எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
நவீனத் தொழில்நுட்பங்கள் வளர வளர அவற்றை நாச வேலைகளுக்குப் பயன்படுத்துபவர்களும் ஒருபுறம் இருக்கவே செய்கிறார்கள். சமீபத்தில் ஜம்முவில் வெடித்த ட்ரோன் வெடிகுண்டுகள், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதத்தின் புதிய முகமான ட்ரோன் தாக்குதல்கள் எல்லையிலும், உள்ளேயும் தேசத்தின் பாதுகாப்புக்குப் புதிய சவால்களைத் தந்துள்ளன.
வரமாய் வந்த ட்ரோன்கள்
‘ட்ரோன்’ என்பது அளவில் சிறிய ஆளில்லா வானூர்தி வகையில் சேரும். விசேஷங்கள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை பிரமிக்கத்தக்க கோணத்தில் பதிவு செய்வதில் ட்ரோன்களுக்கே பெரும் பங்குண்டு. ட்ரோன் இல்லா குறும்படங்கள் இன்று குறைவு. கண்காணிப்பு, விழிப்புணர்வுப் பணிகளிலும் இன்றைக்கு இவற்றின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
ஸ்விக்கி நிறுவனம் ட்ரோன் வழி உணவு மற்றும் மருந்து விநியோகத்துக்கு முறைப்படி அனுமதி பெற்று அதற்கான பரிசோதனை ஓட்டங்களைத் தொடங்கியுள்ளது. தெலங்கானாவில் அரசே உதிரம் மற்றும் மருந்து தேவைகளுக்கு ட்ரோன்களைப் பறக்கவிட்டுள்ளது. இப்படி வரமாய் வந்த ட்ரோன்கள், ஜம்மு ட்ரோன் தாக்குதலை அடுத்து அரசின் ஒற்றை உத்தரவில் முடங்கிப்போயுள்ளன.