வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in
காதலர்களுக்கு இடையே ஏற்படும் மோதல், ஊடல், இருவரும் தத்தமது தவறை உணர்வது, பரஸ்பரம் தங்களின் தவறுக்கு மன்னிப்பு கேட்பது.. இப்படி சங்கிலித் தொடர் சம்பவங்கள் காதலர்களிடையே ஏற்படுவது இயல்புதான். ஆனால், இவை எல்லாவற்றையும்விட அதிக பாதிப்பைத் தருவது ‘ஈகோ’.
காதலர்களுக்கு இடையே ஏற்படும் ‘ஈகோ’ காதலையே குழி தோண்டிப் புதைத்துவிடும். அப்படிப்பட்ட தன்னுடைய ஈகோவினால் காதலை இழந்துதவிக்கும் ஒருவனின் வலி மிகுந்த பாடல்தான் ‘தப்பு பண்ணிட்டேன்’. அபினேஷ் இளங்கோவன் மற்றும் அபி அண்ட் அபி தயாரிப்பில், இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1’ நிறுவனம் வழங்கியிருக்கும் இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறது.
பாடலின் வலியை அற்புதமாகத் தன்னுடைய குரலில் பிரதிபலிக்கும் வண்ணம் உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறார் நடிகர் சிம்பு. ‘நீ விண்ணைத் தாண்டியும் வரவேண்டாம். உன் வீட்டைத் தாண்டியும் வரவேண்டாம்’ என காதலியிடம் மன்னிப்பைக் கோரும் காதலனின் நிலையை, தவிப்பை காணொலியில் தோன்றும் காளிதாஸ் ஜெயராம் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகை மேகா ஆகாஷின் தோற்றமும் பாவனைகளும் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடலை உயிரோட்டத்துடன் சித்தரிக்கிறது. விக்னேஷ் ராமகிருஷ்ணனின் வரிகளுக்கு ஏகே.ப்ரியனின் இசை, இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் ராப் பாணியில் அமைந்திருக்கிறது. எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பேசியதில் தப்பு பண்ணாத பாடல் இது!
ஈகோவை விரட்டும் காதல் பாடலை ரசிக்க: https://www.youtube.com/watch?v=yYz6Ov4LVT8
* * *
நான்கு ஸ்வரத்தில் ஒரு ஃப்யூஷன்!
இசை மேதையான பாலமுரளி கிருஷ்ணாவின் பிறந்தநாள் ஜூலை 6 அன்று, உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் கிழக்கத்திய இசையும் மேற்கத்திய இசையும் கைகோக்கும் ஃப்யூஷனில் அவர் பாடிய கீர்த்தனைகளின் தொகுப்பான ‘அமால்கம்’ மீண்டும் இசை ரசிகர்களால் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டது. பாலமுரளி கிருஷ்ணா பல திறமைகளைக் கொண்டவர். பாடகர், சாகித்யகர்த்தா, நடிகர், வயலின், வயலோ, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்... என அவருடைய திறமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியா முழுவதும் ப்ளூஸ், ப்ளூஸ் ராக், ஜாஸ் ஃபங்க் போன்ற மேற்கத்திய இசைப் பாணிகளை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசித்துவரும் ஜி.ஜெகன், ‘அமால்கம்’ இசைத் தொகுப்புக்கும் டிரம்ஸ் வாசித்திருக்கிறார். பாலமுரளி கிருஷ்ணா இந்தத் தொகுப்புக்காக பாடிய அனுபவத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஜெகன்.
“கீபோர்ட் மற்றும் புல்லாங்குழலை நிகில், எலெக்ட்ரிக் வயலின் மற்றும் ஸ்லைட் கிதாரை ஷியாம் ரவிஷங்கர், கிதாரை ராகவன் மணியன், பாஸ் கிதாரை மிதுல் டேனியல் வாசித்தனர். மிருதங்கம், சாக்ஸபோனை முறையே அக் ஷய் ராம், பசந்த் முரளிகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கிளாசிக்கல், மேற்கத்திய பாணியிலான ஜாஸ், ராக் பாணியில் நாங்கள் அமைத்திருந்த இசைக் கோவையோடு அவ்வளவு ஈடுபாட்டோடு பாடிக் கொடுத்தார் பாலமுரளி கிருஷ்ணா. மகநீய, க்ஷிசபுத்ராய, கிருஷ்ணயானு, ஓம்காரகாரணி, மோகன வம்சி, த்விஜாவந்தி ராகத்தில் அமைந்த ஒரு தில்லானா ஆகியவை இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும் புது விதமான அனுபவத்தை ஃப்யூஷன் இசையின் பின்னணியில் ஒலிக்கும் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் உணர முடியும்” என்றார் ஜெகன்.
பாலமுரளி கிருஷ்ணா கனகாங்கி, கேதாரம், ரேவதி உள்ளிட்ட பல ராகங்களை இந்த ஆல்பங்களின் பாடல்களுக்குப் பயன்படுத்தியிருந்தாலும், ஆல்பத்தின் முதல் பாடலான ‘மகநீய மதுர மூர்த்தே…’ எனும் பாடல் மிகவும் விசேஷமானது. காரணம், இந்தப் பாடல் அமைந்திருக்கும் ராகமான மஹதியை இசை உலகுக்குத் தந்தவர் சாட்சாத் பாலமுரளி கிருஷ்ணாதான்!
ஒரு ராகத்தில் ஏழு ஸ்வரஸ்தானங்களும் அமைந்துள்ள ராகங்களை சம்பூர்ண ராகங்கள் என்பர். ஐந்து ஸ்வரஸ்தானங்கள் இருக்கும் ராகங்களை (Pentatonic Ragas) ஜன்ய ராகங்கள் என்பர். மஹதி ராகத்தில் நான்கு ஸ்வரஸ்தானங்கள் (ஆரோகணம்: ஸ க ப நி ஸ... அவுரோகணம்: ஸ நி ப க ஸ) மட்டுமே இருக்கும். இதுதான் அந்த ராகத்தின் விசேஷம். இப்படியொரு ராகத்தை உருவாக்கி, இந்த ராகத்திற்கு நாரதரின் கையிலிருக்கும் வீணையின் பெயரான ‘மஹதி’யை வைத்தார் பாலமுரளி கிருஷ்ணா!
இசையின் எல்லா பரிமாணங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராதித்தவர் பாலமுரளி கிருஷ்ணா. அவரின் பன்முகத் திறமைக்குச் சான்றாக அமைவதுதான் இந்த இசைத் தொகுப்பில் அமைந்திருக்கும் பாடல்கள்.
அமால்கம் பாடல்களைக் கேட்க: https://youtu.be/Aai0alzJpQw
* * *
விஸ்வநாதனுக்குச் செக் வைத்த சோ!
அரசியலர்கள் அனைவருக்குமே பெரும் சவாலாக அமைந்த திரைப்படம், சோவின் ‘முகம்மது பின் துக்ளக்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற கவிஞர் வாலியின் பாடல், ‘அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை’ எனும் பாடல். இந்தப் பாடலை நாகூர் ஹனிபா அல்லது சீர்காழி கோவிந்தராஜனை வைத்துதான் பாட வைக்க வேண்டும் என்று முதலில் எம்எஸ்வி விரும்பினார். ஆனால், “நீங்கள்தான் பாட வேண்டும்” என்று சோ பிடிவாதம் காட்டினார். எம்எஸ்வி தயங்கினார். இப்படியாக எவரும் தங்களின் பிடியை விட்டுக்கொடுக்காத நிலை ஏற்பட்டது. அப்படியென்றால், திருவுளச்சீட்டு போட்டு பார்த்து அதில் யார் பெயர் வருகிறதோ அவரே பாடட்டும் எனும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அப்படியே திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்தனர். அதில் எம்எஸ்வி-யின் பெயர் வரவே அவரே இந்தப் பாடலைப் பாடினார். இதில் என்ன வேடிக்கை என்றால், நான்கு திருவுளச்சீட்டுகளிலுமே எம்எஸ்வி-யின் பெயர்தான் எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் சோ. தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்வதில் சோவின் பாணிதான் பிரசித்தமாயிற்றே!
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=r5F0CfsMgBY