என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
ஆயுர்வேத மருத்துவத்தில், கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை நிகழ்த்தியிருக்கும் சாதனைகளும் ஆச்சரியங்களும் ஏராளம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருவோரே அதற்குச் சாட்சி. இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியதில் இதன் அறங்காவலராக இருந்த பி.கே.வாரியருக்குப் பெரும்பங்கு உண்டு. இயற்கையும் ஆயுர்வேதமுமே தன் வாழ்வின் வேதங்கள் என பயணித்த வாரியர், ஜூலை 10-ல் தனது நூறாவது அகவையில் உயிர் பிரிந்திருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்வதன் மூலம், மருத்துவத் துறையில் அவரது அயராத உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மட்டுமல்லாமல், இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.
கைக்கு வந்த பொறுப்பு
நடமாடும் ஆயுர்வேதப் பெட்டகமாக வலம்வந்த வாரியர், ஆயுர்வேத மருத்துவத் துறைக்குச் செய்த பங்களிப்புகள் அளப்பரியவை. கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை என்னும் சாம்ராஜ்யத்தை 67 ஆண்டுகளாக அவர்தான் நிர்வகித்துவந்தார். மிகவும் இக்கட்டான தருணம் ஒன்றில் அந்தப் பொறுப்பு தன் கைக்குவர, தனது தேர்ந்த செயல்பாடுகளாலும், இடைவிடாத ஆயுர்வேதத் தேடல்களாலும் கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையைக் கரைசேர்த்தார். கோட்டக்கல் ஆயுர்வேத வைத்தியசாலை அதன் பல்வேறு கிளைகளின் மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் பேருக்குச் சிகிச்சையளிக்கிறது. இன்றும் அதே பரபரப்புடன் இயங்கிவருகிறது.
கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையை நிறுவிய பி.எஸ்.வாரியர், 1944-ல் காலமானார். அவருக்குப் பின் அவரது மருமகன் பி.எம்.வாரியர் தலைமை மருத்துவராகவும், முதல் அறங்காவலராகவும் பொறுப்பேற்றார். 1953-ல் விமான விபத்தில் அவரும் இறந்துவிட, அவரது சகோதரரான பி.கே.வாரியர் மிக இளம் வயதிலேயே வைத்தியசாலையின் அறங்காவலர் ஆனார். பன்னியம்பள்ளி கிருஷ்ண வாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே, கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை உலக அளவில் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய மருத்துவத்தை உலக அரங்கில் கொண்டு சேர்த்ததற்காக பத்ம (1999), பத்ம பூஷண் (2010) விருதுகளையும் பெற்றிருக்கும் பி.கே.வாரியர். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆயுர்வேத மருத்துவ முறையைப் பற்றி பேசியிருக்கிறார். ‘பாடமுத்ரகள்’ என்ற தலைப்பில் அவரது பேச்சுக்கள் புத்தகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
தனித்துவம் மிக்கவர்
பிரபல ஆயுர்வேத மருத்துவர் குட்டாஞ்சேரி வாசுதேவன் ஆசானிடம் சீடராக இருந்தவர் பி.கே.வாரியர். மருத்துவத்தில் வாரியர் பின்பற்றிய வழிமுறைகள் அவரது பெருமையைப் பறைசாற்றுகின்றன. தான் சொல்லும் மருத்துவ ஆலோசனைகளுக்கு அவர் கட்டணம் பெற்றதில்லை; நோயாளி எழையாக இருந்தாலும் சரி பணக்காரராக இருந்தாலும் சரி... அவருக்கு எல்லோரும் ஒன்றுதான். பொறியியல் படிக்க விரும்பிய அவரைக் குடும்பத்தினர்தான் ஆயுர்வேதம் நோக்கி நகர்த்தினர். சுதந்திரப் போராட்டத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வாரியர் செய்திருந்தார். 1942-ல் இடதுசாரி இயக்கத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியவர், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும் பங்கெடுத்தார்.
வி.வி.கிரி தந்த புகழ்
1970-ல் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி கோட்டக்கல்லுக்கு வந்து பி.கே.வாரியரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் மூலம், கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை தேசிய அளவில் கவனம் குவித்தது. அதன் பின்னர் வாரியர் ஆயுர்வேத மருந்து தயாரிப்புகளை நவீனமயமாக்கினார். மருந்து மற்றும் சிகிச்சை முறைகளில் ஆயுர்வேத பாரம்பரியத்தோடு நவீன விஞ்ஞானத்தையும் புகுத்தினார். ஏராளமான மூலிகைகளை வளர்த்து, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆயுர்வேத மருத்துவத்தை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும் பதிப்பகத்தைத் தொடங்கினார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டு ஆயுர்வேத மருத்துவம் குறித்து உரைநிகழ்த்தினார். 2018-ல், எதிர்கால மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும்வகையில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கினார். பல பல்கலைக்கழகங்களும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
தனது நூறாவது அகவையில் வயது மூப்பின் காரணமாக மறைந்திருக்கும் பி.கே.வாரியர், சமீபத்தில் கரோனா தொற்றில் இருந்தும் மீண்டவர். அந்தப் பேரிடரையும் தன் ஆயுர்வேத நுட்பங்களினால் அவர் எளிதாகக் கடந்திருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, “ஆயுர்வேதத்தைப் பிரபலப்படுத்த டாக்டர் பி.கே.வாரியர் செய்த பங்களிப்புகள் எப்போதும் நினைவில் நிற்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என ட்விட் செய்தார். ஆயுர்வேதத்தின் பெருமைகளை வாரியர் உலகுக்கு உணத்தியதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். வாரியரின் மறைவைத் தொடர்ந்து, 119 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் புதிய அறங்காவலராக பி.மாதவன்குட்டி வாரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முக்கியஸ்தர்களோடு நெருக்கம்
ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த நூல்கள் என்றில்லாமல் இயல்பாகவே பி.கே.வாரியருக்கு இலக்கிய ரசனையும் அதிகம். தனது வாழ்வை மையப்படுத்தி ‘ஸ்மிருதிபர்வம்’ எனும் பெயரில் அவர் எழுதிய சுயசரிதை நூல், மிகவும் பிரசித்திபெற்றது. 2009-ம் ஆண்டுக்கான கேரள அரசின், மாநில சாகித்ய அகாடமி விருதையும் இந்தப் புத்தகம் பெற்றது. அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸின் தலைவராகவும் இருமுறை பொறுப்பு வகித்திருக்கும் வாரியர், அதன் மூலம் ஆயுர்வேத மருத்துவத்தின் புகழை உலக அரங்கில் கொண்டுசென்றார்.
அதேபோல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தேசிய, மாநில அளவிலான அரசியல் ஆளுமைகளின் அன்புக்குப் பாத்திரமாக இருந்தார் வாரியர். அவர்கள் எல்லாம் கோட்டக்கல்லுக்குச் சென்று அவ்வப்போதுபோய் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு. ஆனாலும், வாரியர், அவர்களோடு தனக்கு இருக்கும் நட்பை வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்திய பி.கே.வாரியரின் மறைவு பாரம்பரிய மருத்துவ உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு!