கரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சைக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார். அப்படிப் போகும் சமயத்தில் அரசுப் பள்ளிகளுக்கும் விசிட் அடிக்கிறார். அப்படி அண்மையில் சென்றபோது அவருக்கான உணவு உள்ளிட்ட உபசரிப்புகளை கல்வி அதிகாரிகளே கவனித்துக் கொண்டார்களாம். ஆனால், “அமைச்சருக்கு தங்குதல், உணவு ஏற்பாடுகளுக்கு செலவு செய்த வகையில் என்கிட்ட 75 ஆயிர ரூபாய்க்கு பில் இருக்கு அதை செட்டில் பண்ணிருங்க” என்று மக்கள் பிரதிநிதி ஒருவர் கல்வி அதிகாரியிடம் சிட்டையை நீட்டினாராம். மிரண்டு போன அதிகாரி, விஷயத்தை மகேஷின் கவனத்துக்குக் கொண்டு போனாராம். செலவுகளை கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொண்டபோது, இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என முகம் சுளித்த மகேஷ், உடனடியாக விஷயத்தை உதயநிதியின் காதில் போட்டாராம். இதையடுத்து, சிட்டை கொடுத்த சீமானுக்கு அறிவாலயத்தில் இருந்து போன். போனில் என்ன பேசினார்களோ தெரியவில்லை. சிட்டை சீமான் இப்போது கப் சிப்!