்திருக்கிறார். அடுத்ததாக காங்கிரஸின் முன்னாள் சட்டப்பேரவைக் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமியும், தன் பங்குக்கு மாவட்டம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக ஒரு செய்தி பறக்கிறது. வருமானவரித் துறை வழக்கில் பாதக தீர்ப்பு வந்தால், கார்த்தியின் எம்பி பதவிக்கும் ஆபத்து வரலாம் என்பதால், முன்கூட்டியே அவர் தனது மனைவியை தொகுதி பிரதிநிதியாக தயார்படுத்துவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படியானால் மற்ற இருவரும்?