ரஜினி சரிதம் 23: ஆறிலிருந்து எழுபது வரை- சிஷ்யனை மீட்டெடுத்த குரு

By திரை பாரதி

கே.பாலசந்தரின் ‘தப்புத் தாளங்கள்’ முடிந்த பிறகு, அவரது இயக்கத்தில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் நடித்து முடித்திருந்தார் ரஜினி. அந்தப் படத்துக்கு ரஜினி பேச வேண்டிய டப்பிங் மீதமிருந்தது. ரஜினியை அழைத்துவந்து டப்பிங் பேசி முடிக்கும்படி, தன்னுடைய உதவியாளர் கண்மணி சுப்புவை அனுப்பினார் கேபி. ரஜினி வர மறுத்துவிட்டார். படத்தைச் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தாக வேண்டுமே என்பதால், அனந்துவை அடுத்து அனுப்பிவைத்தார். அவரிடமும் வர முடியாது என்று ரஜினி சொல்லியனுப்ப, கேபி-க்கு ஒரே ஆச்சரியம். அவரே ரஜினியைத் தேடி வீட்டுக்குப் போனார்.

“ரஜினி... உனக்கு என்ன ஆச்சுப்பா? ஏன் டப்பிங்குக்கு வரலேன்னு சொன்னே?”

“என்னால முடியல சார்... விடிய விடிய தூக்கமில்ல. தூக்கம் வரவும் மாட்டேங்குது... மனசுல அமைதியில்ல”

“ஏன் எதனால..?”

ரஜினியிடமிருந்து அழுகைதான் பதிலாக வந்தது.

“எத்தனைத் துடிப்பானவன் நீ... எத்தனை வேகமானவன் நீ... உங்கிட்ட பிடிச்சதே அதுதானே. இப்படி முடங்கிப்போய் இருக்கியே... சரி, உன்னை என்னோட நண்பன்கிட்ட கூட்டிட்டுப் போகப்போறேன். அவன் நண்பன் மட்டுமில்ல; என்னோட டாக்டரும்தான். நீ அங்கே தங்கி அவர் தர்ற சிகிச்சை எதுவானாலும் எடுத்துக்கணும். என்னோட மகனா இருந்து இதை நீ கேட்கணும். நீ எங்கே இருக்கேங்கிறது யாருக்கும் தெரியாம நான் பார்த்துகிறேன். எனக்காக இதைச் செய். டப்பிங்கெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று கையோடு ரஜினியை அழைத்துக்கொண்டு தன்னுடைய மருத்துவர் ஆர்.எஸ்.ராஜகோபாலிடம் வந்தார் கேபி.

ரஜினியைப் பரிசோதித்த மருத்துவர், “ரத்த அழுத்தம் தாறுமாறா எகிறிக் கிடக்கு. ஓய்வில்லாமல் வேலை செஞ்சா, இவர் மட்டுமில்ல... நான், நீங்க உட்பட ரத்த அழுத்தத்துல சிக்கிட வேண்டியதுதான். அப்புறம் எல்லா நோய்களும் நம்மளத் தேடி வரும். இப்பவே முழிச்சுக்கிறதுதான் இதுக்கு மருந்து. நான் தர்ற மருந்து மட்டும் போதாது. ஒரு வாரம் கட்டாய ஓய்வு தேவை. அதை வீட்ல இருந்தா எடுக்க முடியாது. இப்போ உடம்பும் மனசும் இருக்கிற நிலையில டெலிபோன் மணி அடிச்சா கூட உங்க மன அழுத்தத்தை அதிகமாக்கும். அதனால் இங்கயே ஒரு வாரம் இருங்க... உங்க வீட்டைவிட நல்லா பார்த்துக்கிறோம்” என்றார்.

டாக்டர் ராஜகோபாலின் வெலிங்டன் நர்சிங் ஹோமில் மூன்று நாட்கள் இருந்து, மருந்தும் வேளாவேளைக்கு உணவும் உறக்கமும் என ரஜினி தன் பழைய துடிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் பிரச்சினை. நான்காவது நாள் காலையில் மருத்துவர் வந்தபோது பேக் செய்து ரெடியாக இருந்தார் ரஜினி. “ரொம்ப நல்லாயிட்டேன்... தாங்க்யூ டாக்டர்!” என்று சொல்லிவிட்டு, மருத்துவமனையிலிருந்து சட்டென்று புறப்பட்டுவிட்டார் ரஜினி.

காத்திருந்த படக்குழு

இதில் கேபி-க்கு கொஞ்சம் மன வருத்தம்தான். ஆனால், என்ன செய்ய... மருத்துவமனையில் ரஜினி இருந்தபோது எப்படியோ தேடிப்பிடித்து வந்து, நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள் சில தயாரிப்பாளர்களின் மேனேஜர்கள். ரஜினியை நலம் விசாரிக்க வந்திருக்கிறோம் என்று கூறிவிட்டு, மருத்துவமனையில் ரஜினியிடம், “இன்னைக்கு எங்களோட கால்ஷீட் சார்... இப்படி கூலா வந்துப் படுத்துக் கிடக்கிறீங்க?” என்று வெறுப்பேற்றியது, டாக்டர் ராஜகோபாலின் கவனத்துக்கு வரவேயில்லை.

இன்னும் சிலர் வேறுமாதிரி நடந்துகொண்டார்கள். ஒருவர் கேபி-க்கு போன் செய்து, “சார் நான் 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். என்னோட பணம் அம்பேல்தானா?” என்றார். “சார் பாதிப் படம்தான் முடிஞ்சிருக்கு... இப்படிப்போய் சீக்ரெட்டா ஹாஸ்பிடல் படுத்துக்கிட்டா... வட்டி கட்றது யார் சார்? நீங்க பொறுப்பேத்துக்குறீங்களா?” என்றார் இன்னொருவர். கோபமடைந்த கேபி, “என்னய்யா... கொஞ்சம்கூட மனசாட்சியில்லாம?! சுவர் இருந்தாதான்யா சித்திரம்... ரஜினி உடம்பு சரியானாத்தானே நல்லா நடிச்சுக் கொடுக்க முடியும். அவன் ஸ்பீடுக்கு உன் படத்தையெல்லாம் ஊதித் தள்ளிடுவான்யா. கொஞ்சம் அவகாசம் கொடு. நான் ஜவாப்தாரி” என ஒருவாறு சமாதானப்படுத்தினார்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு முன்பே, கமல் - ரஜினி இணைந்து நடிக்க ஒப்புக்கொண்ட படம் ஐ.வி.சசி இயக்கி வந்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. நெப்டியூன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து அப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தது. கடைசிக்கட்ட படப்பிடிப்பு. ஏகப்பட்ட துணை நடிகர்கள், குதிரைகள் என்று களைகட்டியிருந்தது. கால்ஷீட் கொடுத்தபடி ரஜினி ஸ்டுடியோவுக்கு வந்து மேக்-அப் போட்டுக்கொண்டு தயாரானார். ஷாட்டும் ரெடி. ஆனால், உடைமாற்றிக் கொள்ள ஏனோ ரஜினிக்குப் பிடிக்கவில்லை. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. ரஜினிக்காக அனைவரும் காத்திருந்தார்கள். ரஜினி உடை மாற்றாமல் உட்கார்ந்திருந்தார். இயக்குநர் பதற்றமாகி கேபி-க்கு போன் போட்டார்.

கட்டுப்பட்ட ரஜினி

“சார்... நான் ஐ.வி.சசி பேசறேன். உங்களைத் தொந்தரவு பண்றதுக்காக சாரி. யார் சொல்லியும் ரஜினி கேட்கிறதா இல்ல. ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கார். நீங்கதான் ஸ்டுடியோவுக்கு வந்து ஹெல்ப் பண்ணணும். ப்ளீஸ் சார்” என்றார். உடனே ஸ்டுடியோவுக்கு விரைந்தார் கேபி. 

மேக்-அப் அறையில் ரஜினியைப் பார்த்து, “ஏய்... என்னப்பா நீ! இவ்வளவு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் நடிக்கிறாங்க... செட்டை இன்னைக்குப் பிரிச்சுக் கொடுக்கலேன்னா ஸ்டுடியோவுக்கு சசி வாடகை கொடுக்கணுமப்பா... ஷாட் ரெடியா இருக்கு. முடிச்சுக் கொடுத்துட்டுப்போய் ரெஸ்ட் எடுத்துக்க. வா... வா... கெட் அப்!” என்று கேபி கொஞ்சம் அதட்டியதும், ஆசிரியருக்குக் கட்டுப்படும் பள்ளி மாணவன்போல், ‘கமாருதீன்’ கதாபாத்திரத்துக்கான ஆடையை அணிந்துகொண்டு வந்தார் ரஜினி.

மொத்தப் படக்குழுவும் ரஜினியை மட்டுமல்ல, கேபி-யையும் ஆச்சரியமாகப் பார்த்தது! ஐ.வி.சசி ஓடிவந்து, “சார்... எனக்காக ஒரு மணி நேரம் மட்டும் ஸ்பாட்ல இருந்துட்டுப்போங்க... அதற்குள் கமலோட ரஜினிக்கு வைக்க வேண்டிய காம்பினேஷன் ஷாட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிறேன்” என்றார். ஒரு இயக்குநரின் சிரமம் இன்னொரு இயக்குநருக்குப் புரியும். மதியம் வரை அந்தப் படத்தின் கத்திச் சண்டைக் காட்சியில் ரஜினி அட்டகாசமாக நடித்துக்கொடுக்க... அதை கேபி அருகிலிருந்து ரசித்தார். ஐ.வி.சசியின் முகத்தில் நிம்மதி படர்ந்தபிறகு ரஜினியிடம் வந்த கேபி, “ரஜினி நான் கிளம்புறேன்பா... செகண்ட் சன்டே உன்னோட வீட்டுக்கு வர்றேன். நிறைய பேசணும். கால்ஷீட் அட்ஜஸ்ட்மென்ட்னு சொல்லி ஷூட்டிங் போயிடாதே” சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

ஸ்ரீப்ரியாவின் நல்லெண்ணம்

சொன்னதுபோலவே, இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ரஜினியைப் பார்க்க கேபி கிளம்பிக் கொண்டிருந்தார் கேபி. அப்போது அவரைத் தேடி வந்தார் நடிகை ஸ்ரீப்ரியா. திறமையான நடிகை என்று பெயர் வாங்கியிருந்த ஸ்ரீப்ரியா, தன்னுடன் படங்களில் இணைந்து நடிப்பவர்கள் முதல், படப்பிடிப்பில் பணிபுரியும் கடைசித் தொழிலாளி வரை அனைவரிடமும் அக்கறையாக நடந்துகொள்வதில் தாய்மை உள்ளம் கொண்டவர். ‘ஆடுபுலி ஆட்டம்’ படத்திலிருந்து ரஜினியுடன் நடித்துவந்த அவர், போலித்தனமில்லாமல் அனைவருடனும் பழகும் ரஜினி மீது அக்கறை கொள்ளாமல் இருப்பாரா? ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படப்பிடிப்பு முடிந்திருந்த நேரத்தில்தான் அன்று கேபியைக் காண அவரது அலுவலகத்துக்கு வந்தார்.

“ரஜினியைத் தேடிக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தீர்கள். அதேபோல் உங்களால் மட்டும்தான் அவரது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவரைச் சரி செய்ய முடியும். அதைச் செய்வதற்கு சரியான நேரமும் இதுதான்” என்று சொன்னார் ஸ்ரீப்ரியா. அவர் சொன்னதைக் கேட்டு சட்டென்று கண்கலங்கிப்போனார் கேபி.

இதுபற்றி பின்னாளில் கேபி, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “கதை முடிந்தது என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால், அது தொடர்கதை ஆக வேண்டும் என்று விரும்பும் ஸ்ரீப்ரியா போன்ற நல்ல உள்ளங்களும் ரஜினிக்காக இருக்கிறார்களே என்று அறிந்ததும் என் கண்கள் சட்டென்று உடைந்து வழிந்தன. ஸ்ரீபிரியாவிடம் அந்த நிமிடமே, ‘ஹேட்ஸ்- ஆஃப்’ என்றேன். அவரது நல்ல உள்ளத்துக்குத் தலைவணங்கினேன். மேஜர் சுந்தர்ராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்தேன். ரஜினியை ஹோம் அரெஸ்ட் செய்வதுபோல செய்து, விஜயா நர்சிங் ஹோமில் டாக்டர் செரியனின் அக்கறை மிகுந்த கட்டுப்பாட்டில் 15 நாட்கள் இருக்கும்படி செய்து அல்லும் பகலும் கண்காணித்தோம். அந்த கறுப்புச் சூரியனை மறைத்திருந்த இருண்ட மேகங்கள் அத்தோடு நகர்ந்துபோய்விட்டன. ஆம்! ரஜினிகாந்த் போன்ற அபூர்வமான திறமைசாலிகளை இருபது, இருபத்தைந்து ஆண்டு களுக்கு ஒரு முறைதான் கலையுலகில் காண முடியும். கைநழுவிச் செல்லவிருந்த ஓர் அபூர்வக் கலைஞனை, தமிழ்த் திரையுலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்” என்று மனம்விட்டுப் பகிர்ந்திருக்கிறார்.

கடந்துபோன மேகங்கள்

15 நாட்கள் சிகிச்சையும் ஓய்வும் எடுத்துக்கொண்டு, தனக்கே உரிய வேகத்தையும் சுறுசுறுப்பையும் மீட்டுக் கொண்டவராகப் புத்துணர்ச்சியுடன் வந்தார் ரஜினி. கொடுத்திருந்த கால்ஷீட்டில் நடித்துக்கொடுக்க முடியாமல் போன படங்களின் எஞ்சிய காட்சிகளையெல்லாம் நடித்துக்கொடுத்தார். இதனால், ரஜினி நடித்த படங்கள் வரிசையாக வெளிவரத் தொடங்கின. அவற்றில் முதலாவதாக வந்தது ‘நினைத்தாலே இனிக்கும்’.

அந்தப் படத்தில் ரஜினியை முழுமையான நகைச்சுவை கலந்த மாஸ் நாயகனாக கேபி-யே உருமாற்றியிருந்தார். அதில், “பந்தயத்தில ஜெயிச்சா உனக்கு டொயோட்டா கார்... தோற்றால் நீ உன்னோட சுண்டு விரல வெட்டிக்கொடுத்துட்டுப் போயிடணும்” என்று பூர்ணம் விஸ்வநாதன் பயமுறுத்துவார். கிட்டத்திட்ட திரையுலகில் ரஜினியை உந்தித் தள்ளிய கால்ஷீட் நெருக்கடிகளும் பெரும் புகழின் கணமும் பூர்ணம் விஸ்வநாதனைப் போலத்தான் ரஜினியை மிரட்டின.

“வந்தால் கார்! போனால் ஒரு விரல்தானே!” என்று அந்தக் காட்சியில் ரஜினியை நண்பர்கள் உற்சாகப்படுத்து வார்கள். ரஜினியும் ஒரு வேகத்தில் சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கத் தொடங்குவார். ஒன்பது முறை வெற்றிகரமாகச் சவாலில் வெல்லும் ரஜினி, அதன் பிறகு, அவருடைய சுண்டு விரலைப் பார்ப்பார். சட்டென்று ஒரு முடிவுக்கு வருவார். “சார்... உங்களுக்குக் கார் முக்கியம். எனக்கு விரல் முக்கியம். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போட்டியை இத்தோட முடிச்சுக்கலாமே” என்று புத்திசாலியாக முடிவெடுப்பார். 

தனது தொடக்க கால திரை வாழ்க்கையின் இருண்ட நாட்களை ரஜினி உதறியெழுந்ததும்கூட, இந்தக் காட்சியைப் போல் அவரைச் சட்டென்று கடந்துபோனது.

(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE