அணுகுண்டு நெருப்பில் பொசுங்கிய குழந்தைகளின் அழுகுரல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் இன்னும் உயிரோடிருக்கிறது. பசுங்கிளைகள், பூக்கள், சுத்தமானக் காற்று, பறவைகள் எல்லாம் இருந்தும் விவரிக்க முடியாத அமைதி எங்கும் நிரம்பியுள்ளது.
பலியான பள்ளி மாணவர்கள்
பூங்காவில் தொடர்ந்து நடந்தேன். 12 மீட்டர் உயரமுள்ள ‘நினைவு கோபுரம்’ கண்களில் பட்டது. கோபுரத்தின் கீழே ஒரு சிறுமி சிலையாக நிற்கிறாள். தேவதைபோல இறக்கைகளுடன் நிற்கும் அவள் தன் கைகளில் பூங்கொத்து ஏந்தி, முகத்தில் சோகமும், கண்களில் கண்ணீருமாக நிற்கிறாள். கோபுரத்தில் சிலைகளாக வைக்கப்பட்டுள்ள பறவைகள் பறக்கத் தயாராக உள்ளன.
யாருக்கான நினைவுக் கோபுரம் இது? ஏன் இங்கே சிறுமி அழுது நிற்கிறாள்? பல்வேறு மொழிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள குரல் பதிவு அங்கே இருக்கிறது. அதை இயக்கிக் காரணத்தை அறிந்தேன்.
இரண்டாம் உலகப் போரின்போது எதைச் செய்தாகிலும் வெற்றிபெற நினைத்தது ஜப்பான். இளைஞர்களையும், வலுவுள்ளவர்களையும் போரிட வற்புறுத்தி அனுப்பியது. வீரர்களுக்கு உதவ, ஆயுதங்கள் செய்ய, கருவிகளைப் பாதுகாக்கும் பெட்டகங்கள் அமைக்க, போர் சிதிலங்களை அப்புறப்படுத்த, அவசர கால உதவி புரிய இன்னும் நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். எனவே, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அரசு பயன்படுத்தியது. ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குக் குறையாது சுழற்சி முறையில் அவர்கள் வேலை செய்தார்கள். ‘துணை ராணுவப் படையினர்’ போல செயல்பட்டார்கள். 1945 ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டில் சிக்கி ஏறக்குறைய 6,300 மாணவ - மாணவியர் பலியானார்கள்.
பலியான மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் காயங்களோடு தப்பிய மாணவர்கள் இணைந்து நன்கொடை திரட்டி இந்த நினைவு கோபுரத்தை எழுப்பியுள்ளார்கள். பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததுபோல ஓர் ஓரத்தில் இருக்கும் இக்கோபுரம், குழந்தைகளின் உலக அமைதிக்கான ஏக்கத்தை நமக்குள் கடத்துகிறது.
கடைசி வார்த்தைகள்
கிழக்குக் கட்டிடம், மையக் கட்டிடம் என இரண்டு கட்டிடங்களில் அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன. கிழக்குக் கட்டிடம் - அணுகுண்டு விழுந்ததற்கு முன்பும் பின்புமான ஹிரோஷிமாவின் வரலாற்றைச் சொல்கிறது. மையக் கட்டிடம் – அணுகுண்டு விழுந்த நாளில் ஏற்பட்ட அழிவுகளின் வரலாறைச் சொல்கிறது. நான் அங்கே சென்றபோது, மறுசீரமைப்பு நடந்துகொண்டிருந்ததால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும், முக்கியமான சில தகவல்களுடன் இயங்கிய தற்காலிக அருங்காட்சியகத்துக்குள் சென்றேன்.
இரத்தக் கறை படிந்த ஆடைகளையும், கதிர்வீச்சு தாக்குதலில் வெந்துபோன உடல்களின் படங்களையும், பார்த்துக்கொண்டே வந்த நான், ‘கடைசி வார்த்தைகள்’ பகுதியில் என்னையும் அறியாமல் கண்ணீர் வடித்தேன். தீக்காயங்களுடனும், கதிர்வீச்சு தாக்குதலுடனும் வீட்டுக்கு ஓடிய எண்ணற்ற குழந்தைகள் தாயின் மடியில் மடிந்திருக்கிறார்கள். அக்குழந்தைகள் பேசிய கடைசி வார்த்தைகளைப் பெற்றோர்கள் பகிர்ந்துள்ளார்கள். அவை அங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
யோஷியாகி ஜென்டோ எனும் 12 வயது சிறுவனின் சட்டை, காற்சட்டை மற்றும் உள்ளாடைகள் அங்கே வைக்கப்பட்டுள்ளன. அதன் கீழே உள்ள பலகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - “என் அண்ணன் தீவிர தீக்காயங்களுடனும், அறுந்து தொங்குகின்ற சதையுடனும் வீட்டுக்கு வந்தான். அவனுடைய சட்டையை எங்களால் கழற்ற முடியவில்லை. அது தீக்காயங்களுடன் உடலில் ஒட்டிக்கொண்டதால், வெட்டித்தான் எடுத்தோம். தானும், தன் வகுப்புத் தோழர்களும் எவ்வாறெல்லாம் துன்புற்றோம் என்பதையும், ஆற்றில் குதித்து ஒரு மரக்கட்டையில் தொங்கியபடி எப்படித் தப்பித்தோம் என்பதையும் சொன்னான். எப்படியாவது வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என வந்ததாகக் குறிப்பிட்டான். என் அம்மா அவனுக்குப் பழரசம் கொடுத்தார். ‘ரொம்பச் சுவையாக இருக்கிறது’ என்றான். அதுதான், அண்ணன் பேசிய கடைசி வார்த்தை. மகன் தன் அருகில் எப்போதும் இருக்க வேண்டும் என கூறிய என் அம்மா, ரத்தக் கறை படிந்த ஆடையை தன்னுடைய காலம் வரைக்கும் புத்தரின் பீடத்தில் வைத்திருந்தார்.”
ஜப்பானியர்களின் நம்பிக்கை
ஒன்பது அடி உயரத்தில் இன்னுமொரு தூண் நிற்கிறது. அதன் உச்சியில் கொக்கு ஒன்றைத் தலைக்கு மேல் பிடித்தபடி நிற்கிறாள் ஒரு சிறுமி. சிறுமியின் பெயர் சடாகோ சசாகி. தூணின் வலது மற்றும் இடதுபுறம் சிறுவன் மற்றும் சிறுமியின் சிலைகள் இருக்கின்றன. “உலகில் அமைதியை உருவாக்குவதற்கான எங்கள் அழுகை இது... எங்கள் ஜெபம் இது!” என்று கீழே பொறிக்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆயுள் மற்றும் நிறைவான மகிழ்ச்சியின் அடையாளமாக ஜப்பான் கலாச்சாரத்தில் கொக்கு திகழ்கிறது. ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்தால் விரும்புவது நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
சடாகோ சசாகி
1955 ஆகஸ்ட் 3-ம் தேதி, ஹிரோஷிமாவில் உள்ள செஞ்சிலுவை மருத்துவமனைக்கு ஆயிரம் காகிதக் கொக்குகள் வந்தன. நகோயாவில் வாழும் மக்கள் அதை அனுப்பியிருந்தார்கள். மருந்துகளுடன் போராடுகிறவர்கள் நம்பிக்கையை சுவாசிக்க அம்மக்கள் செய்த பேருதவி அது. நோயுற்றிருந்தவர்கள் கொக்குகளைக் கண்டார்கள்; பேருவகை கொண்டார்கள். தாங்களும் அதுபோல செய்ய உத்வேகம் பெற்றார்கள். அவர்களில் ஒருவர், 1943 ஜனவரி 7-ம் தேதி பிறந்த சடாகோ சசாகி.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது இச்சிறுமிக்கு இரண்டு வயது. குண்டு விழுந்த இடத்திலிருந்து ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இவர் வீடு. வீடு இடிந்து விழுந்தாலும் சடாகோவை அவர் அம்மா காப்பாற்றிவிட்டார். காயங்கள் ஏதுமின்றி காப்பாற்றப்பட்ட சடாகோ ஆரோக்கியமாகவே வளர்ந்தார். பள்ளிக்குச் சென்றார். தடகள வீராங்கனையாக மிளிர்ந்தார். எதிர்காலத்தில் விளையாட்டு ஆசிரியையாகிட ஆவல் கொண்டார்.
6-ம் வகுப்பு படித்தபோது அவருக்குச் சளி பிடித்தது. கழுத்து மற்றும் காதுமடல்களுக்குப் பின்புறம் கட்டிகள் உருவாகின. நாளடைவில் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் வீங்கத் தொடங்கின. அணுகுண்டு வெளியிட்ட கதிர்வீச்சினால் சடாகோவுக்கு ரத்தப் புற்றுநோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் சொன்னார்கள்.
1955 பிப்ரவரி 21-ல், ஹிரோஷிமா செஞ்சிலுவை மருத்துவமனையில் சடாகோ அனுமதிக்கப்பட்டார். நகோயாவில் இருந்து வந்த கொக்குகளைக் கண்டதும் நம்பிக்கையில் முகம் மலர்ந்தார். ‘தான் நலம் பெறுவோம்’ என்னும் நம்பிக்கையுடன், ஆயிரம் காகிதக் கொக்குகள் செய்யத் தொடங்கினார். காகிதம் கிடைக்காதபோது, மருந்துகளைச் சுற்றியிருந்த காகிதங்களிலும் கொக்குகளை உருவாக்கினார். புன்னகை பூத்த பூவிழியாள் நம்பிக்கையுடன் போராடினார்.
மொத்தம் ஆயிரத்து முந்நூறு கொக்குகளை சடாகோ செய்ததாக, ‘அமைதி நினைவு பூங்கா’ வெளியிட்டுள்ள புத்தகம் குறிப்பிடுகிறது. இருப்பினும், சடாகோ 1955 அக்டோபர் 25 அன்று தனது 12-வது வயதில் இறந்தார்.
ஒன்றிணைந்த மாணவர்கள்
துயரச் செய்தி அறிந்த மாணவர்கள் விம்மி அழுதார்கள். ‘ஒற்றுமைச் சங்கம்’ எனும் பெயரில் ஒன்றிணைந்தார்கள். கலந்துரையாடினார்கள். சடாகோ மற்றும் அணுகுண்டு கொன்றழித்த ஆயிரக்கணக்கான குழந்தைகளின் சார்பாக நினைவிடம் அமைக்கத் திட்டமிட்டார்கள். ஆறாம் வகுப்பு மாணவர்களின் திட்டம் பலரையும் ஈர்த்தது. ஜப்பானில் உள்ள மூவாயிரத்து இருநூறு பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஒன்பது நாடுகளின் உதவியுடன் எழுந்த இந்த நினைவிடம் 1958 மே 5 அன்று திறக்கப்பட்டது.
இங்கு வருகிற ஒவ்வொருவருக்கும், உலகில் அமைதியை உருவாக்க காகிதக் கொக்குகளை இன்றுவரை தன்னார்வலர்கள் வழங்குகிறார்கள். எனக்கும் கொடுத்தார்கள். உலகம் முழுவதும் இருந்து வருடத்துக்குச் சுமார் ஒரு கோடி கொக்குகள் செய்து அனுப்புகிறார்கள் மாணவர்கள். அவையும் இங்கே வைக்கப்பட்டுள்ளன.
கனவு காணுங்கள்
அடுத்ததாக, மீகிச்சி சுசுச்சியின் (Miekichi Suzuki) மார்பளவு சிலையைப் பார்த்தேன். ஹிரோஷிமாவில் பிறந்த இவர், புகழ்பெற்ற புதின ஆசிரியர். “என் குழந்தைப் பருவத்தில் செய்தது போலவே சாதாரணமாக நான் எப்போதும் கனவு காண்பேன். அதனால் சிறிதளவே நான் துன்புறுவேன் - மீகிச்சி” என அவருடைய சிலைக்கு அருகில் எழுதப்பட்டுள்ளதை வாசித்துவிட்டு அடுத்த இடத்துக்குப் புறப்பட்டேன்.
(பாதை நீளும்)
குழந்தை இலக்கியத்தின் தந்தை
மெய்ஜி மற்றும் டாய்ஷோ காலத்தில் வாழ்ந்தவர் மீகிச்சி சுசுச்சி (1882-1936). அகாய் டோரி (Akai Tori) எனப்படும் குழந்தைகள் இலக்கிய பத்திரிகையை 1918-ல் தொடங்கியவர் இவர். அகாய் டோரி என்றால், ‘சிவப்புப் பறவை’ என்று பொருள். இந்தப் பத்திரிகைதான், பாடல் மற்றும் தேவதைக் கதைகளை ஜப்பானியக் குழந்தை களுக்கு முதன்முதலாக வழங்கியது. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்க, கட்டுரைகளும், எளிமையான கவிதைகளும் எழுதுவது எப்படி என ஆசிரியர்களுக்கு சுசுச்சி வழிகாட்டினார். உலகத்தரமான ‘குழந்தைகள் கதைகளை’ ஜப்பானில் அறிமுகப்படுத்திய சுசுச்சி, ‘ஜப்பானிய குழந்தை இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.