வேட்பாளர் அறிவிப்பில்தான் இழுபறி... வெற்றி வித்தியாசத்தில் காங்கிரஸ் அமோகம் @ மயிலாடுதுறை

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: காங்கிரஸ் கட்சியில் நீண்ட இழுபறிக்குப் பின் கடைசி நேரத்தில் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.சுதா, 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த முறை திமுக வசம் இருந்த மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியை, இந்த முறை காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி கேட்டுப் பெற்றது. இங்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, இத்தொகுதியின் முன்னாள் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் ஆகியோர் போட்டியிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, வேட்பாளர் அறிவிப்பில் மிக நீண்ட தாமதமும், இழுபறியும் நீடித்தது. தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவதற்கு முந்தைய நாள் மாலை வரை மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

நீண்ட இழுபறிக்குப் பின், வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவதற்கு முந்தைய நாள் இரவு தான், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆர்.சுதாமயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்ததால், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் புகைச்சல் ஏற்பட்டது. அதன்பின் சமாதானம் அடைந்த உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளும், திமுக உள்ளிட்ட பிற கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதன் விளைவாக காங்கிரஸ் வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று, 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பி.பாபுவை வென்றார்.

இங்கு அதிமுக வேட்பாளர் தவிர பாமக உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 10 பேரில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த்துக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுதா வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், 2019 மக்களவைத் தேர்தலில், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியைவிட திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 2,61,314 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அதைவிட அதிக வாக்குவித்தியாசத்தில் சுதா வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE