“அப்டேட் எங்கே... அப்டேட் எங்கே?” என நீண்ட நெடுங்காலமாக துளைத்துக்கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு, போனி கபூர் ஒருவழியாக வலிமை அப்டேட் வெளியிட்டார். ஆனால். “இப்படி 'போனி' பண்ணியதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்” என்று அஜித் ரசிகர்களே திட்டும் அளவுக்கு சுமாராக இருந்தது வலிமை மோஷன் போஸ்டர். இருந்தாலும் அதிகமாகப் பார்க்கப்பட்ட மோஷன் போஸ்டர் என்ற சாதனையைப் படைத்தது. “வலிமை அப்டேட் யாருக்கு உதவியாக இருந்ததோ இல்லையோ, காவல்துறைக்கு ஹெல்மெட் பிரச்சாரத்துக்கு நன்றாக உதவுகிறது” இப்படியெல்லாம் அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்த சமயத்தில்தான், விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்ட செய்தி தீயானது. அதிலும் “சினிமாவில் மட்டும் டயலாக் பேசி ஹீரோவா இருந்தா பத்தாது, நிஜத்திலும் ஹீரோவாக நடந்துகொள்ள வேண்டும்” என கோர்ட்டு சொல்ல, நெட்டிசன்கள் ‘#வரிகட்டுங்க_விஜய்’ என்று ஹேஷ்டேக் போட்டு வெளுத்துவிட்டார்கள். “உயிர்காக்கும் மருந்துகளுக்கே வரிவிலக்கு தராத இந்தியாவில் கோடிகளில் வாங்கும் வெளிநாட்டு சொகுசுக் காருக்கு வரிவிலக்கா?” என்று சிலர் கேள்வி எழுப்பியதும், ஒரு சிலர் “ஒருவேளை ஆடி கார் போல ரோல்ஸ் ராய்ஸும் சாதாரண கார் லிஸ்ட்டுல சேர்ந்துடுச்சோ” என்றும் கிண்டல் செய்ததும் அல்டிமேட்.
***
25 ஆயிரம் பேரை திமுகவுக்கு அழைத்து வருவேன்!- தோப்பு வெங்கடாச்சலம்
ஆனா பாருங்க... சுயேச்சையாக போட்டியிட்ட இவருக்கு விழுந்த மொத்த ஓட்டே ஒன்பதாயிரத்து சொச்சம்தான்.- ரஹீம் கஸ்ஸாலி
***
கொங்கு நாடு என்ற கோஷம் தமிழ்நாட்டின் அமைதியை பாதிக்கும். - கே.பி.முனுசாமி
நாளைக்கு உங்களை கட்சியில் இருந்து நீக்க அதிக வாய்ப்பு இருக்கு. டிராக் ரெக்கார்டு அப்படி!- ஷிவானி சிவக்குமார்
***
ஒரே கதைக்கு உரிமை கொண்டாடி சீமான் - லிங்குசாமி மோதல்.- செய்தி
கதையில மொத்த வித்தையும் இருந்தா அது லிங்குசாமியுடையது. கொஞ்சம்கூட நம்பவே முடியாத மாதிரி இருந்தால் அது சீமானுடையது! சிம்பிள். - தமிழன்டா
***
சசிகலா எந்தக் கட்சி என்பதுகூட தெரியவில்லை.- கடம்பூர் ராஜூ
தெரியாமல் தான் காலில் விழுந்து பாதாபிஷேகம் செய்தீர்களா?- மாதவி ஸ்ரீ
***
ஆக்கபூர்வமான பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். - ஜி.கே.வாசன்
நீங்களும் ஆக்கபூர்வமாக மட்டும் அறிக்கை வெளியிடுங்க தலைவரே!- அமுது