ஸ்டேன் சுவாமி எனும் போராளி

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

‘ஜேல் மே பந்த் கைதியோன் கா ஸச்’ - 2010-ல் வெளியான புத்தகத்தின் தலைப்பு அது.  ‘சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் உண்மை நிலை' என்பது அதன் அர்த்தம். நக்சல் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி இளைஞர்களின் நிலையைப் பதிவுசெய்த அந்தப் புத்தகத்தை எழுதியவர், சமீபத்தில் மறைந்த பழங்குடியினச் செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி.

அந்தக் கைதிகளில் பலர் நக்சல் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள், வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ளக்கூட வசதியில்லாதவர்கள் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த ஸ்டேன், தனது முயற்சியால் பலரை வெளியில் கொண்டுவந்தார்.
அதே ஸ்டேன் சுவாமி பின்னர், நக்சல்களுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்றும், அரசுக்கு எதிராகச் சதி செய்தார் என்றும், மோடியைக் கொல்ல சதி செய்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே மரணமடைந்துவிட்டார் ஸ்டேன்.

பழங்குடிகளுக்காகப் போராடியவர் திருச்சியில் பிறந்த தமிழரான ஸ்டேன் சுவாமி, 1970-களில், பிரிக்கப்படாத பிஹார் மாநிலத்தின் சாய்பாஸா பகுதியில் வசிக்கத் தொடங்கினார். அங்கு அவர் இறைப் பணியில் ஈடுபட்டார். அப்போது பழங்குடியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் தொடங்கினார்.

1996-ல் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டட் (யூசிஐஎல்) நிறுவனம் அமைத்த சுரங்கங்களால், அங்கு வசித்த பழங்குடிகள் கதிரியக்கப் பாதிப்புக்குள்ளாகித் தவித்தபோது, கதிரியக்கத்துக்கு எதிரான ஜார்க்கண்டி அமைப்பின் சார்பாகக் களம் கண்டார் ஸ்டேன். வசிப்பிடங்களைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். பழங்குடி மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

2000-ல் பிஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் தனி மாநிலமானது. கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் அம்மாநிலத்தில், வளர்ச்சி எனும் பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஏற்கெனவே வறுமையில் வாடிக்கொண்டிருந்த பழங்குடி மக்களை மேலும் வதைக்கத் தொடங்கின. கனிம வளம் நிறைந்த ஜார்க்கண்ட் மண்ணில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளை வெளியேற்ற வழிவகுத்தன. அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை.
பழங்குடியினரின் நிலங்களை, பழங்குடியினர் அல்லாதவர்கள் வாங்குவதைத் தடைசெய்யும் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம், சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகிய சட்டங்களில் 2016-ல் ரகுவர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு திருத்தம் மேற்கொண்டதுடன், பழங்குடியினரின் நிலங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டமிட்டது. அதை எதிர்த்து, ‘பத்தல்கடி’ எனும் இயக்கத்தைத் தொடங்கிய பழங்குடி மக்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பாய்ந்தன. அந்த இயக்கத்துக்கு ஸ்டேன் சுவாமி ஆதரவளித்தார்.

1997-ல் சமதா வழக்கில், பழங்குடிகள் தங்கள் நிலங்களில் கனிமப் பொருட்களை வெட்டியெடுக்கவும் அவற்றைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதை அமல்படுத்தாமல் அமைதி காத்த அரசை விமர்சித்தார் ஸ்டேன் சுவாமி. பழங்குடிச் சமூகங்களின் நலனை மேம்படுத்துவதில் ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்க, முழுக்க முழுக்க பழங்குடியினர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பழங்குடிகள் ஆலோசனைக் குழுவை (டிஏசி) அமைக்க வழிவகுக்கும் அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை அரசு அமல்படுத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

வன்முறையைத் தூண்டியதாக வழக்கு

இந்நிலையில், 2018-ல் பீமா கோரேகானில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அதன் பின்னணியில், 2017 டிசம்பரில் புணே நகரின் எல்கர் பரிஷத் எனும் இடத்தில் ஸ்டேன் சுவாமி உள்ளிட்டோர் ஆற்றிய உரை இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் சுதா பரத்வாஜ், வர வர ராவ், ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்டோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், 2020 அக்டோபர் 8-ல் ஸ்டேன் சுவாமியும் கைதுசெய்யப்பட்டார். ‘உபா’ என்றழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் அவர் மீது பாய்ந்தது. தான் ஒருபோதும் பீமா கோரேகானுக்குச் சென்றதில்லை என்றும், தனது மடிக்கணினியில் ‘ஆதாரங்களை’ என்ஐஏ அதிகாரிகளே உட்செலுத்தி வைத்ததாகவும் ஸ்டேன் சுவாமி முறையிட்டார். தனது அறையில் நடத்தப்பட்ட சோதனையின்போது அது தொடர்பான ஆவணத்தைக் கேட்ட தன்னிடம், மராத்தி மொழியில் எழுதப்பட்ட ஒரு காகிதம்தான் காட்டப்பட்டது என்று முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், பிணை கேட்டு ஸ்டேன் சுவாமி தாக்கல் செய்த மனுக்களைக் கடுமையாக ஆட்சேபித்தது தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ). நவி மும்பையின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமிக்குப் பார்க்கின்ஸன் பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டன. அவரது உடல்நிலை மோசமானதால், ஹோலி ஃபேமிலி எனும் தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்து 15 நாட்களுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, சிறைத் துறை அதிகாரிகளுக்கு மே 28-ல் உத்தரவிட்டது மும்பை உயர் நீதிமன்றம். அதன்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஜூலை 5 வரை அவரை மருத்துவமனையில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவமனையிலேயே மரணம்

ஜூலை 6-ல் மீண்டும் வழக்கு விசாரணை நடக்கவிருந்த நிலையில், அதற்கு முதல் நாளே மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி மரணமடைந்தார். தகவல் அறிந்த நீதிபதிகள், “நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். அதை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகளே இல்லை” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ், பாஜக என எல்லாக் கட்சிகளின் அரசுகளையும் எதிர்த்தே ஸ்டேன் சுவாமி போராடினார். பழங்குடிகள் நலனே பிரதானம் என்று வாழ்ந்து மறைந்த ஸ்டேன் சுவாமி, வாழ்க்கையிலிருந்தும் அநேகமாக வழக்கிலிருந்தும் விடுதலை பெற்றுவிட்டார்.

என்ஐஏ என்ன சொல்கிறது?

ஸ்டேன் சுவாமிக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் தங்கள் வசம் இருப்பதாகச் சொல்கிறது என்ஐஏ. பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக என்ஐஏ அளித்த 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், ஸ்டேன் சுவாமிதான் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) எனும் நக்சல்வாத இயக்கத்துடன் அவர் தொடர்பில் இருந்தார் என்றும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடமிருந்து 8 லட்சம் ரூபாயை ஸ்டேன் சுவாமி பெற்றுக்கொண்டதாகவும் என்ஐஏ குற்றம்சாட்டுகிறது. ஆயுதம் ஏந்திய போராளிகள் மூலம் மோடி அரசுக்கு எதிரான நடவடிக்கை களுக்கான ஏற்பாடுகளைச் செய்தார்; மத்தியில் பாசிச அரசு நடைபெறுவதாகவும் அதை எதிர்கொள்ள பட்டியலினத்தவர்களையும், முஸ்லிம்களையும் கொண்ட அணியை ஒருங்கிணைக்கச் சதிசெய்தார்; இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) இயக்கத் தலைவர்களுடன் கடிதத் தொடர்புகள் கொண்டிருந்தார் என ஸ்டேன் சுவாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை என்ஐஏ பதிவுசெய்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE