நீட் தேர்வு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் உச்சமடைந்திருக்கும் நிலையில், தேர்வு நடக்குமா நடக்காதா எனும் குழப்ப நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கும் விஷயம்.
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த திமுக, இப்போது நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதை ரத்துசெய்யக்கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்க முடியாது என்று கூறியதுடன், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
அதேசமயம், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் விஷயம் என்பதால், இதுபோன்ற விஷயங்களை ஆராய மாநில அரசு சார்பில் குழு அமைப்பது வழக்கமானதுதான் என்றும், இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கிடையே, இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரே குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகஸ்ட் 1-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்படலாம் எனும் ஊகங்களும் எழுந்திருக்கின்றன. மறுபுறம், பாதிப்புகள் குறையும்பட்சத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.