சிறகை விரி உலகை அறி 06: அமைதியின் தூதுவர்களாவோம்!

By சூ.ம.ஜெயசீலன்

கானகத்தில் நுழைந்து, பாறைகளைத் தொட்டுத் தடவி மலையேற்றம் போயிருக்கிறேன். விண்ணைத் தொடும் உயரத்துக்குச் சென்று வெண் மேகங்களை ரசித்திருக்கிறேன். சுவாசக்குழல் மாட்டி (Snorkeling) நீருக்குள் நீந்தியிருக்கிறேன். ஆனால், சுரங்கப் பாதைகளுக்குள்ளேயே பயணிப்பது நாகசாகியில்தான் எனக்குச் சாத்தியமானது.

ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவு கியூசு (Kyushu). முழுவதும் மலைகளால் ஆன இத்தீவில் அமைந்திருக்கிறது நாகசாகி. இது ஒரு மலை நகரம். கடற்கரைப் பட்டணம். பள்ளத்தாக்குகளில் காற்று பல்லாங்குழி விளையாடுவதும், குன்றுகளுக்கு இடையே குலவையிட்டு நீர் கடல் மடி தவழ்வதும் அன்றாட அதிசயம்.

இரண்டு நாட்களாக அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பரபரப்பாக ஓடிய நான், அன்று காலை எட்டு மணிக்கு எழுந்து பொறுமையாகக் கிளம்பி தொடர்வண்டி நிலையம் சென்றேன். ஹிரோஷிமாவில் இருந்து நாகசாகி 420 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்கு செல்வதற்கு நேரடியான புல்லட் ரயில் இல்லை. குறிப்பிட்ட தூரம்வரை புல்லட் ரயிலில் சென்று, பிறகு அங்கிருந்து லிமிட்டட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகசாகி செல்ல வேண்டும். இரண்டிலும் ஜே.ஆர்.பாஸைப் பயன்படுத்தலாம்.

சுரங்கம் எனும் சொர்க்கம்

புல்லட் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுரங்கத்துக்குள் நுழைந்து வெளியேறியது. பிறகு, அடுத்தடுத்து எண்ணற்ற சுரங்கப் பாதைகளைக் கடந்தது. திடீரென வெளிச்சம் வரும். அடுத்த சில விநாடிகளில் மீண்டும் இருள் கவிழும். கண்களை விரித்து கருஇருள் ரசிப்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. இரவில் விளக்குகளுக்கு ஓய்வளித்த பிறகு, வழக்கமாக இருளோடு விழிகளை உலவ விடுவேன். வெளிச்சத்தையே பார்க்கும் கண்களுக்கு இருள் ஒரு சஞ்சீவி.

இப்போது வித்தியாசமான இருள். பெட்டிக்குள் விளக்குகள் மங்கலாக எரிந்தாலும் சுரங்கப்பாதைகளின் இருட்டுதான் கவனம் பெற்றது. ஒவ்வொரு சுரங்கத்துக்குள்ளும் எவ்வளவு நேரம் போகிறது என விநாடிகளை எண்ணத் தொடங்கினேன். குழந்தைகளைப் போல வியப்பில் மிதந்தேன். பத்து விநாடி, ஐந்து விநாடி, முப்பது விநாடி, ஐம்பது விநாடி, மூன்றரை நிமிடங்கள் என ஒவ்வொரு சுரங்கத்துக்கும் ஒவ்வொரு கால அளவு எடுத்தது. மூன்றரை மணிநேரத்தில் நாகசாகியில் இறங்கினேன்.

வெறித்தனத்தின் விளைவு

1945 ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில், ஜப்பானின் கொக்குரா (Kokura) நகரின் வான்வெளியில் அமெரிக்க விமானம் ஒன்று பறந்தது. கொக்குரா நகரில் போடுவதற்காக அணுகுண்டு ஒன்றை அது சுமந்திருந்தது. பரந்து படர்ந்த பனிமூட்டத்தில் நகரம் முழுவதுமாக மறைந்திருந்ததால், மேகம் விலகாதா என நகரை வட்டமடித்தது விமானம். மூன்று முறைச் சுற்றி வந்தும் ஏமாற்றமே மிஞ்சியது. கொக்குரா தப்பியது.

அடுத்து என்ன? பிண வாடையை சுவாசிக்காமல் பின்வாங்க விரும்பாத விமானி, விமானத்தை நாகசாகி நோக்கித் திருப்பினார். கோழிக்குஞ்சுகளை அள்ளிச் செல்ல வட்டமிடும் பருந்துபோல் நாகசாகியின் மீது வட்டமிட்டது விமானம். மலை முகடுகளைத் துவட்டிக் கொண்டிருந்த மேகம் விமானியின் கண்களை மறைத்தது. நேரம் கடந்தது. மேகம் கடக்கவில்லை. வேறுவழியில்லை. குறைந்துகொண்டே வந்த எரிபொருள் முற்றிலும் தீருவதற்குள், தான் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவிட விரும்பினார் விமானி.

அய்யகோ! அந்நேரம் அக்கொடூரம் நிகழ்ந்தது. சற்றே மேகங்கள் விலக... நாகசாகி தெரிந்தது. சுறுசுறுப்பானார் விமானி. விரைந்து செயல்பட்டார். மக்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டது. அது வெடித்தபோது மணி காலை 11.02. குண்டு விழுந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏறக்குறைய அனைவரும் வெப்ப அலையினால் நா வறண்டு, உடல் எரிந்து, சுவாசிக்கக் காற்று இன்றி, கதிர்வீச்சு தாக்கி பலியானார்கள். ஆம், ஜப்பானைப் பழிதீர்க்க அமெரிக்கா அறிவியலைப் பயன்படுத்தியது!

பாதுகாப்புப் பெட்டகம்

நாகசாகியில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பினேன். நாகசாகி மத்திய தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் நகரத்தின் வரைபடம் வாங்கினேன். பிறகு, பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க இடம் தேடினேன். நிலையத்துக்குள்ளேயே, பாதுகாப்புப் பெட்டகங்கள் சாவிகளோடு இருக்கின்றன. பெட்டகத்தில் நாணயம் செலுத்தி பூட்டி சாவியை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கட்டணம்தான். மணிக்கணக்கெல்லாம் இல்லை. முதுகில் சுமந்திருந்த பையை உள்ளே வைத்துப் பூட்டினேன். கடவுச்சீட்டு உள்ள சிறு பையை உள்ளேயே வைத்துவிட்டதைப் பிறகுதான் கவனித்தேன். மீண்டும் திறந்து பையை எடுத்துவிட்டு கதவைச் சாத்தினேன். பூட்ட இயலவில்லை. ஆமாம், மறுபடியும் நாணயம் போட வேண்டும்.

நாகசாகி அமைதிப் பூங்கா

வரைபடம் காட்டிய திசையில் ‘நாகசாகி அமைதிப் பூங்கா’ நோக்கி நடந்தேன். நகரம் அமைதியாகக் காட்சி அளித்தது. ஹிரோஷிமாவுக்குக் கிடைத்துள்ள உலக கவனமும் வளர்ச்சியும் நாகசாகிக்குக் கிடைக்கவில்லை. நகரின் அமைதிப் பூங்கா கனத்த மவுனத்தைச் சூடியிருந்தது. ஹிரோஷிமா போல இங்கே கலைநயம் இல்லை. பசுமை இல்லை. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமில்லை. யாருமில்லா மயானத்துக்குள் சென்று விதவிதமான கல்லறைகளைப் பார்ப்பதுபோலத்தான் இருந்தது.

அணுகுண்டின் கோரத்தையும் அமைதிக்கான நம்பிக்கையையும் பரப்பும் இப்பூங்கா, நம்பிக்கை, ஜெபம், கற்றல், விளையாட்டு, பொதுத்திடல் என ஐந்து மண்டலங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை மண்டலத்தில் 9.7 மீட்டர் உயர ‘அமைதி சிலை’ நிறுவப்பட்டுள்ளது. ஊதா நிறத்தில் ஓர் ஆண் அமர்ந்த நிலையில் உள்ள அந்த வெண்கலச் சிலை, வலது கையை மேலே உயர்த்தி அணு ஆயுதத்தின் அழிவையும் அச்சத்தையும் உரைக்கிறது; இடதுகையைக் கிடைமட்டமாக நீட்டி உள்ளங்கை தரையைப் பார்க்கும்படி வைத்து அமைதிக்கான விருப்பத்தைப் பறைசாற்றுகிறது; முகம் போரில் இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்காகச் ஜெபிக்கும் மனநிலையில் உள்ளது.

அணுகுண்டு விழுந்தபோதும், அதன் தாக்கத்தால் சில மாதங்கள் கழித்தும் இறந்தவர்களின் பெயர்கள் அமைதி சிலைக்குக்கீழே உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிலைக்கு இருபுறமும் கைகுவித்து கும்பிடுவதுபோல இரண்டு நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதன் உள்ளே, உலக நாடுகளில் இருந்து அமைதி வேண்டி மக்கள் அனுப்பும் வண்ண நிற காகித கொக்குகள் வைக்கப்பட்டுள்ளன. உச்சியில் அமைந்துள்ள வெண்கலக் கொக்கு பறக்கத் துடிக்கிறது. எந்த இடத்தில் குண்டு விழுந்ததோ அந்த இடத்தில் நினைவுத்தூண் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கட்டிடத்தின் படியில் இறங்கி, கீழே சென்று மண்ணின் அடுக்குகளில் உடைந்த ஓடுகள், செங்கற்கள், கண்ணாடித் துகள்கள் போன்றவை எச்சங்களாக இருப்பதைப் பார்க்கலாம்.

அணுகுண்டு அருங்காட்சியகம்

அமைதிப் பூங்காவுக்கு அருகிலேயே உள்ள அணுகுண்டு அருங்காட்சியகம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. 

1. அணுகுண்டு போடப்படுவதற்கு முன்பான நாகசாகி நகரம் மற்றும் அதன் கலாச்சாரம்

2. அணுகுண்டினால் ஏற்பட்ட பாதிப்புகளும் அழிவுகளும் 

3. போருக்கான காரணங்கள், பிரச்சினைகள் மற்றும் அணு ஆயுத வரலாறு 

4. அணுகுண்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட குறும்படங்கள்.

அணுகுண்டு எப்படி போடப்பட்டது, அது விழுந்ததும் நெருப்பு மேகங்கள் எவ்வளவு உயரத்துக்கு, எவ்வளவு தூரத்துக்கு உயர்ந்து பரவின என்பதைக் காணொலியாகக் காட்டுகிறார்கள். பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அணுகுண்டு எப்படி இருந்தது, அதற்குள் அணுக்கரு எந்த இடத்தில் இருந்தது என்பதைச் செயற்கையாகச் செய்துவைத்து அறிவு புகட்டுகிறார்கள். குண்டு விழுந்த இடத்திலிருந்து 800 மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்ட சுவர்க் கடிகாரம், 11.02 மணிக்குக் குண்டு வெடித்தவுடன் அப்படியே நின்றுபோனதைக் காட்டுகிறது. முற்றிலும் அழிந்த உராகமி பேராலயத்தையும் நாகசாகி சிறையின் சிதிலங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். இவைஅனைத்தும் மிக அதிகமான வெப்பம் மற்றும் பாரிய வெடிப்பினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு மட்டும் சாட்சிய மளிக்கவில்லை; மாறாக அணு ஆயுதங்கள் இல்லாத எதிர்காலத்துக்கான ஏக்கத்தையும் நம்பிக்கையையும் விதைக்கின்றன.

நம்பிக்கை விதை

அணுகுண்டு விழுந்தபோது, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் ஏங்கி மடிந்தவர்களை நினைவுகூரும் விதமாக நாகசாகி அமைதிப் பூங்காவில் ‘அமைதியின் நீரூற்று’ பொங்கி வழிகிறது. குண்டுவெடிப்பில் பலியான கொரிய மற்றும் சீன நாட்டு மக்களுக்காக நினைவுச்சின்னங்கள் இங்கு இருக்கின்றன. சீனா கொடுத்த ‘அமைதியின் கன்னிப்பெண்’ சிலை, செக்கோஸ்லோவாக்கியா வழங்கிய ‘வாழ்வின் மகிழ்ச்சி’ சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்தியில், இறந்த தன் குழந்தையைக் கையில் வைத்து குனிந்து வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் சிலை ஒட்டுமொத்த தாய்மார்களின் வேதனையைக் கூறுகிறது. இச்சிலைகள் உலக நாடுகளின் நட்பு, உடனிருப்பு மற்றும் அணு ஆயுதம் இல்லா உலகை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையை ஒவ்வொருவருக்குள்ளும் விதைக்கின்றன.

(பாதை நீளும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE