கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாறிலிருந்து தொடங்குகின்றன வால்பாறை மலைக்காடுகள். இந்த அடர்காடுகளுக்குள் நவமலை, கல்லார், உடுமன்பாறை, நெடுங்குன்றம், கீழ்பூனாட்சி என ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடியிருப்புகள் (செட்டில்மென்ட்) உள்ளன. தேசத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று, இந்த மலைக்காடுகளையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் சோகம். எனினும், அரசு அதிகாரிகள், பழங்குடியினச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் கைகோர்த்ததில் பாதிப்புகள் குறையத் தொடங்கியிருக்கின்றன.
முதல் பலி
இந்த மலைக்காடுகளில் முதுவர், மலசர், புலையர், இருளர் என பல்வேறு பிரிவினர் குழுக்களாக வசிக்கின்றனர். முன்பெல்லாம் இவர்கள், அவரவர் பகுதிகளில் விவசாயக் காட்டு வேலை செய்யும் நிலையில் வாரத்துக்கு ஒரு முறை சாமான்கள் வாங்க வால்பாறை, பொள்ளாச்சி சந்தைகளுக்கு வருவது வழக்கம். கரோனா காலம் தொடங்கிய பின்னர் மாதக்கணக்காகியும் இவர்கள் வெளியே வரவில்லை. காட்டுக்குள் கிடைக்கும் கிழங்கு வகைகள், தானிய வகைகள், ரேஷன் பொருட்களை வைத்தே பசியாறிக்கொண்டனர்.